About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 13 - பெரியாழ்வார் திருமொழி - 1.1.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 13 - திருக்கோட்டியூர்க் கேசவனான 
கண்ணன்  பிறந்தான்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்

வண்ண மாடங்கள் சூழ்* திருக்கோட்டியூர்*
கண்ணன் கேசவன்* நம்பி பிறந்தினில்*
எண்ணெய் சுண்ணம்* எதிரெதிர் தூவிடக்*
கண்ணன் முற்றம்* கலந்து அளறாயிற்றே| (2)

  • வண்ண மாடங்கள் - அழகிய மாடங்களால்
  • சூழ் - சூழப்பட்ட
  • திருக்கோட்டியூர் - திருக்கோட்டியூரில்
  • கேசவன் - கேசவன் என்ற பெயருடைய
  • நம்பி - கல்யாண குண பரிபூர்ணனான நாயகன்
  • கண்ணன் - ஸ்ரீ கிருஷ்ணன்
  • இன் இல் - நந்தகோபனுடைய இனிய திருமாளிகையில்
  • பிறந்து - அவதரித்து அதனால் ஆய்ப்பாடியில் உள்ளவர்கள்
  • எண்ணெய் - எண்ணெயும்
  • சுண்ணம் - மஞ்சள் பொடியையும்
  • எதிரெதிர் - ஒருவருக்கொருவர்
  • தூவிட - எதிர்த்துத் தூவ
  • கண் நல் முற்றம் - விசாலமான விக்ஷணாமான முற்றம்
  • கலந்து - எண்ணெயும் மஞ்சள் பொடியையும் சேர்த்து

திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், திருவாய்பாடியில் நந்தகோபருடைய அழகிய திருமாளிகையில் கேசவன் என்கிற திருநாமம் கொண்ட, ஒளி நிறைந்த நீண்ட கண்களை உடையவனும், கேசி என்னும் அசுரனைக் கொன்றவனுமான, பேரெழில் மிக்கத் தலைவன் கண்ணனாக திருவவதரித்த போது கோகுலவாசிகளிடம் இருந்த அளவில்லா உத்ஸாகத்தை வர்ணிக்கிறார் ஆழ்வார். அவர்கள் எண்ணையையும், மஞ்சள் பொடியையும் ஒருவர் மேல் ஒருவர் தூவி சந்தோஷப்பட்டார்களாம். இதனால் ஸ்ரீ நந்தகோபருடைய திருமாளிகையின் முற்றமே சேறாகி காட்சியளித்ததாம். (குறிப்பு: கண்ணபிரான் வடமதுரையில் கம்ஸனுடைய சிறைக் கூடத்திலே பிறந்திருக்க, நந்தகோபருடைய திருமாளிகையிற் பிறந்ததாகச் சொன்னது - கம்ஸனுக்குத் தப்பி கோகுலத்தில் பிரவேசித்த பின்பு தான் இவன் பிறந்ததாக ஆழ்வார் நினைத்திருக்கிறார் என்று வ்யாக்யானம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment