||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 75 - பண்டு காணி கொண்ட கைகள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - ஆறாம் திருமொழி - முதலாம் பாசுரம்
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப* மருங்கின் மேல்*
ஆணிப் பொன்னால் செய்த* ஆய் பொன்னுடை மணி*
பேணி பவளவாய்* முத்திலங்க*
பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி*
கருங்குழற் குட்டனே! சப்பாணி| (2)
- ஆணிப் பொன்னால் செய்த - தூய தங்கத்தால் செய்த
- ஆய் - வேலைப் பாட்டில் குறையும், தோஷமும் இல்லாதபடி ஆராய்ந்து செய்த
- பொன் மணி - பொன் மணிக் கோவையை
- உடை - உடைய அரை வடமும்
- மருங்கின் மேல் - இடுப்பின் மேலே
- மாணிக்கம் கிண்கிணி - உள்ளே மாணிக்கத்தை இட்ட அரைச் சதங்கை
- ஆர்ப்ப - ஒலி செய்யவும்
- பேணி - விரும்பி
- பவளம் - பவழம் போன்ற
- வாய் - வாயிலே
- முத்து - முத்துப் போன்ற பற்கள்
- இலங்க - பிரகாசிக்கவும்
- பண்டு - முன்பு ஒரு காலத்தில்
- காணி - பூமியை
- கொண்ட - மஹாபலிச் சக்ரவர்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்ட
- கைகளால் - திருக் கைகளாலே
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
- கரு - கரு நிறமான
- குழல் - கூந்தலையுடைய
- குட்டனே - குழந்தாய்!
- சப்பாணி - சப்பாணி கொட்டி அருள வேணும்
திருக்கால்களில் மாணிக்கக் கற்களை வைத்துக் கட்டப்பட்ட சதங்கைகள் எழுப்பும் ஒலியுடனும், சுத்தமான, தேர்ந்தெடுத்த பொன்னால் செய்த இடுப்பில் அணிந்த பொன் மணிக் கோவையுடனும், பவழ வாயில் பற்கள் முத்துப் போல் தெரியும் படியும், முன்பொரு சமயம் மகாபலி சக்ரவர்த்தியிடம் பூமியை பெற்றுக் கொண்ட அத்திருக் கைகளை சேர்த்துக் கொட்ட வேண்டும். கரு நிற கூந்தலுடைய பிள்ளாய் நீ கைகளை கொட்டி விளையாட வேண்டும்! என்கிறார் யசோதை பாவத்திலிருந்த ஆழ்வார். சப்பாணி என்பது குழந்தைகள் இரு கைகளையும் சேர்த்துக் கொட்டி விளையாடும் விளையாட்டாகும். குழந்தைகளின் அந்த வயதை சப்பாணிப் பருவம் என்றும் அழைப்பது வழக்கம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment