About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

108 திவ்ய தேசங்கள் - 002 - திருக்கோழி 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

002. திருக்கோழி 
திரு உறையூர், நிசுளாபுரி, உறந்தை - திருச்சி
இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம் 

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் – 2 பாசுரங்கள்

1. குலசேகராழ்வார் - 1 பாசுரம் 
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்) 

  • திவ்ய ப்ரபந்தம் - 667 - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம் 

-----------
2. திருமங்கையாழ்வார் - 1 பாசுரம்  
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1762 - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
-----------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார் 
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ*

அந்தாதி
சிறப்புடைய செல்வத் திருப்பதிகள் போலே
மறப்புடைய நாயேன் மனத்துள் உறப் போந்து
அறம்தையா நின்ற அரங்கா திரு வாழ்
உறந்தையாய் இங்கு உறைந்தது ஒது

  • மறப்பு உடைய - மறதியை உடைய
  • நாயேன் - நாய் போலக் கடைப்பட்டவனான எனது
  • மனத்துள் - மனத்திலே
  • உறபோந்து - நன்றாக எழுந்தருளி இருந்து
  • அறம் தையாநின்ற - தருமத்தைப் பதியுமாறு செய்கின்ற
  • அரங்கா - திருவரங்கநாதனே!
  • திரு வாழ் உறந்தையாய் - இலக்குமி வாழ்கின்ற திருவுறையூர் என்னும் திவ்ய ஸ்தலத்தில் எழுந்தருளி இருப்பவனே!
  • சிறப்பு உடைய செல்வம் திருப்பதிகள் போல - பெருமை பெற்ற செல்வம் நிறைந்த திவ்ய ஷேத்திரங்கள் போல
  • இங்கு - இந்த என் மனத்தில்
  • உறைந்தது - நித்தியவாசம் செய்வதற்குக் காரணத்தை
  • ஓது - நீ கூறியருள்வாய்

உறையூர் என்னும் திருப்பதியில் உறைந்திருக்கும் அரங்கனாகிய பெருமானே, சிறந்த திவ்ய தேசங்களில் கோயில் கொண்டிருப்பது போல், மிகத் தாழ்ந்தவனான என் மனத்திலும் புகுந்து அகலாமல் உறைந்திருப்பது எவ்வாறு? சொல்வாயக!
-----------
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 2

குலசேகராழ்வார்

001. திவ்ய ப்ரபந்தம் - 667 - அடியார்க்கு அடியார் ஆவர்
பெருமாள் திருமொழி - இரண்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
அல்லி மா மலர் மங்கை நாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம்* 
எல்லை இல் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்* 
கொல்லி காவலன் கூடல் நாயகன்* கோழிக் கோன் குலசேகரன்*
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர்* 
தொண்டர் தொண்டர்கள் ஆவரே| (2)

திருமங்கை ஆழ்வார் 

002. திவ்ய ப்ரபந்தம் - 1762 - கடல் வண்ணர் கட்டழகுடையவர்
பெரிய திருமொழி - ஒண்பதாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்  
கோழியும் கூடலும் கோயில் கொண்ட* கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன*
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்* 
பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்**
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்* 
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய*
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி* அச்சோ ஒருவர் அழகிய வா|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment