About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 8 February 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 51

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுரரின் தீர்த்த யாத்திரை

ஸ்கந்தம் 03

தீர்த்த யாத்திரை சென்ற விதுரர், மதுரா, ப்ருந்தாவனம், அதன் உபவனங்கள், கோவர்தனம், யமுனை, கங்கை, இன்னும் பல புண்ய நதிகள், நாராயண ஸரஸ், போன்ற பல இடங்களுக்கு தனி ஒருவராகவே யாத்திரை சென்றார். உயிர் வாழத் தேவையான மிதமான, ஸாத்வீகமான, சுத்தமான உணவை மட்டுமே எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு நதியிலும் தனித்தனியாக நீராடி, விரிப்பு ஏதுமின்றி நிலத்தில் படுத்தார். மிக மெல்லிய தேகமுடையவராகி அவரைச் சேர்ந்தவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாதவாறு மரவுரி உடுத்து, விரதங்களை மேற்கொண்டு சுற்றித் திரிந்தார்.


பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு ப்ரபாஸ தீர்த்தத்திற்குத் திரும்புவதற்கு வெகு காலமாயிற்று. இதற்கிடையில் பாரத யுத்தம் முடிந்து தர்ம புத்ரர் நேர்மையுடன் நல்லாட்சி புரிந்து வந்தார். பாரதப் போரில் நிகழ்ந்தவை அனைத்தையும் கேள்வியுற்ற விதுரர் வருந்தியவராக மௌன விரதமேற்று ஸரஸ்வதி நதி மேற்கு நோக்கிப் பாயுமிடத்தை அடைந்தார்.

அங்கு, திரிதர், உசனஸ், மனு, ப்ருது, அக்னி அஸிதர், வாயு, ஸுதாசர், கோ, குகன், சிராத்த தேவர் ஆகியோரின் பெயர்களில் இருந்த புண்ய தீர்த்தங்களில் நீராடி, இறந்து போன உறவினர்களுக்காக நீர்க் கடன் செய்தார்.


ஸரஸ்வதி நதி தீரத்தில் மஹரிஷிகளாலும், தேவர்களாலும் நிறுவப்பட்ட பற்பல திருக்கோவில்கள் இருந்தன. எல்லாவற்றையும் தரிசனம் செய்தார் விதுரர். அக்கோவில்களின் கோபுர கலசங்களில் சுதர்சன சக்கர அடையாளங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் கண்ணன் நினைவு வந்தது.

அங்கிருந்து கிளம்பி, ஸௌராஷ்டிரம், சௌவீரம், மத்ஸ்யம், குருஜாங்காலம் ஆகிய தேசங்களைத் தாண்டி யமுனைக் கரையை அடைந்தார். அங்கு பரம பாகவதரான உத்தவரைச் சந்தித்தார். தூரத்திலிருந்து பார்க்கும் போதே பரம பக்தர் என்று தெரிந்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும். உத்தம பக்தர்களை அத்தகையோரே அறிவர் அன்றோ. துவாரகையில் கண்ணனோடு அல்லவா இருப்பார். இங்கு வந்திருப்பவர் உத்தவர் மாதிரி இருக்கிறதே. 

உத்தவரும் விதுரர் பற்றிக் கேள்வியுற்று இருக்கிறார். பரம பக்தர் என்று நன்றாய்த் தெரிந்தது. ஆனால் கேள்விப்பட்ட விவரங்கள் எதுவும் ஒத்துப் போகாத அளவிற்கு விதுரர் உரு மாறியிருந்தார்.

தான் கண்ணனின் மந்திரி என்று எப்போதும் மகிழ்ச்சியுடன் மலர்ந்திருக்கும் உத்தவன் முகமோ வாடிப் போயிருந்தது. ஏதோ பெயருக்கு உயிரைச் சுமந்தவரைப் போல் காணப்பட்டார். பக்தர்களின் ஹ்ருதயம் ஒன்றே. ஏனெனில் அவர்கள் ஹ்ருதயத்தில் குடியிருப்பவன் ஒருவன் தானே. அதனால் ஹ்ருதயத்திலும் பேதம் இல்லை. அருகில் வந்ததும், அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

கண்ணனையே நேரில் கண்டவர் போல் அகமகிழ்ந்து போனார்கள் இருவரும். ஆரத் தழுவிக் கொண்டு பேச்சற்ற நிலையில் தவித்தார்கள் இருவரும். ஒருவாறாக சிறிது நேரம் கழித்து விதுரர், கேள்வி மழை பொழிந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment