||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
001. திருவரங்கம்
ஸ்ரீரங்கம் - திருச்சி
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: ஸ்ரீ ரங்கநாதர்
- பெருமாள் உற்சவர்: பெரிய பெருமாள், நம்பெருமாள், அழகிய மணவாளன்
- தாயார் மூலவர்: ஸ்ரீரங்க நாச்சியார்
- தாயார் உற்சவர்: பெரிய பிராட்டியார்
- திருமுக மண்டலம் திசை: தெற்கு
- திருக்கோலம்: புஜங்க சயனம்
- புஷ்கரிணி: சந்திர
- தீர்த்தம்: வில்வ, சம்பு, பகுள, பலாச, அசுவ, ஆம்ர, கதம்ப, புன்னாக, காவேரி, வேதச் சுரங்கம், கொள்ளிடம்
- விமானம்: ப்ரணவாக்ருதி
- ஸ்தல விருக்ஷம்: புன்னை
- ப்ரத்யக்ஷம்: தர்ம வர்மா, ரவிதர்மன், காவேரி, விபீஷணன், சந்திரன்
- ஆகமம்: பாஞ்சராத்ரம்
- ஸம்ப்ரதாயம்: தென் கலை
- மங்களாஸாஸநம்: 11 ஆழ்வார்கள்
- பாசுரங்கள்: 249
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
தானாகவே உண்டான ஸ்தலம். (ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரம்). பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்தலம். பட்டர், வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை உலகாசிரியன், பெரிய நம்பி இவர்களின் அவதார ஸ்தலம். ஸ்வாமி தேசிகனுக்குப் பெரிய பெருமாள் "கவிதார்க்சிக ஸிம்ஹம்" என்றும், தாயார் "ஸர்வந்தந்த்ர ஸ்வதந்த்ரர்" என்றும் விருதுகள் வழங்கிய ஸ்தலம். இப்பெருமானின் பாதுகைகள் மீது தான் "பாதுகா ஸஹஸ்ரம்" என்ற உயர்ந்த காவியத்தை ஸ்ரீ தேசிகன் இயற்றினார். கம்ப ராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடம். திருமங்கை ஆழ்வார் மதில் கட்டி கைங்கர்யம் செய்த ஸ்தலம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் நந்தவனம் அமைத்து திருவரங்கனை அழகு செய்த ஸ்தலம். நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை நடைபெறும் ஸ்தலம்.
108 திவ்ய தேசங்களிலே முதன்மையானதாக "கோயில்" என்ற சிறப்பு பெயருடனும் விளங்குகிறது. காவிரி கொள்ளிட நதிகளின் நடுவே அமைந்துள்ளது. நம்பெருமாளின் திவ்ய ஆக்ஞையின்படி ஸ்ரீ மணவாள மாமுனிகள் இத்தலத்தில் திருவாய்மொழி காலக்ஷேபம் ஸாதித்தார். நம்பெருமாள், பகவத் விஷய சாற்றுமுறை அன்று குழந்தையாக வந்து நின்று "ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியனை அருளிச் செய்து மணவாள மாமுனிக்கு பஹுமானமாக அளித்தார் என்பது தனிச்சிறப்பு.
இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித் தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங் கரையில் வைத்து ஓய்வெடுத்து விட்டு திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை. அது கண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளி கொண்டு அருள்வதாக உறுதியளித்தார். இஷ்வாகு மன்னராலே சரயூ நதியில் தென்கரையில் அயோத்தியில் ஸ்தாபிக்கப்பட்டு, ஸ்ரீராமர் வரை அனைத்து மன்னர்களாலும் ஆராதிக்கப்பட்டார் அக்கோயில் காலப் போக்கில் வெள்ளப் பெருக்கில் மண்ணில் மறைந்து போக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment