||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ண சொரூபமாகும் என்கிறது. பாகவததத்தின் முதல் மற்றும் இரண்டாவது காண்டம் ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களாகவும், மூன்றாவது, நான்காவது காண்டங்கள் அவரது தொடையாகவும், ஐந்தாவது காண்டம் அவரது தொப்புள், ஆறாவது காண்டம் அவரது மார்பு, ஏழாம், எட்டாம் காண்டங்கள் அவரது கைகள், ஒன்பதாவது காண்டம் அவரது தொண்டை, பத்தாவது காண்டம், தசம ஸ்கந்தம் கிருஷ்ணனுடைய பிறப்பு, வளர்ப்பு, அவருடைய லீலைகள் அனைத்துமே பேசி பாகவதத்தின் சிரசாக விளங்குகிறது. பதினோராம் காண்டம் யாதவ குலத்தின் அழிவு பற்றி சொல்கிறது, அது அவரது நெற்றி, பன்னிரெண்டாம் காண்டம் கிருஷ்ணன் விஷ்ணு லோகம் செல்லுதல் பற்றிய விவரங்கள், அவரது தலையாகவும் உள்ளன என்கிறது. அதற்கும் அடுத்துள்ள ராஜ வம்சக் கதைகள் பாகவதத்தின் புஜப் பகுதி. அஜாமிளனின் கதை, நாமத்தினுடைய மகிமையைச் சொல்வதால் பாகவதத்தில் இதயமாக ஒளிர்கிறது. இப்படி பாகவத புருஷனை கற்பனை செய்து கொண்டே வந்தோமானால் ஏகாதச ஸ்கந்தம் என்கிற பதினோராவது அத்யாயம், ரத்ன கிரீடமாக பாகவதத்தை தகதகக்க வைக்கிறது. ஏனெனில் அத்தனையும் உபதேச ரத்னங்கள்.
சுகப் பிரும்மரிஷி, ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்துக்கு அவன் மோட்சம் பெறுவதற்காக அவன் உயிரோடு இருக்கும் ஏழு நாட்களுக்குக் கூறினார். பாகவதக் கதைகளை கவனமாகக் கேட்ட பரீட்சித்து பரமபதம் அடைந்தான் என்கிறது புராணம். இந்த நிகழ்வின் காரணமாக ஸ்ரீமத் பாகவதம் சப்தாகமாக, அதாவது ஏழு நாட்களுக்கு உபன்யாசமாகக் கூறப்படும் வழக்கம் உண்டானது. இதுவே சப்தாகம்/சப்தாஹம் எனப்பட்டது. இப்படிப்பட்ட சப்தாகத்தில் கலந்துகொண்டு கேட்பது மிகவும் புண்ணியம் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாகவத ஸ்ரவணத்தாலே ஸ்ரீ மகாவிஷ்ணு நம் மனத்தில் ஆவிர்பவிக்கிறார். ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கும், பாகவதத்திற்கும், வாசுதேவரின் மந்திரத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது.
பாகவதம் என்கிற அம்ருதத்தை பருகியவர்களுக்கு மோக்ஷம் கிடைத்து விடுகிறது. நம் ஆச்சார்யனை சேவித்து விட்டு தான் எந்த காரியத்தையும் தொடங்க வேண்டும். பாகவத பாராயணமும் அவ்வணமே செய்ய வேண்டும். பாகவதத்தை கேட்ட கணத்தில் பகவான் இதயத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். பிரியமான சிஷ்யரிடம் ரொம்ப கஷ்டமான ரகசியத்தை புரிய வைத்து அனுக்கிரகித்து விடுவார் குரு. கண்ணனேதான் பாகவதத்துக்கு செய்தி. கண்ணனுடைய அனைத்து அவதாரங்கள், அவனைப் பற்றிய தர்மம், நாம் கடைபிடிக்க வேண்டிய பக்தி, மோக்ஷத்துக்கு வேண்டிய வழிமுறைகள், இவை அனைத்தும் பாகவத புராணத்தில் உள்ளது. ஆதிசங்கரர் எழுதிய கோவிந்தாஷ்டகத்தில் பாகவதம் பற்றிய குறிப்பு வருகிறது. உயிர்களாகிய ஜீவாத்மா பகவானாகிய பரமாத்மாவுடன் இணைய அதுவே வழிவகுக்கும்’ என்று சூரிய பகவான் உபதேசித்ததாக பாகவத மஹாத்மியம் கூறுகிறது.
ஏக ஸ்லோக பாகவதம்!
ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம்
கோபி க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்,
கோவர்தன உத்தாரணம்
கம்சச் சேதன கௌரவாதி ஹரணம்
குந்தீ சுதா பாலனம்
சைதத் பாகவதம் புராண கதிதம்
க்ருஷ்ண லீலாம்ருதம்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment