||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 25 - வெள்ளித் தண்டை பிரகாசிக்கின்ற
கணைக் கால்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
பணைத் தோள் இளவாய்ச்சி*
பால் பாய்ந்த கொங்கை*
அணைத்தார உண்டு*
கிடந்த இப் பிள்ளை*
இணைக் காலில் வெள்ளித்*
தளை நின்றிலங்கும்*
கணைக் காலிருந்தவா காணீரே*
காரிகையீர்! வந்து காணீரே|
- பணை - மூங்கில் போன்ற
- தோள் - தோள்களை உடைய
- இள - இளமைப் பருவத்தை உடைய
- ஆய்ச்சி - யசோதையினுடைய
- பால் பாய்ந்த - பால் சொரிகிற
- கொங்கை - மார்பை
- அணைத்து - திருக்கையால் அணைத்துக் கொண்டு
- ஆர - வயிறு நிரம்ப
- உண்டு - பாலை அமுது செய்து
- கிடந்த - களித்துக் கிடக்கின்ற
- இப் பிள்ளை - இந்தக் கண்ணபிரானுடைய
- இணை - ஜோடியாக சேர்ந்து உள்ள சேர்த்தியழகு அமைந்த
- காலில் - திருபாதத்தில்
- வெள்ளி தளை நின்று - வெள்ளித் தண்டை நின்று
- இலங்கும் - பிரகாசிக்கிற
- கணைக்கால் இருந்தவா காணீரே - கணைக்கால் அழகை வந்து பாருங்கள்
- காரிகையீர் - அழகுடைய பெண்களே!
- வந்து காணீரே - வந்து பாருங்கள்
மூங்கிலைப் போன்று வழவழப்பும் உறுதியும் கொண்ட செழிப்பான தோள்களையுடைய, இளம் வயதுடைய யசோதை ஆய்ச்சியினை தன் திருகரத்தினால் ஆதரவாய் அணைத்துக் கொண்டு, அவளிடம் பசியாற நிறைவாய் சுரந்திருந்த தாயமுதத்தினை வயிறார உண்டு, படுத்துறங்கும் இந்த பச்சிளம்பிள்ளையின், இரண்டு கால்களிலும், வெள்ளியால் செய்த கால்சிலம்பு, அவன் வண்ணத்திற்கு ஏற்றாற்போற் எடுப்பாய் மின்னுகின்ற அந்த கணுக்காலின் அழகினை, அந்த பேரானந்த நிலையை ரசிக்கிறாள் யசோதை. அப்படியே அங்கிருக்கும் அழகிய பெண்களையும்
வந்து பார்க்குமாறு அழைக்கிறாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment