About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - இரண்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

002 அஹமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே|

அஹம் என்றால் வீடு என்று ஒரு பொருள், அகங்காரம் என்று ஒரு பொருள்.

விதுரர் திருதராஷ்ட்ரனின் சகோதரர். மற்றும் ஆலோசகராகவும் இருந்தார். மிகவும் விவேகம் உள்ளவர். கிருஷ்ணனிடம் மிகவும் பக்தி கொண்டிருந்தார். 


பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் முடிந்த பின், பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்தை திரும்ப கேட்ட போது, துரியோதனன் அதை கொடுக்க மறுத்துவிட்டார். போரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பாண்டவர்களின் தூதுவராக, கௌரவர்களிடம் பேச அவர்களின் தலைநகரான அஸ்தினாபுரத்திற்கு துவாரகையி
ல் ருந்து தன் தேரில் வந்தார் கிருஷ்ணர்.  

அஸ்தினாபுரத்திற்கு வந்த கிருஷ்ணனுக்கு துரியோதனன் மற்றும் அவனுடைய உறவினர்கள் இல்லத்தில் தங்க விருப்பம் இல்லை. சபை மறுநாள்தான் கூடும். அப்போதுதான் பேச்சை ஆரம்பிக்க முடியும். ஆகவே, அன்றிரவை யார் மாளிகையிலாவது கழிக்க வேண்டும். அதனால் எங்கு தங்குவது என்று பார்த்துக் கொண்டே சென்றார். அவருடனேயே பலரும் விதுரர் உட்பட நடந்து வந்து கொண்டே இருந்தனர். அப்போது கண்ணனின் கண்ணில் தென்பட்ட ஒரு மாளிகையைப் பார்த்து கண்ணன்," ஆஹா! இவ்வளவு பெரிதாக உள்ள மாளிகை யாருடையது?" என்கிறார்.

"கண்ணா, இது என் மாளிகை. நீ இங்கேயே தங்கலாம்" எங்கிறார் திருதிராஷ்டிரர்

கண்ணன் மறுத்து, அடுத்து ஒரு மாளிகையைப் பார்த்து' இது யார் மாளிகை?" என வினவ, பீஷ்மர், "கண்ணா, இது என் மாளிகை. நீ இங்கேயே தங்கலாம்" என்கிறார்

கண்ணன் அதையும் மறுத்து, மேலே செல்ல, அடுத்து ஒரு மாளிகையில் ருந்து சங்கீத ஒலி, நடன மாதுக்களின் நடன ஓசை கேட்க, "இது யார் மாளிகை?" என் கிறார்

"கண்ணா, இது என் மாளிகை. உல்லாசமானது. நீ இங்கேயே தங்கலாம்" என்கிறான் துரியோதனன்.

கண்ணன் அதையும் நாசுக்காக மறுத்து மேலே நடக்கத் தொடங்கினார். இப்படி ஒவ்வொரு வீட்டையும் காட்டி இது யாருடையது என்று கிருஷ்ணன் விசாரித்துக் கொண்டே வர, கூட இருந்தவர்கள் ஒவ்வொரு பெயராக சொல்லி கொண்டே வந்தனர். அப்பொழுது விதுரரின் குடில் வந்தது. "மனதிற்கு சாந்தியை ஏற்படுத்தும் இக்குடில் யாருடையது?" என்று கிருஷ்ணன் கேட்க, விதுரர் சட்டென்று "இது தேவரீர் திருமாளிகை, உங்கள் விருப்பம் போல தங்கலாம்" என்றார். 

கிருஷ்ணன் ஆச்சர்யப்பட்டு “இந்த ஊரில் எனக்கு ஒரு மாளிகை இருப்பது எனக்கு தெரியாதே! நாம் எதையும் நம் மாளிகையாக கொண்டதில்லையே அடியார்களின் நெஞ்சகத்தை தான் என் மாளிகையாக இதுவரை கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். “அதை தான் நானும் சொன்னேன் கண்ணா. எப்படி பக்தர்களின் இருதயத்தை உனக்கு மாளிகையாக வைத்துக் கொண்டு இருக்கின்றாயோ, அதற்குள் ஒரு இடமாக தான் இதையும் நீ கொள்ள வேண்டும். என் அகம் தான் இந்த அகம். என் அகத்தினுள் நீ ஏற்கனவே இருக்கின்றாய். இது என்னுடையதும் இல்லை வேறோருவருடையதும் இல்லை உன்னுடையது” என்றார் விதுரர். தன்னுடைய அஹத்தை கண்ணனுடையது என்று சொன்னதால் அஹம் ஒழித்து விட்டார் என்று ஒரு பொருள் படும். தன்னுடையது என்ற அகங்காரம் ஒழிந்தால் தானே அப்படி பண்ண இயலும். அதனால் அகங்காரத்தையும் ஒழித்து விட்டார் என்றும் பொருள் படும். 

உலக வழக்கப்படி, குடியிருப்பவர் தான் வாடகைக் கொடுக்க வேண்டும். இதயம் என்ற வீட்டினுள் இறைவனை குடிவைத்தவன், குடியிருப்பவனுக்கு பூவோ, பழமோ கொடுத்தால் போதும். அவர்கள் மனதில் குடியேறி விடுவேன்' என்றவர் கிருஷ்ணர்

அதனால் தான் விதுரர் உன் அகம் என் அகம் என்றார் (அகம் என்றால் வீடு)

வடமொழியில் அகம் எனில் அகங்காரம். இறைவன் மனதில் குடியேறின் இந்த அகம் ஒழிந்துவிடும்.

கௌரவர்களின் அரண்மனையை விட மிகச் சிறிய இடமாக இருந்தாலும் விதுரரின் அன்பினை கண்டு அவர் விதுரர் இல்லத்திலேயே தங்க விரும்பினர். கண்ணன் தன்னுடைய இல்லத்திற்கு வந்ததை எண்ணி விதுரர் அளவு கடந்த சந்தோஷத்தில் ஆழ்ந்தார். உள்ளே சென்று ஒரு மணையை போட்டு அதை துடைத்து துடைத்து, “கல் குத்தி விடுமோ! ஊசி ஏதாவது இருந்து குத்தி விடுமோ!” என்று பார்த்து பார்த்து அத்தனை அன்போடு பார்த்து அமர செய்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “விதுரரை போல அப்படி ஏதாவது நான் அஹம் ஒழித்தேனா? இது உன் வீடுன்னு நான் சொல்லலையே! விதுரரை போல பார்த்து பார்த்து நான் எதுவும் பண்ணலையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment