About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 8 February 2024

லீலை கண்ணன் கதைகள் - 98

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

சுருத தேவர் பகுலாச்வனின் வேண்டுகோள்|

சுருததேவரும் பகுலாச்வனும் அவரைப் பூஜிக்க அங்கே வந்தார்கள். கிருஷ்ணரின் அழகிய உருவத்தைப் பார்த்ததும் இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பொல பொலவென வழிந்தது. வெகு நேரத்திற்கு அவர்களுடைய வாய்களிலிருந்து ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை. இருவரும் அவர் காலில் விழுந்து அவரை அழைத்தனர். தன் விருந்தினராய் இருக்க வேண்டுமென்று அரசன் அவரை அழைத்தான். அந்தணரும் கிருஷ்ணர் தம் எளிய குடிசைக்கு எழுந்தருளித் தம்மை ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


இருவரையும் திருப்தி செய்யக் கிருஷ்ணர் விரும்பினார், இருவர் அழைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார், உடனே அவர் இரண்டு கிருஷ்ணராக மாறினார். ஒரு கிருஷ்ணர் அந்தணர் வீட்டிற்கும், இன்னொரு கிருஷ்ணர் அரசன் வீட்டிற்கும் சென்றனர். ஆனால் இருவரும் தங்கள் வீட்டுக்கு மட்டுமே கிருஷ்ணர் வந்திருப்பதாக நினைத்தார்கள்.

அரசனின் அரண்மனையைக் கிருஷ்ணர் அடைந்ததும், அரசன் அவரை உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்து அவர் கால்களை அலம்பினான். பிறகு தூபம், சந்தனம் முதலியவற்றைக் கொண்டு அவரைப் பூஜித்தாள். கிருஷ்ணரின் கால்களைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, அவற்றை மெதுவாக பிடித்து விட்டான். பிறகு, அவன் கிருஷ்ணரைப் பார்த்து, "பிரபு, என் வீட்டிற்கு வந்து என்னை எவ்வளவோ மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். தாங்கள் ஒரு தடவை 'என் சகோதரன் ஆனந்தசேஷன், என் மனைவி லக்ஷ்மி, என் மகன் பிரம்மா இவர்களை விட என்னையே நினைத்துக் கொண்டிருக்கும் என் பக்தன் தான் எனக்குப் பிரியமானவன்' என்று சொன்னீர்கள். அதை நிரூபிக்க, என் நாட்டையும் என்னையும் வாழ்த்தத் தாங்கள் சில நாட்கள் எங்களுடன் தங்கியிருந்து எங்கள் இல்லத்தைப் பூலோக வைகுண்டமாக்க வேண்டும்" என்றான்.

அரசனின் பக்தியைக் கண்டு மகிழ்ந்து, கிருஷ்ணர் அங்கே சில நாட்கள் தங்கினார்.

இதே சமயம், கிருஷ்ணர் அந்த ஏழை அந்தணர் வீட்டிலும் வசித்து வந்தார். கிருஷ்ணர் தம் அதிதியாக இருப்பது குறித்து அவரும் சந்தோஷப்பட்டார். அவர் ஏழையாக இருந்தததனால் அவரால் கிருஷ்ணருக்கு தர்ப்பாசனம் தான் கொடுக்க முடிந்தது. துளசி இதழ்களைக் கொண்டு அவர் கிருஷ்ணரைப் பூஜித்தார். கிருஷ்ணரின் பாத கமலங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தம் இதயத்தோடு அணைத்துக் கொண்டார்.

கிருஷ்ணருக்கு, அரசன் வீட்டுக்கும் சரி, அந்தணர் வீட்டுக்கும் சரி, ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டு இடங்களிலும் ஒரே சமயம் இருந்து, தாம் தம் அடியார்களுக்கு அடியார் என்பதை அவர் காட்டியதோடு தமக்கு ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமும் இல்லை என்று நிரூபித்தார்.

கிருஷ்ணர் கேட்டதெல்லாம் இதயத் தூய்மையும் பக்தியும் தான். இரண்டு இடங்களிலும் சில நாட்கள் இன்பமாக கழித்து விட்டு, அவர் துவரகைக்குத் திரும்பினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment