About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

108 திவ்ய தேசங்கள் - அறிமுகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

108 திவ்யதேசங்களில் 96 வகையான விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்ட இவ்வனைத்து விமானங்களும் முக்கியமானவைகள் தான் என்றாலும் கீழ்க்கண்டவைகளை மிக முக்கியமானவைகள் என்று சொல்லலாம். 

1. ப்ரண வாக்குருதி விமானம், 2. விமலாக்குருதி விமானம், 3. சுத்தஸ்த்வ விமானம், 4. தாரக விமானம், 5. சுகநாக்ருதி விமானம், 6. வைதிக விமானம், 7. உத்பலா விமானம், 8. சௌந்தர்ய விமானம், 9. புஷ்கலாவர்த்த விமானம் 10. வேதசக்ர விமானம், 11. சஞ்சீவி விக்ரஹ விமானம், 12. அஷ்டாங்க விமானம், 13. புண்யகோடி விமானம், 14. ஸ்ரீகர விமானம், 15. ரம்ய விமானம்,  16. முகுந்த விமானம், 17. விஜய கோடி விமானம், 18. சிம்மாக்கர விமானம், 19. தப்த காஞ்சன விமானம், 20. ஹேமகூட விமானம் 

என்பனவாகும். இதில் அஷ்டாங்க விமானம் என்பது பரமபதத்தில் அமைந்துள்ள விமானத்தின் அமைப்பேயாகும் என்பதும், ப்ராண வாக்ருதி விமானம் என்பது தேவர்கள் அமைத்து தொழும் தலங்களில் உள்ள விமானத்தின் அமைப்பு எனவும், ஆகமம் கூறிப்போகிறது. இந்த விமானங்களைச் சேவித்த மாத்திரத்திலேயே பாவ நாசம் உண்டாகிற தென்பதும், இதன் அடிப்படையிலேயே கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்னும் பழமொழி உண்டாயிற்றெனவும் ஆன்றோர் மொழிவர். 

இந்த 108 திவ்ய தேசங்களில் இரண்டு ஸ்தலங்கள் இந்நிலவுலகில் பார்க்க முடியாதவைகளாகும். ஒன்று பரம பதம். மற்றொன்று பாற்கடல். முற்காலத்தில் புண்ணிய ஸ்தலங்களை மனிதர்கள் தாங்கள் நினைத்த இடத்தில் ஏற்படுத்தினார்களில்லை. பூமியின் உள்ளே மனித ஜீவாதார சக்திக்கு தேவையான ஒரு நரம்பு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் குறுக்கே ஓடி இருக்குமாம். அதற்குத் தான் தரித்ரீசாரம் எனப்பெயர். அது நியூட்டன் கண்டுபிடித்த புவியீர்ப்பு சக்தியின் பெரும் பகுதியாகும். இத்தகைய இடம் நம் இந்தியாவில் சிறப்பாகத் தென்பகுதியில் அதிகமாக இருப்பதால்தான் இந்தியாவையே உண்மையான ப்ருத்வி (பூமி) என மகாகவி காளிதாசனும் கூறினார். ஆகவேதான் அந்த நரம்பு இழையோடும் தென்னாட்டின் பகுதியில் ஆலயங்கள் பல தோன்றின. 

இந்த 108 திவ்ய தேசங்கள் எங்கெங்கு உள்ளன. இதோ படம் பிடித்துக் காட்டுகிறது ஒரு பழம் பாடல். 

  ஈரிருபதாஞ் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
  ஓர்பதின்மூன்றாம் மலைநாடு ஓரிரண்டாம் - சீர்நடுநாடு
  ஆறோடீரெட்டுத் தொண்டை அவ்வட
  நாடாறிரண்டு கூறும் திருநாடு ஒன்றாக் கொள். 

  அதாவது, 

  •   சோழநாட்டில்  - 40 திவ்ய தேசங்கள் 
  •   பாண்டி நாட்டில் - 18 திவ்ய தேசங்கள் 
  •   மலை நாட்டில்  - 13 திவ்ய தேசங்கள் 
  •   நடு நாட்டில்       - 2 திவ்ய தேசங்கள் 
  •   தொண்டை நாட்டில் - 22 திவ்ய தேசங்கள் 
  •   வட நாட்டில்  - 11 திவ்ய தேசங்கள் 
  •   திருநாட்டில்  - 2 திவ்ய தேசங்கள்
                                                               ----- 
       108 
                       ----- 

இந்த 108 திவ்ய தேசங்களில் 106 னைச் சேவித்தவர்களை அவர்கள் இப்பூவுலகில் வாழ வேண்டிய காலக்கட்டாயம் முடிவுற்றதும் எம்பெருமானே இரண்டு திவ்யதேசங்கட்கும் அழைத்துச் சென்று காட்சி தருகிறார் என்பது தலையாய வைணவக் கொள்கையாகும். 

இந்த 108 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் திருமால் மூன்று நிலைகளில் பக்தர்கட்கு காட்சியளிக்கிறார். அவைகள் நின்ற திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம், சயன (கிடந்த) திருக்கோலம். 

அதாவது, பரம்பொருள் ஸ்ரீவிஷ்ணு அமர்ந்த திருக்கோலத்தில் சகல உலகங்களையும், அவ்வுலக இயக்கக் காரணிகளான தேவர்களையும், அதிதேவதைகளையும் படைக்க எண்ணிய மாத்திரத்தில் எழுந்து நின்றார். அவ்வளவிலேயே அனைத்தும் படைக்கப்பட்டு விட்டன. இவ்வியக்கம் தொடர்ந்து முறைவழுவாது செயல்பட அறிதுயில் திருக்கோலத்தில் சயனித்து அனைத்தையும் நிர்வகித்துக்கொண்டே அறிதுயிலில் உள்ளார். 

திருமாலின் 5 வகையான பிரதிஷ்டைகளைப் பற்றி பாஞ்சராத்ர பாத்மத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.

  • 1. ஸ்தாபனா - திருமாலை நின்ற திருக்கோலத்தில் 
  • 2. அஸ்தாபனா - அமர்ந்த திருக்கோலத்தில் 
  • 3. ஸமஸ்தாபனா - பள்ளி கொண்ட திருத்தலத்தில் 
  • 4. பரஸ்தாபனா - வாகனங்களில் பற்பல ரூபங்களில் 
  • 5. பிரதிஷ்டானா - சன்மார்ச்சையுடன் அமைப்பது. 

இவ்வகைத் திருக்கோலங்களில் ஆலயங்களில் அமைக்கப்படும். திருமால், யோகம், போகம், வீரம், ஆபிசாரிகம் என நால்வகைப்படுவர். யோகிகள் யோக மூர்த்திகளையும், குடும்பத்தில் உள்ளவர்கள் போக மூர்த்திகளையும், வீரர்கள் வீர மூர்த்திகளையும், பகைவர்கட்குத் துன்பம் விழைவிக்க விரும்புவர்கள் ஆபிசாரிக மூர்த்திகளையும் வணங்குவர். இன்று போக, யோக மூர்த்திகளே பழக்கத்தில் அமைந்துள்ளன. வீர மூர்த்திகள் மிக அரிது. ஆபிசாரிக மூர்த்திகள் இன்று இல்லவே இல்லை. இதனை வேண்டும்போது அமைத்து அழித்து விடுவதுண்டு. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment