About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

108 திவ்ய தேசங்கள் - அறிமுகம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

இந்தியாவில் உள்ள ஸ்தலங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். 

  • 1) ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தலங்கட்கு ஆர்ஷம் என்று பெயர். 
  • 2) புராணங்களில் விரித்துரைக்கப்பட்ட ஸ்தலங்கட்கு ‘பௌராணிகம்’ என்று பெயர். 
  • 3) தானே தோன்றியவைகள் ‘ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்’ என்றும் அல்லது சைத்தம் என்றும் மொழிவர்.
  • 4) பிரம்மாதி தேவர்களால் தவஞ்செய்து உண்டாக்கப்பட்டவைகளை ‘தைவம்’ என்பர். 
  • 5) மன்னர்களாலும், அடியார்களாலும் பிரதிட்டை செய்யப்பட்டவைகளுக்கு ‘மானவம்’ என்பர். 
  • 6) ஆச்சார்ய புருஷர்களால் அபிமானிக்கப்பட்டதை அபிமான 'ஸ்தலம்’ என்பர். 

இத்தகைய அமைப்பிலோ, அல்லது இதில் குறிப்பிடாதவாறு வேறு வகையில் கட்டப்பட்ட ஸ்தலத்திற்கு ஆழ்வார்களின் பாசுரஞ் சூட்டப்பட்டதாகில் அப்பெருமாள் மங்களாசாசனம் செய்யப்பட்டவராக ஆகிறார். அத்தலம் திவ்ய தேசமாகிறது. அங்கு எம்பெருமான் நித்ய வாசஞ் செய்கிறான். இந்த ஸ்தலங்கள் கிளிகொத்திய மாங்கனியாகத் திகழ்பவைகளாகும். 

எம்பெருமானின் அம்சங்களே ஆழ்வாராக அவதரித்தார்கள். அதாவது எம்பெருமானின் சார்ங்கம் என்னும் வில்லே ஒரு ஆழ்வாராக அவதாரம். பிராட்டியே ஸ்ரீ ஆண்டாளாக அவதாரம் செய்தார். இவ்விதம் எம்பெருமானின் அம்சங்களே ஆழ்வாராக வந்து மங்களாசாசனம் செய்ததால் அத்தலம் திவ்ய தேசமாயிற்று. திவ்யம் என்ற வடசொல்லுக்கு தெய்வத் தன்மை பொலிந்தது என்று பொருள். ஆழ்வார்களின் பாசுரங்கள் பெறப்பட்ட ஸ்தலங்களில் எம்பெருமான் நித்ய ஸான்னித்தியம் கொண்டுள்ளான். அதாவது அங்கேயே வாழ்கிறான் என்று பொருள். திவ்யமான மங்கள அர்ச்சா ரூபம், திவ்ய ப்ரபந்தமென்னும் மங்களாசாசனமாகிய பாமாலையால் கட்டுண்டு திவ்ய தேசமாக ஆகி நம்மையும் (பரம பதத்தில்) வைக்கும் படியான நித்ய சூரியாக ஆக்குகிறது. 

பரமபதத்திலிருந்து வரப்பெற்ற திவ்ய சூரிகளால் அவர்களது திவ்யம் பொருந்திய மொழிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்டவை திவ்ய ஸ்தலங்களாகும். அணுவிற்குள் அண்டமும், அண்டத்திற்குள் அணுவும் இருப்பதைப் போன்று திவ்ய சூரியே இங்கு வந்து திவ்ய தேசங்களைக் காட்டிச் செல்கிறான். அந்த திவ்யதேசங்களில் ஈடுபட்டே ஒருவன் திவ்ய சூரியாகி விடுகிறான். நாராயண மந்திரம் மூன்று பதங்களாயிருப்பதைப் போல இந்த ஸ்தலங்களை (திவ்ய தேசங்கள் என்று சொல்லப்படும் ஸ்தலங்களை) மூன்று திவ்யங்கள் சூழ்ந்துள்ளன. அதாவது கோவில் திவ்யமாகிறது. பெருமாள் ஒரு திவ்யம், மங்களாசாசனப் பாசுரம் திவ்யப் பிரபந்தமாகிறது. 

நாராயண மந்திரம் எனப்படும் திருமந்திரம் எட்டெழுத்துக்களால் (எட்டிழைகளால் ஆனது) இந்த திவ்ய தேசங்களும் சப்த புண்யங்கள் எனப்படும். ஏழு புண்யங்களுடன், ஆழ்வார்களின் மங்களாசாசனத்தையும் சேர்த்து எட்டெழுத்தான திருமந்திரத்தின் சக்தியைப் பெற்று அஷ்டாச்சர மந்திரத்தின் பலனைத் தரக்கூடிய ஸ்தலங்களாக அமைகிறது. 

ஏழு புண்ணியங்கள் என்பவை – ஷேத்ரம் வநம் நதி ஸிந்து புரம் புஷ்கரிணி ததா விமானம் ஸப்த புண்யஞ்ச யத்ர தேஸ இவ்வேழு புண்ணியங்களும் ஒருங்கே அமையப் பெற்று ஆழ்வார்களின் மங்களாசாசனமும் ஒரு தலத்திற்கு அமையுமாயின் அது அஷ்டாச்சர மந்திரம் நிலை பெற்ற இடமாகும். இத்தனையும் ஒருங்குகூடிய ஸ்தலத்தை திவ்ய தேசமெனச் சொல்வதில் தடையுமுண்டோ. இவ்விதம் இந்தியாவில் ஆழ்வார்கள் பன்னிருவரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள் 108. இம்மட்டுமன்றி, இந்த திவ்யதேசங்கள் அதில் அமைந்துள்ள விமானங்களினாலும் சிறப்பும், மேன்மையும் படைத்தனவாகும். மூலஸ்தானத்திற்கு மேலே (கர்ப்பக் கிரகத்திற்கு மேல்) சிற்ப சாஸ்திர விதிகட்குட்பட்டு அமைக்கப்பட்டுள்ள கோபுரமே விமானமாகும். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment