About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 31 August 2023

திவ்ய ப்ரபந்தம் - 24 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 24 - ஒளி விரல்கள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

முத்தும் மணியும்* 
வயிரமும் நன் பொன்னும்*
தத்திப் பதித்துத்* 
தலைப் பெய்தாற் போல்* 
எங்கும் பத்து விரலும்* 
மணி வண்ணன் பாதங்கள்* 
ஒத்திட்டிருந்தவா காணீரே* 
ஒண் நுதலீர்! வந்து காணீரே| 

  • முத்தும் - முத்துக்களையும்
  • மணியும் - ரத்நங்களையும்
  • வயிரமும் - வஜ்ரங்களையும்
  • நல்பொன்னும் - மாற்றுயர்ந்த பொன்னையும்
  • தத்திப்பதித்து - மாறி மாறிப் பதித்து
  • தலைப் பெய்தாற் போல் – சேர்த்தாற் போலே
  • எங்கும் - திருமேனி எங்கும்
  • மணிவண்ணன் - மணி போன்ற நிறத்தை உடையவனான கண்ணனுடைய
  • பாதங்கள் - திருவடிகளில் உள்ள
  • பத்து விரலும் - விரல் பத்தும்
  • ஒத்திட்டு இருந்தவா காணீரே - ஒன்றோடு  ஒன்று ஒத்து அமைந்திருக்கும் படியை வந்து பாருங்கள் 
  • ஒண்ணுதலீர்!  - ஒளி பொருந்திய நெற்றியை உடைய பெண்களே!
  • வந்து காணீரே -  வந்து பாருங்கள்

யசோதை, நீலமணிவண்ண உடலுடைய கண்ணபிரானின் பாதங்களில் உள்ள பத்து விரல்களுக்கும் முத்து, மரகதம், வைரம், வைடூர்யம், கோமேதகம், நீலம், பவழம், புஷ்பராகம், மாணிக்கம் போன்ற நவரத்தினங்கள் மற்றும் தூய பசுந் தங்கத்தையும் ஒன்றாய் கலந்து கூட்டி வைத்ததைப் போன்று இருக்கின்ற அழகினை ரசித்து மகிழ்கிறாள். திருப்பாதங்களில் ஜ்வலிக்கும் இந்த வர்ணங்களுடன் கண்ணனின் திருமேனியின் மணிவர்ணமும் சேர்ந்திருந்தது மிகவும் ஒத்து இருந்ததாம். இப்பேரின்பக் காட்சியை காணுமாறு அங்கிருக்கும் ஆபரணங்களால் பிரகாசிக்கும் நெற்றியை உடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment