About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 13 November 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - எழுபத்தி ஒன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

071 சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூராரைப் போலே|

‘சூள்’ என்றால், சபதம் அல்லது ஆணை என்று பொருள். 

திருவாய்மொழி விளக்கம் ராமானுஜர் ஐந்து ஆசிரியர்களிடத்தில் அரிய பொருள் விளக்கங்களைக் கேட்டறிந்தவர். எனினும், தன்னுடைய இயல்பான நுண்ணறிவால் அவற்றைச் சிந்தித்துச் செயல்பட்டவர். 


திருக்கோட்டியூர் நம்பி, ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவர். ஆளவந்தார், திருக்கோட்டியூர் நம்பியிடம், தனக்கு பின்னர் மடத்தையும் சமயத்தையும் காக்க வரும் இராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசிக்க அறிவுறுத்தியிருந்தார். ஆயினும் தகுதியற்றவர்க்கு இதைக் கற்பிக்க கூடாது எனவும் கூறியிருந்தார் ஆளவந்தார். எனவே இவரிடம் இராமானுஜர் எட்டெழுத்து மந்திரத்தின் பொருளைக் கற்க வரும் பொழுது பதினெட்டு முறைகள் மறுத்து உடையவரின் தகுதியை சோதித்தப் பின்னரே கற்பித்தார்.

திருக்கோட்டியூர் நம்பிகள், திருவெட்டெழுத்து மந்திரம் பரம ரகசியம் என்றும், எவருக்கும் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் உபதேசத்தருளினார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி, ஆர்வமுள்ளோர் அனைவரும் கேட்டு உய்யும்படி எல்லோருக்கும் உபதேசம் செய்தார் இராமானுஜர். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடும் என்றும் கடிந்துக் கொண்டார்.


இராமானுஜர், “திருவெட்டெழுத்தின் பயனைப் பலர் எய்தும் பொருட்டுத் தான் ஒருவன் நரகம் செல்வது உகந்தது”, என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே எம்பெருமானார் என்று மகிழ்ச்சியுடன் ஆலிங்கனம் செய்துக் கொண்டார்.. அத்துடன் திருக்கோட்டியூரார், ராமானுஜரை, திருமலையாண்டான் என்ற ஆசானிடம் நாலாயிரம் திவ்ய ப்ரபந்தங்களுக்கும் விளக்கம் கேட்டு அறியப் பணித்தார். 

அவ்வாறே ராமானுஜர் திருமலையாண்டானிடம் பாடம் கேட்டார். சில பாசுரங்களுக்கு, திருமலை ஆண்டான் கூறிய விளக்கங்களுக்கு மேலும் தெளிவான பொருள்கள் கூறி அவரை வியக்கச் செய்தார். ஏனெனில், ராமானுஜர் கூறிய சிறப்பு விளக்கங்கள் யாவும் ஆளவந்தார் கூறிய விளக்கங்கள் ஆகும். ஆளவந்தாரிடம் நேரில் பாடம் கேட்காத ராமானுஜர் அவர் கூறிய அதே சிறப்பு விளக்கங்களை விவரித்தது ஆண்டானுக்கு வியப்பாக இருந்தது! 

திருக்கோட்டியூர் நம்பி மறைபொருளை தகுதி அறிந்து உரைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். ராமானுஜர் திருக்கோட்டியூராரிடம் மறை பொருளை எப்படியும் பெறுவது என்று சூளுரைத்து, பதினெட்டு முறை முயன்று பெற்றார். இருவரும் சூள் உரைத்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர். 

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "தான் அவ்வாறு உறுதியுடன் உபதேசித்தேனா அல்லது உபதேசம் தான் பெற்றேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment