||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ருக்மிணியின் கடிதம்|
பகல் உணவுக்குப் பிறகு அந்தணர் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். அந்தச் சமயம் கிருஷ்ணர், அந்தணர் பக்கத்தில் உட்கார்ந்து அவரது பாதங்களை வருடிய படி மிகவும் மெதுவான குரலில், "அந்தணரே! தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? கடைக் கடக்கும் கஷ்டத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு எதற்காக வந்தீர்கள்? அது ரகசியமான விஷயமாக இல்லா விட்டால் நான் தெரிந்துக் கொள்ளலாமா? நான் தங்களுக்குச் செய்யக் கூடிய காரியம் எதாவது உண்டா?" என்று வினவினர்.
கிருஷ்ணர் அளித்த உபச்சாரத்தைக் கண்டும், அவருடைய இனிய மொழிகளைக் கேட்டும், அந்தணர் மிக்க மகிழ்ச்சியுற்று இருந்தார். அவர் கிருஷ்ணரைப் பார்த்து, "பீஷ்மகர் ஆளும் விதர்ப்ப நாட்டிலிருந்து நான் வருகிறேன், அவருக்கு ருக்மிணி என்ற பெண் இருக்கிறாள். நாரதரிடமிருந்து தங்களை பற்றியும் தங்கள் வீரத்தைப் பற்றியும் கேள்விப்பட்ட அவள் தங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறாள். பீஷ்மகருக்கும் தம் மகளைத் தங்களுக்குத் தான் கொடுக்க விரும்புகிறார். ஆனால் அவருடைய மூத்த மகன் ருக்மி இதற்குத் தடையாக இருக்கிறான். தன் தங்கையை தமகோஷரின் மகன் சிசுபாலனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறான். ருக்மிணி என்றுமே தங்கள் மீது தான் உயிராக இருக்கிறாள், தன் இதயத்தில் தங்களைப் பூஜிக்கிறாள். ஆகவே தங்களைச் சரணடைந்து என் மூலம் தங்களுக்கு செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறாள். அந்த செய்தியை அவளுடைய வார்த்தைகளிலேயே கூறுகிறேன் கேளுங்கள்" என்று சொல்ல ஆரம்பித்தார்.
"புவன சுந்தரா! தங்களுடைய சிறந்த பண்புகளைப் பற்றியும், தங்கள் மீது அன்பு கொண்டவரிடம் தாங்கள் காட்டும் கருணையைப் பற்றியும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். தாங்கள் தான் என் நாதர் என்று முடிவெடுத்து விட்டேன். என்னைத் தங்களிடம் ஒப்படைத்து விட்டேன். என்னைத் தாங்கள் பணிப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளுங்கள். நான் செய்யும் பூஜைகளின் பலனாக எனக்குப் புண்ணியம் சேர்ந்திருந்தால் அது என்னைத் தங்களோடு சேர்த்து வைக்கட்டும். உங்களுக்குச் சந்தேகம் ஏற்படலாம்.
கன்னி மடத்தில் இருக்கும் இவளை இவளுடைய உறவினர்களைக் கொல்லாமல் எப்படி எடுத்துச் செல்ல முடியும் என்று. இதற்கு நான் ஒரு வழி சொல்லுகிறேன். திருமணத்திற்கென்று நிச்சயிக்கப்பட்ட நாளுக்கு முதல் நாள், கிரிஜா தேவியின் கோவிலை நோக்கி என்னை உட்கார வைத்து ஊர்வலம் கிளம்பும். கோவிலை விட்டு நான் வெளியே வந்ததும் தாங்கள் என்னை எடுத்துச் செல்லலாம். என்ன காரணத்தினாலோ, என் விருப்பம் பூர்த்தியாகா விட்டால் என்னை மாய்த்துக் கொள்வேன் என்பதை தாங்கள் நிச்சயமாக நம்பலாம்". "இது தான் ருக்மிணி என் மூலம் விடுத்த செய்தி. இதற்கு பிறகு தாங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள்" என்று அந்தணர் சொன்னார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment