About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

திவ்ய ப்ரபந்தம் – 1 - திருப்பல்லாண்டு 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் – 1 - பல்லாண்டு வாழ்க
திருப்பல்லாண்டு - முதலாம் பாசுரம் 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பல கோடி நூறாயிரம்*
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா!* 
உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு| (2)


அழகு முதலிய கல்யாண குணங்களுடன் கூடிய எம்பெருமானை, இந்த ஸம்ஸாரத்திலே கண்டு, அந்த எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயந்து, கால தத்வம் உள்ளவரை இப்படியே நன்றாக இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.

  • பல் ஆண்டு பல் ஆண்டு - பல பல வருஷங்களிலும் 
  • பல் ஆயிரத்து ஆண்டு - அநேக ப்ரஹ்ம கல்பங்களிலும் 
  • பல கோடி நூறு ஆயிரம் - இப்படி உண்டான காலமெல்லாம் 
  • மல் ஆண்ட - சாணூரன் முஷ்டிகன் ஆகிய மல்லர்களை வீழ்த்திய
  • திண் தோள் - வலிமை மிக்கத்  தோள்களை உடையனாய் 
  • மணி வண்ணா - நீல மணிபோன்ற திருநிறைத்தை உடையனானவனே!
  • உன் - உன்னுடைய 
  • செவ்வடி - சிவந்த திருவடிகளினுடைய 
  • செவ்வி - அழகுக்கு 
  • திருக்காப்பு - எக்குறையும் ஏற்படாததாக குறைவற்ற ரக்ஷை உண்டாயிடுக

வைகுண்டநாதனும், சர்வலோக ரக்க்ஷகனுமான எம்பெருமானுக்கே மங்களாஸாஸநம் பாடுகிறார் பெரியாழ்வார். நீல நிற மணி போன்ற எம்பெருமானுக்கு எந்த வகையிலும் ஆபத்து வந்து விடக் கூடாதே என்கிற அச்சத்தினால் விளைந்தது தான் இப்பல்லாண்டு பாசுரங்கள். மல்லர்களை அடக்கிக் கொன்ற பலம் பொருந்திய திருத்தோள்களையும் மாணிக்கத்தைப் போன்ற நிறத்தையும் உடைய எம்பெருமானே! உன்னுடைய சிவந்த திருவடிகளுக்குப் காலம் உள்ளவரை குறைவற்ற ரக்ஷை இருக்க வேண்டும். ஆழ்வார், முதலில் மனிதர்களின் காலக் கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, பிறகு தேவர்களின் காலக் கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, பிறகு ப்ரஹ்மாவின் காலக் கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, இறுதியாக பல பல ப்ரஹ்மாக்களின் காலக் கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, காப்பிடுகிறார் (ரக்ஷை செய்கிறார்). ஆழ்வாருக்கு எம்பெருமானிடம் இருக்கும் அலாதியான பிரேமையையும், பக்தியையுமே காட்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment