||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
020. திரு தஞ்சைமாமணி கோவில் (தஞ்சாவூர்)
இருபதாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 5
திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 953 - தஞ்சை மாமணிக் கோயிலை வணங்கு
பெரிய திருமொழி - முதலாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்*
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி*
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்**
வம்பு உலாம் சோலை மா மதிள்*
தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டு கொண்டேன்*
நாராயணா என்னும் நாமம்|
002. திவ்ய ப்ரபந்தம் - 1090 - உலகுய்ய நின்றான் இடம் கடல்மல்லை
பெரிய திருமொழி - இரண்டாம் பத்து - ஐந்தாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய்*
உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி*
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து*
விளையாட வல்லானை வரைமீ கானில்**
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்*
தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்*
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1576 - என் மனம் திருமாலையே போற்றும்
பெரிய திருமொழி - ஏழாம் பத்து - மூன்றாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
என் செய்கேன் அடியேன் உரையீர்*
இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்*
தஞ்சை ஆளியைப் பொன் பெயரோன்*
நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை**
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட*
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்*
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி*
என் மனம் போற்றி என்னாதே|
பூதத்தாழ்வார்
004. திவ்ய ப்ரபந்தம் – 2251 - எந்தை எழுந்தருளி உள்ள இடங்கள்
இரண்டாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
தமர் உள்ளம் தஞ்சை* தலை அரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை*
தமர் உள்ளும் மாமல்லை கோவல்*
மதிள் குடந்தை என்பரே* ஏ வல்ல எந்தைக்கு இடம்|
நம்மாழ்வார்
005. திவ்ய ப்ரபந்தம் - 3255 - தோழீ! ஊரார் பழிச் சொல் என்ன செய்யும்?
திருவாய்மொழி - ஐந்தாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
மாசு அறு சோதி* என் செய்ய வாய் மணிக் குன்றத்தை*
ஆசு அறு சீலனை* ஆதி மூர்த்தியை நாடியே**
பாசறவு எய்தி* அறிவு இழந்து எனை நாளையம்?*
ஏசு அறும் ஊரவர் கவ்வை* தோழீ என் செய்யுமே?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment