||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
024. திருசிறுப்புலியூர் (திருவாரூர்)
இருபத்தி நான்காவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1628 - யாவரும் அருள்மா கடல் நாயகனைத் தொழுமின்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - முதலாம் பாசுரம்
கள்ளம் மனம் விள்ளும் வகை* கருதிக் கழல் தொழுவீர்*
வெள்ளம் முது பரவைத்* திரை விரிய*
கரை எங்கும் தெள்ளும் மணி திகழும்*
சிறுபுலியூர்ச் சலசயனத்து உள்ளும்*
எனது உள்ளத்துள்ளும்* உறைவாரை உள்ளீரே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1629 - யார் சொல்லையும் கேளாமல் சிறுபுலியூர் சேர்க
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
தெருவில் திரி சிறு நோன்பியர்* செஞ் சோற்றொடு கஞ்சி மருவி*
பிரிந்தவர் வாய்மொழி* மதியாது வந்து அடைவீர்*
திருவில் பொலி மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
உருவக் குறள் அடிகள் அடி* உணர்மின் உணர்வீரே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1630 - அருள்மா கடலின் அடிகளையே நான் அறிவேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்* பணியும் சிறு தொண்டீர்*
அறையும் புனல் ஒருபால் வயல்* ஒரு பால் பொழில் ஒரு பால்*
சிறை வண்டு இனம் அறையும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து உறையும்*
இறை அடி அல்லது* ஒன்று இறையும் அறியேனே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1631 - வேறு யாருக்கும் நான் அடிமையாக மாட்டேன்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - நான்காம் பாசுரம்
வான் ஆர் மதி பொதியும் சடை* மழுவாளியொடு ஒருபால்*
தான் ஆகிய தலைவன் அவன்* அமரர்க்கு அதிபதி ஆம்*
தேன் ஆர் பொழில் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து ஆன் ஆயனது*
அடி அல்லது* ஒன்று அறியேன் அடியேனே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1632 - அருள்மா கடலே! அருள் செய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
நந்தா நெடு நரகத்திடை* நணுகா வகை*
நாளும் எந்தாய் என* இமையோர் தொழுது ஏத்தும் இடம்*
எறி நீர்ச் செந்தாமரை மலரும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அம் தாமரை அடியாய்* உனது அடியேற்கு அருள் புரியே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1633 - இப்பரமனைத் தொழுவார்க்குத் துயரமே வராது
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
முழு நீலமும் மலர் ஆம்பலும்* அரவிந்தமும் விரவி*
கழுநீரொடு மடவார் அவர்* கண் வாய் முகம் மலரும்*
செழு நீர் வயல் தழுவும்* சிறுபுலியூர்ச் சலசயனம்*
தொழு நீர்மை அது உடையார்* அடி தொழுவார் துயர் இலரே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1634 - மாயனே! நீ எங்கிருக்கிறாய்?
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
சேய் ஓங்கு* தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் மாயா*
எனக்கு உரையாய் இது* மறை நான்கின் உளாயோ?*
தீ ஓம்புகை மறையோர்* சிறுபுலியூர்ச் சலசயனத் தாயோ?*
உனது அடியார் மனத்தாயோ?* அறியேனே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1635 - புலியூர்ச் சல சயனத்தானே! அருள் செய்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
மை ஆர் வரி நீலம்* மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு*
உய்வான் உன கழலே* தொழுது எழுவேன்*
கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஐ வாய் அரவு அணை மேல்* உறை அமலா அருளாயே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1636 - பரமனே! உன் திருவடிகளே எங்கள் கதி
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கரு மா முகில் உருவா* கனல் உருவா புனல் உருவா*
பெரு மால் வரை உருவா* பிற உருவா நினது உருவா*
திரு மா மகள் மருவும்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
அரு மா கடல் அமுதே* உனது அடியே சரண் ஆமே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1637 - பாவம் பறந்து விடும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - ஒண்பதாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
சீர் ஆர் நெடு மறுகில்* சிறுபுலியூர்ச் சலசயனத்து*
ஏர் ஆர் முகில் வண்ணன் தனை* இமையோர் பெருமானை*
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை* கலியன் ஒலி மாலை*
பாரார் இவை பரவித் தொழப்* பாவம் பயிலாவே|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment