||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கிருஷ்ணருக்கு ருக்மிணியின் தூது|
நடந்ததைக் கேட்டு ருக்மிணி மனம் நொந்தாள். அல்லும் பகலும் அவள் கிருஷ்ணனைப் பற்றிய கனவு கண்டு கொண்டு இருந்தாள். நாரதர் விவரித்த கிருஷ்ணரின் அழகு, குழந்தையாக இருக்கும் போதே அவர் செய்த பல வீரச் செயல்கள், எல்லாரையும் அடிமை கொண்ட அவருடைய மோகனச் சிரிப்பு, தன்னை அடிமை கொண்ட அவருடைய பல சிறந்த பண்புகள் இவற்றை எல்லாம் அவள் நினைவு கூர்ந்தாள். இப்பொழுது என்ன செய்வது? இரவெல்லாம் தூங்காமல் இதைப் பற்றி சிந்தனையாகவே இருந்தாள். காலையில் ஒரு முடிவுக்கு வந்தாள்.
"எனக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நான் அவரை நேசிக்கிறேன். அவரே என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அவருக்குச் செய்தி அனுப்ப வேண்டும். அவரிடம் சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றும் கை விடுவதில்லை என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். வெட்கப்பட்டுப் பலன் இல்லை. இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்படி அவருக்கு நான் செய்தி சொல்லி அனுப்புவேன். அப்படி அவர் என்னைக் காப்பாற்றா விட்டால் நான் என்னை மாய்த்துக் கொள்வேன். வேறு யாரையும் திருமணம் செய்த கொள்ள ஒருகாலும் இணங்க மாட்டேன்" என்று முடிவுக்கு வந்தாள்.
தனக்கு தெரிந்த நம்பகமான வயது முதிர்ந்த அந்தணருக்கு சொல்லி அனுப்பினாள். தன் துன்பங்களை அவரிடம் சொன்னாள். அந்த அந்தணர் ருக்மிணியைத் தன் மகளைப் போல நேசித்தார். அவர் உடனேயே துவாரகை செல்ல ஒப்புக் கொண்டார். துவாரகை அடைந்ததும் அவர் வாயில் காவலர்களிடம் தான் விதர்ப்ப தேசத்திலிருந்து ஒரு முக்கியமான காரியமாக வந்திருப்பதாக சொன்னார். உடனயே அவர்கள் அவனைக் கிருஷ்ணனின் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். கிருஷ்ணர் ஒரு தங்கச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்.
பகவனைப் பார்த்த ஆனந்தத்தில் அந்தணரின் வாயிலிருந்து ஒரு வார்த்தைக் கூட வரவில்லை. கிருஷ்ணரின் அழகைத் தம் கண்களால் பருகிக் கொண்டு, சிலை போல நின்றார். கிருஷ்ணர் பகவான் ஆனபோதிலும் ஒரு சாதாரண மனிதனைப் போல தான் நடந்துக் கொண்டார். அவர் எழுந்து நின்று அந்தணரைச் சிம்மாசனத்தில் உட்காரும்படி செய்தார். பிறகு அவரை எல்லோரும் பூஜிப்பது போல தாமும் பூஜித்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment