||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
037 அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியாரைப் போலே|
சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு வீரராகவர், கமலாயர் தம்பதிகளுக்கு நான்காவதாக பிறந்த திருக்கச்சி நம்பிகள் அவர்களின் இயற்பெயர் கஜேந்திர தாசர். வணிகம் செய்யும் குலத்தில் பிறந்தவர், அவரது சகோதரர்கள் மூவரும் பொருளீட்டுவதில் விருப்பத்துடன் இருப்பினும், கஜேந்திரதாசர் காஞ்சியில் உறையும் வரதராஜப் பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கரியம் செய்வதிலேயே தன் வாழ்வினை கழித்ததார். தன் தந்தை கொடுத்த செல்வத்தினை பெருமாளுக்கு சேவை செய்வதில் உபயோகித்ததால் தந்தை கோவம் கொள்ள, வீட்டை துறந்த திருக்கச்சி நம்பிகள், காஞ்சி சென்று பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார். பெருமாளுக்கு சரீரம் மூலம் செய்யும் கைங்கர்யமே பெரிய கைங்கர்யமாகும் என வாழ்ந்து வருபவர்.
தினமும் காஞ்சிக்கு சென்று கைங்கர்யம் செய்துவந்த நம்பிகள், முதுமையினால் காஞ்சி செல்ல முடியாது வருந்திய போது, பெருமாள் இவருடைய இல்லத்திலேயே வைணவ திவ்யதேசங்களில் முதன்மையாக போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கச்சி (காஞ்சி) ஆகிய தலங்களில் உறைகின்ற காட்சியும் கொடுத்து முக்தியும் அருளினார். அத்தலமே இன்று பூந்தமல்லி பேருந்துநிலையம் அருகில் திருக்கச்சி நம்பிகள் சமேத வரதராசப் பெருமாள் கோயில் என வழிப்பாட்டில் இருந்து வருகிறது. காஞ்சி வரதராசப் பெருமாள் மீது "தேவராஜ அஷ்டகம்" எனும் வடமொழியில் அமைந்த நூலை இயற்றியவர் திருக்கச்சிநம்பிகள் ஆவார்.
தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் நேரடியாக தேவப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடும் அளவிற்கு பெருமாள் மற்றும் தாயாரின் அருளையும் நம்பிக்கையையும் பெற்றவர். இராமானுஜருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.
ஒரு நாள் ஸ்ரீராமானுஜர், அவரிடம் சில சந்தேகங்களைக் கேட்டார். திருக்கச்சியார் மயிலிறகால் செய்யப்பட்ட அந்த பெரிய ஆலவட்டத்தைத் தூண் மீது சாய்த்துவிட்டு வந்தார். அவர் ஸ்ரீராமானுஜரைப் பார்த்து, "நான் முதலில் ஸ்ரீரங்கப் பெருமாளுக்கு ஆலவட்டம் வீசச் சென்றேன். அவரோ, தான் காவிரிக்கரையில் இருப்பதாகவும், திருமலை வெங்கடநாதனுக்கு ஆலவட்டம் வீசச்சொன்னார். ஆனால், அந்த திருவேங்கடநாதனோ, தான் மலைகள் சுழ்ந்த இடத்தில் இருப்பதாகவும், யாகக்குண்டங்கள் நிறைந்த காஞ்சியில் இருக்கும் எம்பெருமானுக்கு ஆலவட்டம் வீசச் சொன்னார். காஞ்சியில் எனது கைங்கர்யம் தொடருகிறது. அதனாலேயே, எம்பெருமானிடம் பேசும் பாக்கியம் கிடைத்தது" என்றார்.
ஸ்ரீராமானுஜர், "என்னிடம் ஆறு கேள்விகள் உள்ளன. அதற்கான பதிலை, பெருமாளிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார்.
அவரது ஆறு கேள்விகள்
- 1) பரம்பொருள் என்பவர் யார்?
- 2) நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உண்மை தத்துவம் எது?
- 3) பரமனை அடைவதற்கான உபாயம் எது?
- 4) மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா?
- 5) மோட்சம் பெறுவது எப்போது?
- 6) குருவாக யாரை ஏற்பது?
ஸ்ரீராமானுஜர் எழுப்பிய சந்தேகங்களை திருக்கச்சியார் பெருமாளிடம் கேட்க, அவர் உரைத்த பதில்கள்.
விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை தந்துவங்களாயின:
- 1. அஹமேவ பரம் தத்துவம் - பரம்பொருள் நாமே! அனைவரும் அடைய வேண்டிய பரம்பொருள் நாமே! நாமே உயர்ந்த தத்துவம் (நாராயணனே பரம் பொருள்).
- 2. தர்சநம் பேத ஏவச - ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம். பேதமை தர்சனம் எதுவும் மாயை அல்ல. எல்லாமே உண்மை. விசிஷ்டாத்வைதமாகிய ஆத்மா இறைவன். இதுபற்றிய வேறுபாடே தத்துவம்.
- 3. உபாயேஷு ப்ரபத்திஸ்யாத் - சரணாகதியே மோட்சத்திற்கான சிறந்த வழி. உபாயம் ப்ரபத்தியே. அகங்காரத்தை விடுத்து இறைவனை சரணடைவதே உபாயம். அதாவது பிரபத்தி எனும் சரணாகதியே உபாயம்.
- 4. அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் - அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இறக்கும் தறுவாயில் மட்டும் இறைவனை எண்ணினால் போதாது. உடல் நன்றாக திறனோடு இருக்கையிலேயே இறைவனை நினைத்தால் போதும். முழுமையாக சரணமடைந்தவன் தன் இறுதி காலத்தில், தன் நேரம் நெருங்கும் வேளையில், நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை. அவ்வாத்மாவுக்கு மோக்ஷம் நிச்சயம்.
- 5. தேஹாவஸாகே முக்கிஸ் யாத் - சரீர முடிவில் மோட்சமுண்டு. சரணடைந்த பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும். பாவங்கள் கழியும் வரை காத்திருக்கும் அவசியம் ஆத்மாவிற்கு இல்லை. சரீரம் விடுகையில் மோட்சம். சரணம் அடைந்தவருக்கு உடலை விடுகையில் மோட்சம்.
- 6. பூர்ணாசார்ய ஸ்மாச்ரய - பெரிய நம்பிகளையே குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல். (இப்படி ஒரு பதிலைத்தான் ராமானுஜம் எதிர்பார்த்தார்)
இந்த “ஆறு வார்த்தைகளை” தாமே குரு போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். இவ்வாறு இராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இப்படி எம்பெருமானிடம் நேரில் பேசும் பாக்கியத்தை நான் பெற்றேனோ திருக்கச்சியார் போலே|!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment