About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பகவானின் பிறவி விளையாட்டு|

சில வருடங்களில் கம்சன் தேவகியின் ஆறு குழந்தைகளைக் கொன்று விட்டான். ஏழாவது குழந்தை தேவகியின் கருவில் வளர்ந்து கொண்டிருந்தது. விஷ்ணுவின் ஓர் அம்சமான ஆதிசேஷன் தான் அந்த ஏழாவது குழந்தை. உலகில் தாம் அவதாரம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்று மகாவிஷ்ணு உணர்ந்தார். 


தம்முடைய பெரும் சக்தியான யோக மாயையை அவர் அழைத்தார். "தேவி, ஆயவர்களும், ஆய்ச்சியர்களும் வாழும் கோகுலத்திற்கு நீ உடனே செல். வசுதேவருடைய மற்றோரு மனைவி ரோகினி அங்கே தான் இருக்கிறாள். என்னுடைய ஆன்மீக அம்சமான ஆதிசேஷன் தேவகியின் கருவில் வளர்ந்து கொண்டிருக்கிறான். நீ கோகுலத்திற்கு சென்று தேவகியின் கருவில் உள்ள ஆதிசேஷனை ரோகிணியின் கருவில் வைத்து விடு. பிறந்த பிறகு அந்த குழந்தை பலராமன் என்று அழைக்கப் படுவான். நான் கிருஷ்ணன் என்ற பெயரில் தேவகியிடம் எட்டாவது குழந்தையாக பிறப்பேன். அதே சமயம் நீ நந்தருக்கும் யசோதைக்கும் மகளாகப் பிறப்பாய்" என்றார். 


பகவானின் கட்டளையை நிறைவேற்ற யோகமாயை பூமிக்கு இறங்கி வந்தாள். தேவகியை மயக்கத்தில் ஆழ்த்தி அவள் கருவில் இருந்த குழந்தையை ரோகிணியின் கருவுக்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் சிதைந்து விட்டது என்று எல்லோரும் நினைத்தார்கள். "ஐயோ! தேவகியின் குழந்தை போய் விட்டதே!" என்று அங்கு இருந்தவர்கள் ஓலமிட்டார்கள்.

பகவான் தேவகியின் கர்ப்பத்திற்குள் புகுந்தார். உடனே அவள் மிக்க அழகுடன் ஒளிர ஆரம்பித்தாள். மகாவிஷ்ணுவுக்கு தாயாக போகிறவள் அல்லவா அவள்! சிறையே அவள் ஒளியினால் பிரகாசிப்பதை கண்டு ஆச்சரியப்பட்டான் கம்சன். "நிச்சியமாக என்னுடைய மிகப் பெரிய எதிரியான நாராயணன் தான் அவளுடைய வயிற்றுக்குள் இருக்க வேண்டும். அவள் இத்தனை தெய்விக ஒளியுடன் விளங்கியதை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. நான் இப்பொழுது என்ன செய்வது? அவளைக் கொன்று விடட்டுமா! ஆனால் அவளோ ஒரு பெண்; அதிலும் என் தங்கை; அதோடு கர்ப்பமாக வேறு இருக்கிறாள். இந்த நிலையில் நான் அவளைக் கொன்றால் உலகம் என்னை நிந்திக்கும். இந்த பாவத்தினால் என் புகழ், செல்வம், ஆயுள் எல்லாம் மங்கி விடும்" என்று இப்படிப் பலவாறாகச் சிந்திக்க ஆரம்பித்தான். 


கடைசியில் அவளைக் கொல்லுவதில்லை என்று தீமானித்து எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று வெகு ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தான். பிறக்க போகும் குழந்தையைப் பற்றியே அவன் எப்பொழுதும் அச்சத்துடன் சிந்தித்துக் கொண்டு இருந்தான். ஏதாவது ஓர் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கு போது திடீரென்று தன் ஆசனத்தை உற்றுப் பார்ப்பான். ஆசனத்தில் எதோ ஒரு குழந்தை இருப்பது போல அவனுக்கு தோன்றும். "ஐயோ! குழந்தை மீது உட்கார இருந்தேனே! என்ன கோரம்!" என்று நினைப்பான். பிறகு தூங்குவதற்காக படுக்கையில் படுப்பான். அங்கும் ஒரு குழந்தை இருப்பது போலத் தோன்றும். இப்படியாக குழந்தையின் நினைவு அவனை வாட்டிக் கொண்டே இருந்தது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment