||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்தின் ருசியில் தெரியும் வரும். அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால் அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும். ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம், சுக பிரம்ம ரிஷியின் (’சுக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால், மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது என்பது பொருள். வியாசர் தன் மகன் சுகருக்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார். ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும், 36,000 பாடல்களும் கொண்டது. இதில் 25 கீதைகளும், பல அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்துள்ளன பாடல்கள். இதில் ஒவ்வொரு அத்யாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் உள்ளது. ஸ்ரீமத் பாகவதம் மோக்ஷத்தை மட்டுமல்ல கேட்ட மாத்திரத்தில் நான்கு புருஷார்த்தங்களையுமே அளிக்க வல்லது. வேத அத்யயனம் செய்வது போல் சந்தை திருவையாக அதாவது ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ஒரு முறை சொல்லி மூன்று முறை வாங்கிச் சொல்லி அர்த்தத்தோடு உள்வாங்கிக் கொண்டார் சுகர். பின்னர் சுகமுனிவர் பரீட்சித்து மன்னனுக்குச் சொன்னார்.
ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடக்கும் இடத்திற்குச் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்தால் ஸம்ஸ்க்ருதம் புரியா விட்டாலும், அர்த்தம் தெரியாவிட்டாலும் பாராயண ஒலி கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வளவு கர்ம வாசனைகளோடு ஸம்சாரத்தில் உழன்றுகொண்டிருக்கும் நமக்கே பாகவத சப்தம் மகிழ்ச்சி தருகிறதென்றால், ப்ரும்ம ஸ்வரூபாக விளங்கும் ஸ்ரீ சுகருக்கு எப்படி இருந்திருக்கும்? பாகவதம் தந்த பேரானந்ததில் திளைத்துக் கொண்டிருந்த சுகர் அதை யாருக்காவது சொல்ல வேண்டுமே என்று தவித்தார். ஏழு நாட்களில் மரணம் என்ற சாபத்தோடு தனக்கு யாராவது உய்யும் வழி காட்ட மாட்டார்களா என்று வருந்திக் கொண்டிருந்த பரீக்ஷித்தும் சுகரும் கங்கைக் கரையில் ஒன்று சேர்ந்தனர்.
பாகவதத்தில் கூறப்பட்டுள்ளவை:
சிருஷ்டியின் தொடக்கம், அண்டச்சராசரங்களும், பஞ்ச பூதங்களும், உலகம் தோன்றியதும் அனைத்தும் பாகவதத்தில் உள்ளது. இதில் சொல்லப்படாத வேத வேதாந்த கருத்துக்களே இல்லை. பகவத் அவதாரங்கள், பகவானின் லீலைகள், புராண கதைகள் அனைத்தும் நடந்ததை நடந்த படி சொல்லி நமக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாக சனாதன தர்மத்தையும், பக்தியையும், பகவானை அடையும் மார்கத்தையும் போதிக்கிறது. பதினெட்டாயிரம் ஸ்லோகங்களில் சொல்லப்பட்டு இருப்பவை ஏராளம். அந்த ரசானுபாவத்தில் மூழ்கி முழு பாகவதத்தையும் படித்தும் கேட்டும் அனுபவிக்க ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருள் புரிவான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment