||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
தேனுகாசுரன் வதம்|
கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் இப்போது ஆறு வயது ஆயிற்று. ஆகவே பசுக்களை மேய்க்கும் பொறுப்பும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாள் கிருஷ்ணனின் நண்பர்களில் ஒருவனான ஸ்ரீதாமா அவனைப் பார்த்து, "கிருஷ்ணா! பக்கத்தில் ஒரு பெரிய பனந்தோப்பு இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே மரங்களில் அழகான பழங்கள் உள்ளனவாம். அவை மிகவும் ருசியாக இருக்குமாம். ஆனால் அவை நமக்குக் கிடைக்காது. ஏனென்றால் தேனுகாசுரன் என்ற ஒரு கொடிய அசுரன் அந்தத் தோப்பைப் பாதுகாத்துக் கொண்டு அங்கேயே குடியிருந்து வருகிறான். அவன் மனிதர்களையும் சாப்பிடுவான். ஆதலால் யார் அங்கே சென்றாலும் அவர்களை விழுங்கிவிடுகிறான். பசுக்கள், பறவைகள் கூட அங்கே செல்வதில்லை. ஆனால் அந்தப் பனம்பழங்கள் மிகவும் ருசியாக இருக்கும். அவற்றின் வாசனை இங்கே கூட அடிக்கிறது. நம் நண்பர்கள் எல்லோரும் அந்தப் பழங்களைச் சாப்பிட மிகவும் ஆசையாக இருக்கிறார்கள். உன்னால்தான் எங்கள் ஆசையை நிறைவேற்றி வைக்க முடியும். நீ எங்களுக்கு அந்த பழங்களைக் கொண்டுவருவாயா?" என்று கேட்டான்.

தன் நண்பர்களுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருந்த கிருஷ்ணன் இதைக் கேட்டு சிரித்தான். தன் நண்பர்களுடன் அந்தத் தோப்பை நோக்கி நடந்தான். தோப்புக்குள் நுழைந்ததும் பலசாலியான பலராமன், ஒரு யானையைப் போல மரங்களை உலுக்கினான். பழங்கள் கொத்துக் கொத்தாகக் கீழே விழுந்தன. சப்தத்தைக் கேட்டதும் தேனுகாசுரன் ஒரு கழுதையின் உருவம் எடுத்துக் கொண்டு அங்கு வேகமாக ஓடி வந்தான். மிகுந்த கோபத்தோடு பலராமனை நோக்கி விரைந்து , அவன் மார்பில் தன் காலால் உதைத்தான். பிறகு கழுதைப் போலக் கத்திக் கொண்டே எல்லாச் சிறுவர்களையும் பயமுறுத்தத் தொடங்கினான். திரும்பவும் அவன் பலராமனைத் தாக்கப் போனான். ஆனால் பலராமன் இப்போது சண்டைக்குத் தயாராக இருந்தான்.
பலராமன் அந்தக் கழுதையின் இரு பின்னங்கால்களையும் பற்றி அதைத் தலைக்கு மேலே, கரகரவென்று சுற்றி அதை மரங்களில் மோதினான். அந்தப் பலத்த அடியால் அசுரன் மாண்டான். தலையும் உடலும் சிதைந்து அசுரன் கீழே விழுந்தான். அப்பொழுது சில பனை மரங்கள் உடைந்து கீழே சாய்ந்தன. இதைக் கேள்விப்பட்ட தேனுகாசுரனுடைய உறவினர்கள் கழுதை உருவில் வந்து பலராமனையும் கிருஷ்ணனையும் தாக்க ஆரம்பித்தார்கள். ஆனால் பலராமனும் கிருஷ்ணனும் மிகவும் சுலபமாக அவர்கள் எல்லோரையும் கொன்று விட்டார்கள். இவ்வாறு பனத் தோப்பில் இருந்த எல்லா அரக்கர்களும் அழிக்கப்பட, சிறுவர்கள் தங்கள் ஆசைதீரப் பனம் பழங்களைச் சாப்பிட்டனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment