About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 8 February 2024

108 திவ்ய தேசங்கள் - 025 - திருத்தலைச்சங்க நாண்மதியம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

025. திருத்தலைச்சங்க நாண்மதியம் 
தலைச்சங்காடு - திருவாரூர் 
இருபத்தி ஐந்தாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ தலைச்சங்க தாயார் ஸமேத ஸ்ரீ நாண்மதிய பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: நாண்மதியன், வெண்சுடர் பிரான் 
  • பெருமாள் உற்சவர்: சந்திர சாபஹரர், லோகநாதன், வியோம் ஜோதி பிரான்
  • தாயார் மூலவர்: தலைச்சங்க நாச்சியார்
  • தாயார் உற்சவர்: செங்கமலவல்லி, சவுந்தரவல்லி
  • திருமுக மண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: நின்ற
  • புஷ்கரிணி/தீர்த்தம்: சந்திர
  • விமானம்: சந்திர
  • ப்ரத்யக்ஷம்: சந்திரன், தேவர்கள், நித்ய ஸூரிகள்
  • ஆகமம்: பாஞ்சராத்ரம் 
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 2

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

இத்தலத்தின் பெருமாள் சிவனைப் போல் தலையில் சந்திரனை சூடிய நிலையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இதனாலேயே இவர் நாண்மதியப் பெருமாள் என்றும், சந்திர சாபஹரர் என்றும் அழைக்கப்படுகிறார். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து மஹாலக்ஷ்மிக்கு முன்னதாக தோன்றியவர் சந்திரன். இவர், லக்ஷ்மியின் அண்ணன் ஆவார். நவகிரகத்தில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். அத்திரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் பிறந்தவர்களில் சோமன் என்பவரே சந்திரன் என்றும் புராணங்கள் கூறுகிறது. 

சந்திரன் மிக அழகானவர். இவர் தேவ குருவிடம் கல்வி கற்று பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர். இவர் ஒரு முறை மஹா விஷ்ணுவை குறித்து "ராஜ சூய யாகம்' செய்தார். சகல வெற்றிகளையும் தரும் இந்த யாகத்திற்கு ஏராளமான முனிவர்கள் வந்திருந்தனர். இவர்களுடன் தேவ குருவின் மனைவி தாரையும் வந்தாள். சந்திரனும், தாரையும் நேருக்கு நேர் பார்த்ததும் இருவரும் விரும்பத் தொடங்கினர். அதிர்ச்சி அடைந்த குரு, திருமாலிடம் முறையிட்டார். சீடன் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாதவராக அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட்டார். இதற்கிடையில் சந்திரனுக்கும் தாரைக்கும் புதன் என்ற குழந்தை பிறந்தது. பின்னர் திருமால் கூறியபடி குருவிடம் மனைவியை ஒப்படைத்தான் சந்திரன். தந்தை மீது புதனுக்கு வெறுப்பு ஏற்பட்டு இமயமலையில் கடும் தவம் செய்து கிரக பதவி அடைந்தான்.  இதைத் தவிர சந்திரன் இன்னொரு தவறும் செய்து விட்டான். தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன், "உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்," என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். இரண்டு சாபங்களும் சந்திரனை வாட்டி வதைத்தது. வருத்தம் அடைந்த அவன் திருமாலிடம் சென்று தன் குறையை கூறினான். அதற்கு பெருமாள், "சந்திரனே! நீ உடனே ஸ்ரீரங்கம், திரு இந்தளூர், தலைச்சங்க நாண்மதியம் ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி என்னை வழிபட்டால் உன் சாபம் நீங்கும்,'' என்றார். அவர் கூறியபடி ஸ்ரீரங்கம், திரு இந்தளூர் சென்று வழிபட்ட சந்திரன் கடைசியாக தலைச்சங்காடு வந்து குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டான். உடனே அவனுக்கு ஏற்பட்ட தோஷமும், நோயும் விலகியது. பெருமாள் அவனுக்கு காட்சி கொடுத்து அவனை அப்படியே தலையில் சூடிக் கொண்டார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment