About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 5 November 2023

ஸ்ரீமத் பாகவத புராணம் - 15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

வியாஸ நாரத ஸம்வாதம் - 2

ஸ்கந்தம் 01

"பக்தியைத் தூண்டும் கிரந்தமா? ஒருவர் மனத்தில் பக்தியை எப்படித் தூண்ட முடியும்? புரியும் படி சொல்லுங்கள் முனி ஸ்ரேஷ்டரே" குழப்பத்தோடு வினவினார் வியாஸர்.


நாரதர் சொன்னார்,
"காமம், கோபம் பயம், துக்கம் மகிழ்ச்சி என்பது போல் பக்தியும் உணர்வு தானே? ஒரு கல்யாண வீட்டிற்குப் போனால் அங்கு நிலவும் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது. ஒரு துக்கம் நடந்த வீட்டிற்குப் போனால் நம்மையும் சோகம் பீடிக்கிறது. அது போல் பக்தி நிரம்பியவர்களைப் பார்த்தாலோ, அவர்களது சங்கம் கிடைத்தாலோ, அவர்கள் பக்தி செய்த விதத்தைக் கேட்டாலோ ஹ்ருதயத்தில் பக்தி தானே உண்டாகிறது."

உடனே வியாசர் கேட்டார்,

"சரி, உங்களுக்கெப்படி பக்தி வந்தது? அதைக் கேட்டால் எனக்கு ஓரளவுக்காவது புரிகிறதா என்று பார்க்கிறேன்."

அழகிய முறுவலைச் சிந்தி விட்டு பேசத் துவங்கினார் நாரதர்.

"நான் சென்ற பிறவியில், ஒரு சிறிய கிராமத்தில் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தேன். என் தாயார் இளம் விதவை. கிராமத்திலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து ஜீவனம் நடத்தி வந்தார். மிகவும் நல்லவர். ஸாது.

ஒரு சமயம் எங்கள் ஊருக்கு சில ஸாதுக்கள் வந்தனர். எங்கள் ஊர்ப் பெரியவர்கள் அவர்களை வரவேற்று ஊர் எல்லையில் இருக்கும் சத்திரத்தில் தங்க வைத்தனர். பின்னர் பஞ்சாயத்தில் பேசி, எங்கள் ஊர் நதி தீரமாக இருந்ததால் சாதுர்மாஸ்ய விரதத்தை அங்கேயே மேற்கொள்ளும்படி வேண்டினர்.

ஸாதுக்களும் ஊர் மக்களின் அன்பை ஏற்று எங்கள் ஊரிலேயே நான்கு மாதங்கள் தங்க ஒப்புக் கொண்டனர்.

அப்போது என் தாயார், வந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்று தவித்துக் கொண்டு கிராமத் தலைவர்களிடம் தான் தினமும் சென்று அந்த ஸாதுக்கள் தங்கும் சத்திரத்தை சுத்தம் செய்து மெழுகி, கோலம் போட்டு, விளக்கேற்றும் ஸேவையை செய்ய விரும்புவதாக வேண்டினாள். அவளது நல்ல சுபாவத்தை கருத்தில் கொண்டு, அந்த கைங்கர்யம் அவளுக்கே வழங்கப்பட்டது.

அவ்வளவு தான். என் தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வீட்டுக்கு வந்தவளுக்கு இருப்பே கொள்ளவில்லை. உறங்கவும் இல்லை. எப்போது பொழுது விடியும் என்று காத்திருந்து மூன்று மணியானதும் எழுந்து ஓடினாள். ஐந்தே வயதான என்னை குடிசையில் தனியே உறங்கும் படி விட்டுச் செல்லத் தயங்கினாள். எனவே, என்னையும் எழுப்பி அழைத்துக் கொண்டு போனாள்.

ஸாதுக்கள் ஆடி‌ மாத அமாவாசை முதல் மார்கழி அமாவாசை வரை சாதுர் மாஸ்ய விரதம் மேற்கொள்வார்கள். பொதுவாக பரிவ்ராஜக ஸன்யாஸிகள் மூன்று நாள்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்கக் கூடாதென்பது விதி. ஆனால் சாதுர்மாஸ்ய விரத சமயத்தில் மட்டும் நான்கு மாதங்கள் ஓரிடத்தில் இருப்பார்கள். அது மழைக் காலம் என்பதால் ஸன்யாஸிகள் சஞ்சாரம் செய்வதில் சிரமங்கள் உண்டு. மழையில் அலைந்தால் உடல் நிலை பாதிக்கலாம். உடல் நிலை பாதித்தால் சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது.

எப்போதும் அலைந்து கொண்டிருப்பதால், நான்கு மாதங்கள் ஓரிடத்தில் தங்கி தவம் செய்து ஆன்ம சக்தியைப் பெருக்கிக் கொள்வார்கள்.

ஜீவ ஹிம்ஸை என்பது அறவே கூடாது. மழைக் காலத்தில் சிற்சிறு பூச்சிகளும், புழுக்களும் மண்ணில் அலையும். நடப்பவர்கள் கால்களில் அவை மிதிபட்டால் ஜீவ ஹிம்ஸையாகி விடும்.

இவ்வாறு பல காரணங்களை உத்தேசித்து சாதுக்கள் ஒரே இடத்தில் நான்கு மாதங்கள் தங்குவார்கள்.

என் தாய் என்னையும் இழுத்துக் கொண்டு சாதுக்கள் வசிக்கும் சத்திரத்திற்கு ஓடினாள்."

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment