||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
021. திருநந்திபுர விண்ணகரம்
நாதன் கோயில் - கும்பகோணம்
இருபத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்
ஸ்ரீ ஜெகந்நாதன் பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீ செண்பகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ ஜெகந்நாதன் பெருமாள்
திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர்: விண்ணகரன், நாதநாதன்
- பெருமாள் உற்சவர்: ஜெகந்நாதன்
- தாயார் மூலவர்: செண்பகவல்லி
- திருமுக மண்டலம் திசை: மேற்கு
- திருக்கோலம்: வீற்றிருந்த
- புஷ்கரிணி/தீர்த்தம்: நந்தி
- விமானம்: மந்தர
- ஸ்தல விருக்ஷம்: செண்பகம்
- ப்ரத்யக்ஷம்: நந்தி, சிபி சக்கரவர்த்தி
- ஸம்ப்ரதாயம்: தென் கலை
- மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
- பாசுரங்கள்: 10
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக் கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக் கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை. கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திருநாமம் "செண்பகவல்லி' ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் "நாதன் கோயில்' என்று ஆனது.
நந்தி தேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு, "எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,'' என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர், "பூமியில் திருமகள் தவம் செய்து கொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,'' என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், "நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,''என்று அருள் பாலித்தார்.
சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள் பாலிக்கிறார். ஆரம்ப காலத்தில் கிழக்கு பார்த்து அருள் பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள் பாலிக்கிறார் என்று தல புராணம் கூறுகிறது. சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment