||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
காளிங்கன் மீது நடனம்|
ஒரு நாள் காலை கிருஷ்ணன் தன் நண்பர்களுடன், பசுக்களை மேய்ப்பதற்காக யமுனையை நோக்கி சென்றான். வழியில் சிறுவர்கள் நீண்ட நேரம் சிரித்து விளையாடினார்கள். நடுப்பகல் வந்ததும் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. ஆதலால் பசுக்களுடன் சில சிறுவர்கள் நதியை அடைந்தார்கள். அந்த நதியின் மடுவில் காளிங்கன் என்ற ஒரு கொடிய விஷப் பாம்பு வசித்து வந்தது. அந்த மடுவில் இருந்த தண்ணீர் முழுவதையும் அது விஷமாக்கி இருந்தது. மிகவும் தாகமாக இருந்ததனால் அந்தச் சிறுவர்கள் அந்த மடுவின் தண்ணீரைக் குடித்தார்கள். உடனேயே அவர்கள் எல்லோரும் நதிக்கரையில் இறந்து விழுந்தார்கள். தன் நணபர்கள் சிலர் அங்கு இல்லை என்பதைச் சிறிது நேரம் கழித்துத் தான் கிருஷ்ணன் உணர்ந்தான்.
அவனும் மற்றவர்களும் அவர்களைத் தேடிக் கொண்டு சென்றார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் மடு அருகில் வந்தார்கள். சிறுவர்கள் இறந்துக் கிடப்பதைப் பார்த்துக் கிருஷ்ணனுடன் வந்த சிறுவர்கள் அழ ஆரம்பித்தார்கள். கிருஷ்ணன் அவர்களைச் சமாதானப்படுத்தி தன்னுடைய தெய்விகப் பார்வையினால் இறந்த போன சிறுவர்களை உயிர்பெற்று எழச் செய்தான். அவர்கள் எழுந்து, ஒருரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு தான் நடந்த விஷ்யங்கள் அவர்களின் நினைவுக்கு வந்தன. கிருஷ்ணன் தான் தங்களைக் காப்பாற்றினான் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
கிருஷ்ணன் அந்த மடுவை உற்று நோக்கினான் யமுனையின் நீல நிறத் தண்ணீர், அங்கு மடுவில் பாம்பின் விஷம் காரணமாகக் கறுப்பாக மாறியிருந்தது. மடுவுக்கு மேலே பறந்து செல்லும் பறவைகள் செத்து வீழ்ந்திருந்தன. மடுவைச் சுற்றி இருந்த செடி கொடிகள் எல்லாம் அந்தப் பாம்பின் விஷம் காரணமாக அழிந்து விட்டிருந்தன. கிருஷ்ணன் தன் இடையில் உடுத்தி இருந்த வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு, ஒரு கதம்ப மரத்தின் மீதேறி அந்தப் பாம்புக்குச் சவால் விடுவது போல, தன் தோள்களைத் தட்டிக் கொண்டு, அந்த விஷ மடுவில் குதித்தான். கிருஷ்ணன் தன் பலமான கைகளால் தண்ணீரை அடித்து நீந்திய சப்தம் எங்கும் கேட்டது. அது மடுவில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் காளிங்கனை எழுப்பியது. தன் இருப்பிடத்திற்கு யாரோ படையெடுக்கிறார்கள் என்று அது தெரிந்து கொண்டு நிமிர்ந்து பார்த்தது. அங்கே தாமரைப் பாதங்களும், சிரித்த முகமும் மஞ்சள் ஆடையும் கொண்ட ஒரு சிறுவன் பயமின்றித் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த காட்சி அதற்கு தென்பட்டது.
நதிக் கரையிலிருந்து கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், பாம்பின் பெரிய படத்தைக் கண்டு நடுங்கினார்கள். அதைப் பற்றி யசோதையிடம் தெரிவிப்பதற்காகச் சிலர் வீட்டுக்கு ஒடினார்கள். செய்தி கேட்ட கோபர்கள் எல்லோரும் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் எல்லோரும் அங்கே ஒடி வந்தார்கள். மடுவில் பாம்பு கிருஷ்ணனைச் சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதையும், அவன் அசைவற்று இருப்பதையும் பார்த்தார்கள். பூனை எலியோடு விளையாடுவது போல கிருஷ்ணன் அந்தப் பாம்பு தன்னைச் சுற்றி வளைப்பதற்குப் பேசாமல் விட்டிருந்தான்.
காளிங்கன் இப்பொழுது கிருஷ்ணனை அமுக்கிக் கொல்லப் பார்த்தது. உடனே அவன் உடலைப் பெரிதாக்கிக் கொள்ளவே, அதனால் கிருஷ்ணனை அமுக்க முடியவில்லை. காளிங்கனுக்குக் கோபம் அதிகரித்தது. காளிங்கன் படம் எடுத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டு, தன் மூக்குத் துவாரங்களினால் விஷத்தைக் கக்கிற்று. தன் விஷப் பற்களினால் அவனைக் கடிக்கப் பார்த்தது.
ஆனால் கிருஷ்ணன் காளிங்கனிடமிருந்து தப்பித்துக் கொண்டு, தண்ணீரில் நகர ஆரம்பித்தான். கிருஷ்ணன் அந்த மடுவில் எல்லா இடங்களிலும் காணப்பட்டான். படம் எடுத்துக் கொண்டு, காளிங்கன் கிருஷ்ணனைத் துரத்தியது. பாம்பின் மீது கருடன் பாய்வது போல, கிருஷ்ணர் அதன்மீது பாய்ந்தார். காளிங்கன் தன் விஷப் பற்களால் கிருஷ்ணரைக் கடிக்க முயன்றான். ஆனால் கிருஷ்ணர், அதன் தலைகளை அழுத்திப் பிடித்து அவற்றின் மேல் ஏறினார். பாம்பின் தலையில் இருந்த ரத்தினங்களின் ஒளியினால் பிரபுவின் பாதங்கள் சிவந்து காணப்பட்டன. பின்பு, கலைஞர்களுக்கு எல்லாம் ஆதி கலைஞரான ஸ்ரீ கிருஷ்ணர், விஷப் பாம்பான காளிங்கனின் மீது நடனமாடினார். இதைக் கண்ட வாணவர்கள், பூச்சொரிந்து, மத்தளங்கள் முழக்கி, குழல்களை இசைத்து, துதிகளையும் பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறாக வானுலக வாசிகளான கந்தவர்கள், சித்தர்கள் மற்றும் தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
கிருஷ்ணர் தன் தலைகளில் நடனமாடிய போது, காளிங்கன் அவரைத் தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான். காளிங்கனுக்கு நூறு தலைகள் இருந்தன. ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, தன் காலால் அதன் தலைகளில் அடித்த போது, காளிங்கனால் அந்த அடிகளைத் தாங்கி கொள்ள முடியவில்லை. அது உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு, தன்னில் இருந்த விஷத்தைக் கக்கிய போது அதன் பாவங்கள் குறையத் தொடங்கின. பின்பு அது, விஷத்துக்குப் பதிலாக இரத்தத்தை கக்கத் தொடங்கியது.
அப்போது, காளிங்கனின் மனைவிகளான நாக பத்தினிகள், கிருஷ்ணர் தம் கணவனை உதைத்து அடக்குவதைக் கண்டனர். அவர்கள் கிருஷ்ணரைச் சரண் அடைந்து, தம் கணவனான காளிங்கனை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். கிருஷ்ணர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காளிங்கனை நோக்கி, உடனே அந்த இடத்தை விட்டு தாமதிக்காமல்; மனைவி பிள்ளைகளுடன் சமுத்திரத்திற்குப் போய் விடுமாறும், யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக் கூடாதெனவும் கட்டளை இட்டார். காளிங்கனும் அவனது மனைவி பிள்ளைகளும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றனர். அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நானும் என் நண்பர்களும் நீராடிய காளிங்க ஏரியில் ஒருவர் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தாலும் அவரின் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment