||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
003 தேஹத்தை விட்டேனோ ருஷி பத்நியைப் போலே|
கிருஷ்ணன் பசுக்களையும் கன்றுகளையும் மேய்ப்பதில் விருப்பம் கொண்டவன். ஆயச் சிறுவர்களுடன் அவனும் செல்வான். கிருஷ்ணன், பலராமர் மற்றும் பல யாதவ குழந்தைகள் நித்தியபடி சாப்பாடு கட்டிக் கொண்டு, காட்டிற்கு தங்கள் மாடுகளை கூட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு போவது வழக்கம். அப்படி ஒரு நாள் போகும் போது சாப்பாடு எடுத்துக் கொள்ளாமல் சென்று விட்டனர். அனைவர்க்கும் அன்று மத்தியானப் பொழுதில் நல்ல பசி. சுற்றும் முற்றும் பார்த்தான் கண்ணன். பக்கத்தில் ஒரு இடத்தில் ரிஷிகள் எல்லோருமாக சேர்ந்து ஒரு யாகம் பண்ணுவதை கேள்விபட்டான்.
அங்கு போனால் நிறைய உணவு கிடைக்கும் என்றெண்ணி மற்ற பிள்ளைகளிடத்தில், "இங்கு யாகம் செய்யும் அந்தணர்களிடம் சென்று, நான் கேட்டேன்னு சொல்லி உணவு வாங்கி கொண்டு வாங்க" என்று சொல்லி அனுப்பினார். அவர்களும் சென்று ரிஷிகளிடம், "கண்ணன் அருகில் தான் இருக்கிறான். அவனுக்கு பசிக்கிறது உணவு வேண்டும்" என்று கேட்டனர். ஆனால் யாதவர்கள் சென்று பிராமணர்களை கேட்ட போது, அமைதியாக அவர்களை புறக்கணித்தனர். அவர்கள் கம்சனுக்குப் பயந்து உணவு கொடுக்கவில்லை யாதவர்கள் மிகவும் சோகத்தோடு கிருஷ்ணனிடம் திரும்பி வந்து என்ன நடந்தது என்று கூறினர். யாதவர்கள் சொன்னதை கேட்டு, பின் பிராமணர்களின் மனைவிகளை பற்றி யாதவர்களிடம் கூறி, ஊருக்குள் சென்று முனிபத்தினிகளிடம் சென்று "கிருஷ்ணனும் பலராமனும் மிகவும் பசியோடு இருக்கிறார்கள், உணவு கேட்கிறார்கள் என்று சொல்லுங்கள்" என்றார்.
அப்பெண்கள் யாதவர்கள் சொன்னதை கேட்டதும், கிருஷ்ணனையும் பலராமனையும் பார்க்க மிகவும் ஆவல் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் பலவகையான உணவுகளை எடுத்துக் கொண்டு அவர்களிடம் சென்றனர். அவர்கள் கொண்டு வந்ததை ஏற்றுக் கொண்டு உணவருந்தினார்கள். தங்களின் கணவர்களின் தவறை மன்னிக்கும் படியும் அப்பெண்கள் கேட்டுக் கொண்டனர். "சரி மன்னித்து விட்டேன், போய் வாருங்கள். அவரவர் கணவன்மார்களின் கடமையில் உதவியாக இருங்கள்" என்று கிருஷ்ணன் கூறினார். "அவர்கள் பண்ணின தவறுக்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விட்டோம். ஆனால் அவர்களுக்கு இது புரிய போவது இல்லை. ஆசிரமத்துக்கு திரும்ப போனால் எங்களை கோபித்துக் கொள்வார்களே" என்று அப்பெண்கள் கூறினர். "அவர்கள் அபச்சாரம் பண்ணிணதோடு இல்லாமல் உங்களையும் கோபித்துக் கொள்வார்களோ?
சரி உங்களை கோபித்துக் கொள்ளாமல் இருக்க வரம் தருகிறேன். அவர்களுக்கு இது மறந்து போய்விடும். நீங்கள் போய்ட்டு வாருங்கள்" என்றார் கிருஷ்ணன். சரி என்று சொல்லி அனைவரும் கண்ணனைப் பிரிய மனமின்றியும் தங்கள் கணவருக்குப் பயந்தும் விருப்பமின்றிச் சென்றனர். புறப்பட்டு போனார்கள் ஒருத்தியை தவிர. அவள் மட்டும் கண்ணன் திருவடிகளை பற்றி, "உனக்கு வெறும் இந்த அன்னத்தை மட்டும் சமர்ப்பிப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. என்னையே நான் சமர்ப்பிப்பதற்காக வந்தேன். இனி உன் திருவடியை விட்டு போவதற்கு இயலாது. இந்த இல்வாழ்க்கை எனக்கு வேண்டாம். உன்னுடைய மீளா இன்பத்தை எனக்கு குடு" என்று அப்பெண் ப்ரார்த்திக்க ஒரே நிமிஷத்தில் அவளை கண்ணன் அங்கீகாரம் பண்ணினார்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “இந்த அளவுக்கு பாவஸுத்தி என்னிடம் இல்லையே.! அந்த பெண் கண்ணனை விட்டு போக மாட்டேன் என்று சொன்னாள். அதை போல நான் சொல்லலையே! உயிரை பெரியதாக மதிக்காமல், தேகத்தை மதிக்காமல் கண்ணன் திருவடியே முக்கியம் என்று, தேக யாத்திரையை விட ஆத்ம யாத்திரையில் ஆசையோடு இருந்தாளே. அவளை போல நான் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment