About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

001. திருவரங்கம் 
ஸ்ரீரங்கம் - திருச்சி 
முதலாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 249 - 3

ஸ்ரீ ஆண்டாள் 

038. திவ்ய ப்ரபந்தம் - 607 - என் சங்கு வளைகளைத் திருவரங்கர் கவர்ந்து விட்டாரே!
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - முதலாம் பாசுரம்
தாம் உகக்கும் தம் கையிற்* சங்கமே போலாவோ* 
யாம் உகக்கும் எம் கையில்* சங்கமும்? ஏந்திழையீர்!* 
தீ முகத்து நாகணை மேல்* சேரும் திருவரங்கர்* 
ஆ! முகத்தை நோக்காரால்* அம்மனே! அம்மனே| (2)

039. திவ்ய ப்ரபந்தம் - 608 - என் வளைகள் சுழல்கின்றனவே!
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
எழில் உடைய அம்மனைமீர்!* என் அரங்கத்து இன்னமுதர்* 
குழல் அழகர் வாய் அழகர்* கண் அழகர் கொப்பூழில்* 
எழு கமலப் பூ அழகர்* எம்மானார்* 
என்னுடைய கழல் வளையைத் தாமும்* கழல் வளையே ஆக்கினரே|

040. திவ்ய ப்ரபந்தம் - 609 - என் இடரை அவர் தீர்ப்பாரா?
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பொங்கு ஓதம் சூழ்ந்த* புவனியும் விண் உலகும்* 
அங்கு ஆதும் சோராமே* ஆள்கின்ற எம்பெருமான்* 
செங்கோல் உடைய* திருவரங்கச் செல்வனார்* 
எம் கோல் வளையால்* இடர் தீர்வர் ஆகாதே? (2)

041. திவ்ய ப்ரபந்தம் - 610 - என் வளை மீது அவருக்கு என்ன ஆசை?
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - நான்காம் பாசுரம்
மச்சு அணி மாட* மதில் அரங்கர் வாமனனார்* 
பச்சைப் பசுந் தேவர்* தாம் பண்டு நீர் ஏற்ற* 
பிச்சைக் குறையாகி* என்னுடைய பெய்வளை மேல்* 
இச்சை உடையரேல்* இத் தெருவே போதாரே?

042. திவ்ய ப்ரபந்தம் - 611 - என் பொருள் அவருக்கு எதற்கு?
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
பொல்லாக் குறள் உருவாய்ப்* பொற் கையில் நீர் ஏற்று* 
எல்லா உலகும்* அளந்து கொண்ட எம்பெருமான்* 
நல்லார்கள் வாழும்* நளிர் அரங்க நாகணையான்* 
இல்லாதோம் கைப்பொருளும்* எய்துவான் ஒத்து உளனே|

043. திவ்ய ப்ரபந்தம் - 612 - நான்மறையின் சொற்பொருளாய் நின்றவரன்றோ அவர்?
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
கைப் பொருள்கள் முன்னமே* கைக்கொண்டார்* 
காவிரிநீர் செய்ப் புரள ஓடும்* திருவரங்கச் செல்வனார்
எப் பொருட்கும் நின்று ஆர்க்கும்* எய்தாது*
நான் மறையின் சொற்பொருளாய் நின்றார்* 
என் மெய்ப்பொருளும் கொண்டாரே|

044. திவ்ய ப்ரபந்தம் - 613 - தம் நன்மைகளையே அவர் எண்ணுகிறாரே!
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
உண்ணாது உறங்காது* ஒலி கடலை ஊடறுத்துப்* 
பெண் ஆக்கை யாப்புண்டு* தாம் உற்ற பேது எல்லாம்* 
திண்ணார் மதில் சூழ்* திருவரங்கச் செல்வனார்* 
எண்ணாதே தம்முடைய* நன்மைகளே எண்ணுவரே|

045. திவ்ய ப்ரபந்தம் - 614 - அவர் எவ்வளவெல்லாம் பேசினார்!
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
பாசி தூர்த்தக் கிடந்த* பார்மகட்குப்*
பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா* மானம் இலாப் பன்றி ஆம்* 
தேசு உடைய தேவர்* திருவரங்கச் செல்வனார்* 
பேசியிருப்பனகள்* பேர்க்கவும் பேராவே| (2)  

046. திவ்ய ப்ரபந்தம் - 615 - அவரது ஊர் அரங்கமே
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
கண்ணாலம் கோடித்துக்* கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்* 
திண் ஆர்ந்து இருந்த* சிசுபாலன் தேசு அழிந்து* 
அண்ணாந்து இருக்கவே* ஆங்கு அவளைக் கைப்பிடித்த* 
பெண்ணாளன் பேணும் ஊர்* பேரும் அரங்கமே|

047. திவ்ய ப்ரபந்தம் - 616 - அவர் சொல் பொய்க்காது
நாச்சியார் திருமொழி - பதினொன்றாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
செம்மை உடைய* திருவரங்கர் தாம் பணித்த* 
மெய்ம்மைப் பெரு வார்த்தை* விட்டுசித்தர் கேட்டிருப்பர்* 
தம்மை உகப்பாரைத்* தாம் உகப்பர் என்னும் சொல்* 
தம்மிடையே பொய்யானால்* சாதிப்பார் ஆர் இனியே| (2) 

குலசேகராழ்வார்

048. திவ்ய ப்ரபந்தம் - 647 - கண்கள் திருவரங்கனைக் கண்டு என்று களிக்குமோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - முதலாம் பாசுரம்
இருள் இரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி* 
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த*
அரவு அரசப் பெருஞ் சோதி அனந்தன் என்னும்* 
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப் பெரு நகருள் தெண்ணீர்ப் பொன்னி* 
திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்*
கரு மணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு* 
என் கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே? (2)

049. திவ்ய ப்ரபந்தம் - 648 - பள்ளி கொண்டானை வாயார என்று வாழ்த்துவேனோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த* 
வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்* 
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை* 
கடி அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
மாயோனை மணத்தூணே பற்றி நின்று* 
என் வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே|

050. திவ்ய பிரபந்தம் - 649 – அரங்கனடியார்களோடு நெருங்கி வார்வேனோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி* 
ஈரிரண்டு முகமும் கொண்டு*
எம்மாடும் எழிற் கண்கள் எட்டினோடும்* 
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற* 
செம்பொன் அம்மான் தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* 
அணி அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
அம்மான் தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு* 
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே|

051. திவ்ய பிரபந்தம் - 650 – அரங்கனை அருச்சிக்கும் நாள் எந்நாளோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - நான்காம் பாசுரம்
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை* 
வேலை வண்ணனை என் கண்ணனை* 
வன் குன்றம் ஏந்தி ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர் ஏற்றை* 
அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப் பாவினை* 
அவ் வடமொழியை பற்று அற்றார்கள்* 
பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்* 
கொய்ம் மலர் தூய் என்று கொலோ கூப்பும் நாளே|

052. திவ்ய பிரபந்தம் - 651 – மணிவண்ணனை வணங்கும் நாள் எந்நாளோ!
பெருமாள் திருமொழி - முதலாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி* 
இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த*
துணையில்லாத் தொல் மறை நூல் தோத்திரத்தால்* 
தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த*
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ* 
மதில் அரங்கத்து அரவணையிற் பள்ளி கொள்ளும்*
மணிவண்ணன் அம்மானைக் கண்டு கொண்டு* 
என் மலர்ச் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment