||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திரௌபதியின் மேன்மை
ஸ்கந்தம் 01
தலைகீழாக நின்றும், உடலைப் பலவாறு வருத்திக் கொண்டும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் தவம் செய்து புலன்களால் சறுக்கி விழுந்து, மீண்டும் தவம் செய்தும் மஹரிஷி என்று பெயர் வாங்கியவர்கள் பலர். ஆனால், நாராயண நாராயண என்று பகவன் நாமத்தை மட்டுமே எப்போதும் சொல்லி மஹரிஷி பட்டம் வாங்கி விட்டேன்.
முக்தியை விரும்புபவர்கள், மற்ற தெய்வங்களிடத்து அஸூயையோ, வெறுப்போ இல்லாமல், அமைதியுடன் ஸ்ரீ வாசுதேவனது சரணங்களையே பூஜிக்கிறார்கள்.
ஒரு விஷயம் எவ்வளவு அழகாகச் சொல்லப்பட்ட போதிலும், அது பகவானின் கீர்த்தியைச் சொல்லாவிடில், அதை ஸாதுக்கள் ஏற்பதில்லை.
அதை எச்சில் குழியாக எண்ணுகிறார்கள். எச்சில் குழியிலும் எல்லாரும் மீதி வைத்த உணவுப் பண்டங்கள் விழும். ஆனால், அது அவற்றின் சுவை அறியாது. பகவன் நாமத்தைப் பாடாத நாவும் அப்படியே. அதில் எவ்வளவு அழகான சொற்கள் விழுந்தாலும், பகவன் நாமத்தைச் சொல்வதாலேயே ஜீவனுக்கு ஈஸ்வரனின் ரசிகத் தன்மையும், ப்ரபாவமும் புலப்படும்.
ஸம்சாரத்தில் அமிழ்ந்து துக்கங்களால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒருவனது மனம் பகவானின் நாமங்களையும் புகழையும் கேட்ட மாத்திரத்தில் அமைதி அடைகிறது. ஸாதுக்கள் எப்போதும் வாசுதேவனின் பெயர்களைச் சொல்பவர்கள் இருந்தால் கேட்பார்கள். கேட்பவர்கள் இருந்தால் சொல்வார்கள். ஒருவரும் இல்லையெனில், தாங்களே தனியாக கானம் செய்து கொண்டு இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஸாதுக்களைக் கவரும் வண்ணம் பகவானின் கீர்த்தி நன்கு புலப்படும் வண்ணம் அவனது லீலைகளை ஒன்று பட்ட மனத்தோடு தியானித்து வர்ணிப்பீராக! வாஸுதேவனை பஜிக்கும் ஒருவன் நிச்சயமாக மீண்டும் பிறவியை அடைவதில்லை.
இவ்வாறு பலவிதமாகச் சொல்லி, ஸாதுக்களின் மஹிமையையும், பகவன் நாமத்தின் பெருமைகளையும் எடுத்துச்சொல்லிவிட்டு, நாரதர் கிளம்பினார்.
அதன் பின்னர் வியாஸர் இலந்தை மரங்களால் சூழப்பட்டதும், ஸரஸ்வதி நதிக் கரையில் அமைந்ததுமான தனது ஆசிரமத்தில் அமர்ந்து பகவானை தியானம் செய்தார். பின்னர் புராணங்களுள் ரத்தினமாக விளங்கும், ஸ்ரீமத் பாகவதம் என்ற புராணத்தைச் செய்தார். அதைத் தன் மகனான சுகருக்கு உபதேசம் செய்தார், என்று சொல்லி, ஸூத பௌராணிகர் மேலும் சொல்லலானார்.
மஹாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வென்றனர். யுத்தத்தில் கடுமையாக அடிபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்ந்து கிடந்தான் துரியோதனன். அவன் மகிழ்ச்சியடைவான் என்று நினைத்துக் கொண்டு துரோணரின் புதல்வனும், துரியோதனனின் நண்பனுமான அஸ்வத்தாமன் ஒரு வேலை செய்தான். பாண்டவர்களின் பாசறையில் யாருமில்லாத போது நுழைந்தான். உறங்கிக் கொண்டிருந்த சிறுவர்களான உப பாண்டவர்களை பாண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டு, ஐந்து குழந்தைகளையும் கொன்று விட்டான்.
ஆனால், துரியோதனன் நண்பனின் இந்தச் செய்கையால் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக வருந்தினான். அவன் உடலில் இருந்த குருதி முழுவதும் வெளியேறி விட்ட நிலையில் அவனுக்கு நல்லெண்ணம் வந்தது.
குழந்தைகள் இறந்து விட்ட செய்தி கேட்டு பாண்டவர்கள் துடித்துப் போனார்கள். வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் குலக் கொழுந்துகள் பட்டுப் போய் வாரிசற்ற நிலைமை வந்து விட்டது.
திரௌபதியின் அழுகையால் மூவுலகங்களும் ஸ்தம்பித்துப் போனதென்று தான் சொல்ல வேண்டும்.
அப்போது அர்ஜுனன், "இக்காரியத்தைச் செய்தவன் தலையை இன்று மாலைக்குள் வெட்டுவேன்" என்று சூளுரைத்தான். வெட்டியவனைக் கண்டு பிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. அசுவத்தாமாவைப் பிடித்துக் கொண்டு வந்து திரௌபதியின் முன் நிறுத்தினான்.
அக்னியிலிருந்து தோன்றியவள். அரசகுமாரி. முற்பிறவியில் கடும் தவம் செய்து தர்மம், வீரம், சாதுர்யம், அத்தனை சாஸ்திரங்களிலும் நிபுணத்வம், ஞானம் இவை அனைத்தும் கொண்ட வரனை வேண்டியவள்.
ஐந்தும் ஒருவரிடத்து ஒருங்கே அமைவது கடினம் என்று ஒரே ஸ்வரூபமாகவும், ஐந்து உடல்களையும் கொண்ட மஹா புருஷர்களுக்கு வரிக்கப்பட்டவள். ஒவ்வொரு வருடமும் அக்னி ப்ரவேசம் செய்பவள். மஹா பதிவ்ரதை. திருமணமான அன்றிலிருந்து காடுகளில் அலைந்து, சுடு சொற்களாலும், பழிச் சொற்களாலும் காயப்பட்டு பலவிதமான துன்பங்களை அனுபவித்தவள். இப்போது குழந்தைகளையும் இழந்து நிற்கிறாள். உறங்கிக் கொண்டிருந்த தன் குழந்தைகளைக் கொன்றது மகாபாவியான அசுவத்தாமன் என்றறிந்ததும் என்ன சொன்னாள் தெரியுமா?
"ஸ்வாமி, இவர் குழந்தைகளைக் கொன்றவராயினும் குரு புத்ரன். குருவை இழந்து விட்டோம். தந்தையானவர் மகனின் உருவிலேயே வசிக்கிறார் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஏற்கனவே கணவரை இழந்து இவரது தாயும் மஹா உத்தமியுமான கிருபி துன்பக் கடலில் தத்தளிக்கிறார். குழந்தைகளை இழந்து நான் படும் துயரத்தை அந்தத் தாயும் அனுபவிக்க வேண்டாம். இவரை மன்னித்து விட்டு விடுங்கள்" என்றாளே பார்க்க வேண்டும்.
த்ரௌபதியின் ஹ்ருதயத்தின் மேன்மையைக் கண்டு பகவானான கண்ணனே ஆச்சர்யத்தில் மூழ்கிப் போனார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment