About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 14 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 12 - திருப்பல்லாண்டு 12

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 12 - சார்ங்கபாணியைப் பாடுபவர் 
மறுமையில் முக்தி பெறுவர் 
திருப்பல்லாண்டு – பன்னினைரெண்டாம் பாசுரம்

பல்லாண்டென்று பவித்திரனைப்* 
பரமேட்டியைச்* 
சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை* 
வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார்* 
நமோ நாராயணாயவென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச்* 
சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே| (2)


இறுதியில் இந்த ப்ரபந்தத்தைக் கற்றவர்களுக்குப் பலம் சொல்லுவதாகக்கொண்டு, பொங்கும் பரிவுடன் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகிறார். எல்லோரும் எம்பெருமானிடத்தில் ஈடுபட்டு, எல்லோரும் காலம் உள்ளவரை எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்யும் பாக்யத்தைப் பெறுவர்கள் என்று அருளிச்செய்து ப்ரபந்தத்தை முடிக்கிறார்.

  • பல்லாண்டு - நித்தியமாய் மங்களம்; 
  • என்று - உண்டாக வேண்டும் என்று; 
  • பவித்திரனை - இயற்கையாகவே பரிசுத்தனும் 
  • பர மேட்டியை - பரமபத வாசனும் 
  • சார்ங்கம் என்னும் வில் - ஸ்ரீசார்ங்கமென்கிற தநுஸ்ஸை
  • ஆண்டான் தன்னை - அடக்கி ஆள்பவனுமான எம்பெருமானை
  • வில்லிபுத்தூர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் 
  • விட்டு சித்தன் - பிறந்த பெரியாழ்வார் 
  • விரும்பிய சொல் - விருப்பத்துடன் சொன்ன சொல்லாகிய இப்பிரபந்தத்தை 
  • நல் ஆண்டு - நமக்குக் கிடைத்தது; 
  • என்று - நம் நல்ல காலம் என்று; 
  • நவின்று - இடைவிடாமல்; 
  • உரைப்பார் - சொல்லுபவர்களுக்கு;
  • நமோ நாராயணாய என்று - திருமந்திரத்தை அனுசந்தித்து;
  • பல்லாண்டும் - கணக்கற்ற பல காலம் 
  • பரமாத்மனை - ஸ்ரீ மந்நாராயணனை 
  • சூழ்ந்து இருந்து - சுற்றும் சூழ்ந்து கொண்டு 
  • ஏத்துவர் பல்லாண்டு - மங்களாசாஸநம் பண்ணப் பெறுவார்கள்

பரிசுத்தனான, மேலான பரமபதத்தில் எழுந்தருளி இருப்பவனான, சார்ங்கம் என்ற வில்லை ஆள்பவனான எம்பெருமானை ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தன் என்ற திருநாமமுடைய பெரியாழ்வார் “எப்பொழுதும் எம்பெருமானுக்கு மங்களங்கள் நிறைந்து இருக்க வேண்டும்” என்று விருப்பத்துடன் அருளிச் செய்த இந்த ப்ரபந்தத்தை பல்லாண்டு பாடுவதற்கான நற்காலம் அமைந்ததே என்று தொடர்ந்து இதைச் சொல்லுபவர்கள் அஷ்டாக்ஷரத்தை அனுஸந்தித்து பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனைச் சுற்றிச் சுற்றி வந்து, காலம் உள்ளவரை, பல்லாண்டு பாடுவார்கள்.

அடிவரவு: பல் அடி வாழ் ஏடு அண்டம் எந்தை தீ நெய் உடுத்து எந்நாள் அல்வழக்கு பல்லாண்டு – வண்ணம்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment