||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் – 2 - பாஞ்ச சன்னியத்தை பாடு
திருப்பல்லாண்டு - இரண்டாம் பாசுரம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அடியோமோடும் நின்னோடும்*
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின் வல மார்பினில்*
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்*
சுடராழியும் பல்லாண்டு*
படை போர் புக்கு முழங்கும்*
அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே| (2)
இதில் எம்பெருமான் பரமபதம் ஸம்ஸாரம் என்னும் இரண்டு உலகங்களுடன் இருக்கும் இருப்புக்கு மங்களாசாஸனம் செய்கிறார்.
- அடியோமோடும் - அடியவர்களான எங்களோடும்
- நின்னோடும் - ஸ்வாமியான உன்னோடும்
- பிரிவின்றி - பிரிவில்லாமல்
- ஆயிரம் பல்லாண்டு - எந்நாளும் நித்தியமாய்
- வடிவாய் - அழகே உருவெடுத்தவளான
- நின் வல மார்பினில் - உன் வலது திரு மார்பினில்
- வாழ்கின்ற - பொருந்தி நின்றுள்ள
- மங்கையும் - பெரிய பிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமார்களும்
- பல்லாண்டு - பல்லாண்டு இருக்க வேண்டும்
- வடிவார் - உன் திருமேனியை வ்யாபித்திருக்கிற
- சோதி - சோதி மயமான வடிவுடைய
- வலத்து - உனது வலக்கையில்
- உறையும் - நித்யவாஸம் பண்ணுமவனாய்
- சுடர் - பகைவரை எரிக்குமவனான
- ஆழியும் – சக்கரமும் (திருவாழியாழ்வானும்)
- பல்லாண்டு - நீடூழி வாழ்க!
- படை - ஸேனைகளையுடைய
- போர் - யுத்தங்களில்
- புக்கு - புகுந்து
- முழங்கும் - கோஷிக்கின்ற
- அ - அளவற்ற பெருமையுடைய
- பாஞ்ச சன்னியமுன் – சங்கும் (ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானும்)
- பல்லாண்டே - நீடூழி வாழ்க
அடியார்களான எங்களுக்கும் ஸ்வாமியான உனக்கும் உள்ள ஸம்பந்தம் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய திருமார்பிலே எப்பொழுதும் இருப்பவளான அழகும் ஆபரணங்களும் இளமையும் பொருந்திய பெரிய பிராட்டியார் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய வலது திருக்கையிலே அழகும் ஒளியும் பொருந்தி இருக்கும் திருசக்கரத்தாழ்வானும் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய இடது திருக்கையிலே இருக்கும், யுத்தங்களிலே ஆயுதமாகப் புகுந்து எதிரிகளின் உள்ளத்தை சிதறடிக்கும் பெருத்த கோஷத்தை எழுப்பும் அந்த பாஞ்சஜந்யம் என்னும் திருச்சங்கம் எப்பொழுதும் இருக்க வேண்டும். ஆழ்வார் அடியார்களைச் சொல்லுவதன் மூலம் ஸம்ஸாரத்தையும், பிராட்டி, திருவாழி, திருச்சங்கத்தைச் சொல்லுவதன் மூலம் பரமபதத்தையும் சொல்லுகிறார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment