||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
004 தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே|
தசமுகன் இராவணனின் மற்றொரு பெயர். பிராட்டி என்பவள் சீதை. செற்று என்றால் கொல்வது. கற்பு சக்தியால் இராவணனை சீதை கொன்றாள் என்று அர்த்தம். சீதை நேரிடையாக கொல்லவில்லை என்றாலும் அவளுடைய கற்பினால் தான் இராவணன் மடிந்தான்.
ஸ்ரீராமன், ராவணனை வதம் செய்தார். ஆனால், திருக்கோளூர் பெண்ணோ, ராவணனை வதைத்தது சீதா பிராட்டியே என்கிறாள். தசமுகனான, ராவணன் அழிய வேண்டும் என்பதற்காகவே சீதை, ராமனுடன் காட்டிற்கு வந்தாள். தசமுகனுக்கு அழிவு ஏற்படும் வகையில் மாயமானைக் கேட்டாள், லட்சுமணனைத் திட்டி அனுப்பினாள். ராவணன் வந்தான். சீதையைத் தூக்கிச் சென்றான். இலங்கையில் சிறை வைத்தான்.
அனுமான் சீதையை தூக்கி கொண்டு போய் ராமரிடத்தில் சேர்ப்பதாக சொல்ல அதை சீதை மறுத்து விடுகிறாள். ஏன் என்று அனுமான் கேட்க, அதற்கு சீதை சொல்கிறாள். “கணவரிடமிருந்து பிரித்து வேறு இடத்தில் சிறை வைக்கும் போது ஒருவர் கூட்டிக் கொண்டு போனார். கணவரிடம் கொண்டு போய் சேர்க்கும் போது வேறொருவர் கூட்டிக் கொண்டு வந்தார். அப்படியானால் ராமர் என்ன பண்ணினார் என்று உலகம் கேட்கும். ராமருடைய பத்தினி ஏன் மற்ற பேரால் ரக்ஷிக்கப் படுகிறாள்? அப்படியானால் ராமனுக்கு தன்னை அண்டி வருபவர்களை ரக்ஷிக்கும் சக்தி கிடையாதா? அந்த உள்ளமே பகவானுக்கு இல்லையா? என்று கேட்பார்கள். அப்படியானால் சாஸ்திரமே பொய்த்து போய் விடும். அந்த குற்றத்தை நான் ஒருபொழுதும் செய்ய மாட்டேன். சரணாகதர்கள் நம்மை நாமே ரக்ஷித்துக் கொள்ள தகுதி அற்றவர்கள். பெருமான் தான் நம்மை ரக்ஷிக்க வேண்டும். உம்முடைய வாலை நெருப்பு சுடாது என்று சொன்ன எனக்கு இராவணனை நெருப்பு சுட்டு விடும் சென்று சொல்வதற்கு சுலபம். என் கற்பு கனலாலேயே அழித்து விடுவதும் சுலபம். நான் அப்படி பண்ணினால் அது ராமனுக்கு தேவையற்ற குற்றத்தை விளைவித்து விடும். அவனுடைய வில்லை பார்த்து தான் நான் இருக்கணுமே தவிர என் சொல்லை பார்த்து நான் இருக்க கூடாது. அதனால் அவரே வந்து தான் என்னை ரக்ஷிக்க வேண்டும்" என்று சீதை சொல்கிறாள். உண்மையில் ராமர் சண்டை போட்டதினால் மட்டும் இராவணன் மடிந்து விடவில்லை. சீதையின் கற்பும் சேர்ந்து தான் அவனை கொன்று விட்டது.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அப்படி என்ன எனக்கு கற்பு? அப்படி ஒன்றும் பதிவிரதத்தை நான் வளர்த்துக்க வில்லையே! சக்தி இருந்தாலும் தன்னை ராமர் தான் ரக்ஷிக்க வேண்டும் என்று இருந்தாளே! அப்படி நான் இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment