About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - பதினொன்றாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

011 பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே|

மற்ற ஆழ்வார்களுக்கு இல்லா பல சிறப்புகள் ஆண்டாளுக்கு உண்டு. மற்ற ஆழ்வார்களுக்கு மத்தியில் ஆண்டாள் மட்டுமே பெண்ணானவள். செல்வாக்கும் மிக்கவள்.


பெண்களின் பருவங்களை ஏழு நிலைகளாகப் பிரிக்கலாம்

  • ஐந்தாம் வயதிலிருந்து ஏழாவது வயது வரை - பேதை
  • எட்டு வயதிலிருந்து 12 வயது வரை - பெதும்பை
  • 13 வயது மட்டும் - மங்கை
  • 14 வயதிலிருந்து 19 வரை - மடந்தை
  • 20 வயதிலிருந்து 25 வயது வரை- அரிவை
  • 26 வயதிலிருந்து 32 வரை - தெரிவை
  • அதன் பிறகு பேரிளம் பெண்

பகவத் விஷயங்களை வளர்த்துக் கொள்வதில் நமக்கு ஏழு நிலைகள் உள்ளன. அவை, அபிலாஷை, சிந்தனை, அனுஸ்ம்ருதி, இச்சா, ருசி, பரபக்தி, பரமபக்தி. ஒருப் பொருளைப் பார்த்ததும் அதன் மீது ஏற்படும் விருப்பம் அபிலாஷை எனப்படும். அதன் பிறகு வேறோர் இடத்தில், வேறோர் காலத்தில் மீண்டும் அந்த பொருள் பற்றி நினைவு வருவத்ற்குப் பெயர் சிந்தனை. இந்தச் சிந்தனை அதிக நேரம் நிற்காது. அதற்கு அடுத்து அப்பொருளைக் குறித்து சிந்தனைப் போராட்டம் ஏற்படும் நிலைக்கு அனுஸ்மிருதி எனப்படும். 


அனுஸ்மிருதிக்குப்பின் அப்பொருள் மீது இச்சை ஏற்படும். இச்சை நிலைக்குப் பின் அந்தப் பொருளை அடைய வேண்டும் என்ற நிலைக்கு ருசி எனப்படும். இந்நிலையில் எம்பெருமானுடன் கூடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். இறைவனுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற இன்ப நிலையான சேர்க்கையும், அப்பெருமானைப் பிரிந்திருக்க வேண்டும் என்ற துன்ப நிலையான பிரிவும் சேர்ந்தது பரபக்தி ஆகும். எம்பெருமானுடன் ஒன்றாக இருந்து வைகுண்டத்தில் பதவி வகிக்கும் நிலையே பரமபக்தி ஆகும். இந்த ஏழு நிலைகளும் ஒரு பெண்ணின் தன்மையிலிருந்தே வைழ்ணவத்தில் பேசப்படுகிறது

ஆண்டாள், பேதைப் பருவத்திலேயே ஆண்டவனுடன் கலக்கும் ஒரு நிலையையும் அடைந்து விடுகிறாள். பெருமாளின் வாத்சல்யம் அவளை எந்தவித பிரயத்னமும் இன்றி உத்தாரணம் செய்து விடுகிறது.

ஆண்டாள், வராகப் பெருமாளால் உத்தாரணம் பண்ணப்பட்ட பூமித்தாயார், அல்லவா? இறைவன் அவளின் பயத்தைப் போக்கி அவளை மடியில் இருத்தி வேதங்கள் அனைத்தும் ஓதுகிறார். அப்போது தாயாருக்கு ஒரு சந்தேகம். வேதம் அத்தனையும் கற்றுக் கொண்டு, பரம்பொருளைக் கண்டு பிடித்து, எம்பெருமானையடைய ஜீவன் மிகவும் சிரமப் பட வேண்டுமே என சந்தேகம்.

ஆகவே பெருமாளின் கட்டளைப்படி அவள் கோதை நாச்சியாராக பூவுலகில் பிறக்கிறாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில், ஒரு துளசி செடியின் கீழ் பூமாதேவி அவதாரமாக, ஆண்டாள் அவதரித்தாள். பெரியாழ்வார் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு தன் சொந்த பெண்ணை போல வளர்த்தார். பெரியாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனின் மீது அளவு கடந்த பக்தியும் பாசமும் வைத்திருப்பவர். அதை பார்த்து கொண்டு வளர்ந்த ஐந்து வயது குழந்தையான ஆண்டாளுக்கும் கண்ணன் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது. அவர் திருவடியை சென்று அடைய வேண்டும் என்று பாகவத பெண்களோடு மார்கழி நோன்பு இருந்து, வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்து என்று சொல்லும் அளவிற்கு, இன்றளவும் சுலபமாக சேவிக்க கூடிய அளவிற்கு திருப்பாவை 30, நாச்சியார் திருமொழி 143 என்ற அழகான இரண்டு பிரபந்தங்களையும் சின்ன வயதிலேயே கொடுத்தாள். 

பூமித் தாயை அதிகம் தவிக்க வைக்காமல், உத்தாரணம் பண்ணிய பெருமாளே. ஆண்டாளையும் மிகச் சிறு வயதிலேயே ஞானம் அடைய வைத்து திருப்பாவை என்ற வேதத்தின் சாரத்தை நமக்கு அளித்து விட்டு உத்தாரணம் செய்து விட்டார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “அந்த ஐந்து வயது குழந்தையான ஆண்டாளை போல நான் பிஞ்சிலேயே பழுக்கவில்லையே! அவளை போல கண்ணன் மீது தீராத அன்பு நான் வைக்கவில்லையே! அப்படிப்பட்ட ஆண்டாளைப் போல் சிறுபிராயத்திலேயே ஞானம் பெற்று எம்பெருமானை அடையவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment