About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 19

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

தர்ம சங்கடம்

ஸ்கந்தம் 01

மஹாபாரதத்தை அப்போது தான் முடித்திருந்ததால் அடுத்த கிரந்தத்தை வியாஸர் யுத்த முடிவிலிருந்தே துவங்கினார் போலும்.

தன் குழந்தைகளை உறங்கும் போது வெட்டிய அஸ்வத்தாமனை மன்னித்து விடச் சொல்கிறாள் திரௌபதி. மேலும் "இவன் ப்ராம்மணன். இவனைக் கொன்றால் ப்ருமஹத்தி தோஷம் வரும். ஏற்கனவே நாம் துன்பப்பட்டது போதும். புதிதாய் ஏதும் தோஷங்கள் நமக்கு வர வேண்டாம். அதனால் விட்டு விடுங்கள்" என்றாள். சாஸ்திரத்தின் மீதும் குருவின் மீதும் உள்ள பக்தியால் குரு புத்ரன் கொடியவனாயினும் வதம் செய்யக் கூடாது என்றாள். உடனே, பீமசேனன் கொதித்தெழுந்தான். "உறங்குபவர்களையும், எதிர்க்க சக்தி இல்லாதவர்களையும், சிறுவர்களையும் கொன்றவன் ப்ராம்மணனாயினும், அவனைக் கொல்லத் தான் வேண்டும். மேலும், எஜமானனுக்கு வேண்டியோ, தன்னுடைய லாபத்திற்கோ கூட இல்லாமல் வீணாகக் கொன்றிருக்கிறான். இவனைத் தண்டிப்பது இவனுக்கே நன்மை பயக்கக் கூடியது தான். எனவே அஸ்வத்தாமனைக் கொல்ல வேண்டும்."


கண்ணன், கட்டப்பட்டிருக்கும் அச்வத்தாமனிடம் த்ரௌபதியை அழைத்துப் போக அவளோ, இவன் குரு புத்ரன் என்று வணங்கினாள். தர்ம புத்ரருக்கும் த்ரௌபதி சொல்வது சரியென்று பட்டது. குழப்பமடைந்த அர்ஜுனன் க்ருஷ்ணனைப் பார்த்தான். கண்ணன் சிரித்தான்.

"அர்ஜுனா, குரு புத்ரன். ப்ராம்மணன். அதனால் கொல்லக் கூடாது என்பது சாஸ்திரம். வீணாக மஹாபாவங்களைச் செய்தவனை அரசனானவன் கொல்ல வேண்டும் என்பதும் என்னால் கொடுக்கப்பட்ட சாஸ்திரம் தான். இரண்டுமே தர்மமாகிறது. இம்மாதிரி இரண்டு தர்மங்களுள் எதைச் செய்வது என்ற குழப்பம் ஏற்படுவதே தர்ம சங்கடமாகும். நீயோ இவனைக் கொல்வதாய் சபதமிட்டிருக்கிறாய். எனவே, நீ த்ரௌபதிக்கும், பீமனுக்கும், எனக்கும், உனக்கும் பிரியமானது எதுவென்று யோசித்து அவ்வாறு செய்" என்றான்.

"அனைவர்க்கும் பிரியமானதைச் செய்வதா? இப்படி மாட்டி விடுகிறாயே கண்ணா" என்ற அர்ஜுனன் சற்று யோசித்தான். அச்வத்தாமனின் தலையில் ஒரு ரத்தினம் உண்டு. அது அவன் உடன்பிறந்தது. அதனால் மிகுந்த கர்வம் கொண்டிருந்தான். அர்ஜுனன் அந்த மணியை முடியோடு சேர்த்து அறுத்தான்.

ஒருவரின் தலை முடியை தெய்வத்திற்குக் காணிக்கையாகக் கொடுப்பதே தன் ப்ராணனை காணிக்கை ஆக்குவதற்குச் சமம். அநாவசியமாக முடியை வெட்டுபவர்களின் ப்ராண சக்தி குறைகிறது. தலை முடியையும், அவனது கர்வத்திற்குக் காரணமான ரத்தினமும் வெட்டப்பட்டதால் அவனைக் கொன்றதற்கு சமமாயிற்று.

மிகவும் சாதுர்யமாக யோசித்து அர்ஜுனன் செய்த காரியத்தினால் அனைவர்க்கும் சமாதானம் ஏற்பட்டது.

உயிர் பிழைத்த அச்வத்தாமன் மகிழவில்லை. மாறாக, ஒரு பெண்ணால் உயிர்ப் பிச்சை கிடைத்ததே என்றெண்ணி அவமானத்தினால், அடிபட்ட நாகம் போல் கருவிக் கொண்டு பாண்டவர்களைப் பூண்டோடு அழிக்க உறுதி பூண்டான். இழந்த குழந்தைகளை நினைத்துப் புலம்பிக் கொண்டு அனைவரும் அரண்மனை திரும்பினர். தர்ம புத்திரர் அரசு கட்டில் ஏறினார்.

அர்ஜுனனின் மகனான அபிமன்யு ஏற்கனவே யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டான். அவனுக்குத் திருமணமாகி சில காலம் தான் ஆகியிருந்தது. அவனது இளம் மனைவியான உத்தரை கருவுற்றிருந்தாள்.

துவாரகையை விட்டு வந்து வெகு நாட்களாகி விட்டதால் கண்ணன் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானான். கண்ணனைப் பிரிவது சுலபமா என்ன? இருப்பினும் அவன் தங்களுக்காக தனது ராஜ்ஜியத்தையும் பெற்றோரையும், மனைவி மக்களையும் விட்டு விட்டு வந்திருக்கிறான் என்பதால், பிரியா விடை கொடுத்தனர். அனைவரும் வாசலில் வந்து கண்ணனின் ரதத்தைச் சூழ்ந்து நின்றனர்.

ரதத்தில் ஏறப் போன கண்ணனின் கால்களில் காப்பாற்றுங்கள்  காப்பாற்றுங்கள்! 
பாஹி பாஹி மஹா யோகின் தேவ தேவ ஜகத்பதே! 
நான்யம் த்வதபயம் பஷ்ய யத்ர ம்ருத்யு: பரஸ்பரம் 
என்று அலறிக் கொண்டு திடீரென்று ஓடிவந்து ஒரு பெண் விழுந்தாள். யாரென்று பார்த்தால், அது அபிமன்யுவின் மனைவி உத்தரை. 

கண்ணன் அவளைத் தூக்கி நிறுத்தி,

"என்னாச்சும்மா?" என்று பரிவோடு விசாரிக்க, தூரத்தில் வானில் நெருப்பைக் கக்கிக் கொண்டு ஏதோ ஒன்று அவளைத் துரத்துவதைக் காண்பித்தாள். 

கண்ணன் அதைப் பார்க்க சற்று நேரத்தில் அது மறைந்து விட்டது. என்னவாய் இருக்கும்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment