||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 87 - ஆமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும்*
சிறு பிறை முளைப் போல*
நக்க செந்துவர் வாய்த் திண்ணை மீதே*
நளிர் வெண் பல் முளை இலக*
அக்கு வடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட*
அனந்த சயனன்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*
தளர் நடை நடவானோ! (2)
🎵பெரியாழ்வார் திருமொழி - 1.7.2🙏
- செக்கரிடை - செவ்வானத்திலே
- நுனி கொம்பில் - கொம்பின் நுனியிலே
- தோன்றும் - காணப்படுகிற
- சிறுபிறை - சிறிய பிறைச் சந்திரனாகிய
- முளை போல - முளையைப் போல
- நக்க - சிரித்த
- செந்துவர் வாய்த் - மிகவும் சிவந்த வாயாகிய
- தி்ண்ணை மீதே - உதட்டின் மீது
- நளிர் வெண் பல் - குளிர்ந்த வெண்மையாகிய பல்லின்
- முளை இலக - முளைகள் தோன்ற
- அஃகு வடம் - சங்கு மணி வடத்தை
- உடுத்து - திருவரையில் தரித்த
- ஆமைத் தாலி - ஆமையின் வடிவமாகச் செய்யப்பட்ட தாலியை
- பூண்ட - கழுத்திலணி்ந்து கொண்டவனும்
- அனந்த சயனன் - திருவனந்தாழ்வான் மேலே படுப்பவனும்
- தக்க மா - தகுதியான அழகிய பெரிய
- மணிவண்ணன் - நீல மணி போன்ற நிறத்தை உடையவனும்
- வாசுதேவன் - வஸுதேவ புத்திரனுமான இவன்
- தளர் நடை - அழகிய இளம் நடையை
- நடவானோ - நடக்க மாட்டானோ? நடக்க வேணும்
கண்ணபிரான் தன்னுடைய பவள நிற வாயால் தூய வெள்ளை நிறமுடைய சிறிதாக முளைத்த பற்கள் தெரியும்படி சிரிக்கும் போது அந்தக் காட்சி எப்படியிருந்ததென்றால் சிவந்த வானில் உதித்த சிறிய பிறைச் சந்திரனை ஒரு மரக் கிளையின் நுனி வழியாக பார்ப்பது போல் இருந்ததாம். சங்கின் வடிவத்தில் அமைத்த மணி வடத்தை இடுப்பில் அணிந்தவாரும், ஆமை வடிவில் அமைத்த கழுத்திலணிந்த காப்புடனும், பாம்பை படுக்கையாகக் கொண்டவனும், உயர்ந்த நீல ரத்தினம் போல் நிறத்தையுடையவனும், வசு தேவரின் புதல்வனுமான கண்ணன் தளர் நடையாக நடந்து வர காத்து நிற்கிறார் ஆழ்வார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment