About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 31 August 2023

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

038 அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே|

கலிகாலம் பிறந்து 343வது வருடமான துர்மதி வருஷம், திருச்சி அருகே உள்ள நிசுளாபுரி எனும் உறையூரில் திருப்பாணாழ்வார் தோன்றினார். வயலில் பயிர்களுக்கு நடுவே தோன்றிய திருப்பாணரை, பாணன் என்கிற குலத்தைச் (பண்ணிசைத்து பாடுபவர்கள்) சேர்ந்த தம்பதியினர் வளர்த்தால், இவர் ‘திருப்பாணர்’ ஆனார். 

சிறு வயது முதலே, பெரிய பெருமாளிடம் ஞானத்தோடு கூடிய பக்தி இவருக்கு உண்டாயிற்று. தான் பாணர் குலத்தவர் என்பதால், கோயிலுக்குள் செல்லாமல், காவேரி தென் கரையில் நின்று கொண்டு வீணையை மீட்டி பாடி பெருமாளை அனுதினமும் மகிழ்வித்தார்.


திருப்பாணரை கோவிலுக்குள் அழைத்து வர விரும்பிய ஸ்ரீ ரங்கநாதன், அதற்கும் வழி செய்தான். ஒரு நாள், என்றும் போல், திருப்பாணர் காவேரியாற்றின் கரையில் நின்று, தன்னிலை மறந்து, பெருமாளை எண்ணி பாடல் பாடிக் கொண்டிருந்தார். அப்போது பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தம் எடுப்பதற்காக குடத்தை எடுத்துக் கொண்டு லோக சாரங்க மாமுனிவர் அங்கு வந்தார். இவரைக் கண்டவுடன் ‘தூரப்போ’ என்றார். ஆனால், பக்தியில் தன்னிலை மறந்து பாடிக் கொண்டிருந்த திருப்பாணருக்கு அம்முனிவர் சொன்ன சொல் காதில் விழவில்லை. முனிவரும் கோபமுற்று ஒரு கல்லை எடுத்து திருப்பாணர் மேல் வீசினார். அந்தக் கல் இவர் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. பின்னர் சற்று நேரம் கழித்து மெதுவாக திருப்பாணாழ்வார் கண் விழித்துப் பார்த்தார். நடந்ததை தெரிந்து கொண்டார். ஏதும் கூறாமல், வழி விட்டுச் செல்ல, திருமஞ்சனத்திற்கான தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பெரிய பெருமாளின் சந்நதிக்குள் சென்றார் லோகசாரங்க மாமுனிவர். அங்கு பெருமாளின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டு லோக சாரங்க மாமுனிவர் அதிர்ந்தார்.

திகைத்து நின்ற மாமுனிவரைப் பார்த்து, ‘‘என் அருமை பக்தனை இப்படி கல்லால் அடிக்கலாமா? என்னைக் குறித்து கானம் செய்து பக்தியில் திளைத்த யாவருமே என் அடியார்கள் அல்லவா. அப்படிப்பட்ட திருப்பாணரை ஏன் கல்லால் அடித்தீர்!?’’ என்று கோபத்தோடு கேட்டார் பெருமாள்.

லோக சாரங்க முனிவர் மிகவும் வருந்தினார். பெருமாள் உடனே லோக சாரங்க மாமுனிவரிடம் பாணரைத் தம் சந்நதிக்கு அழைத்து வருமாறும், அவரை எப்படி அழைத்து வரவேண்டு மென்றும் கூறி உத்தரவிட்டார். மறுநாள் காலை, எம்பெருமானின் நியமனத்தை சிரமேற் கொண்டு முனிவர் முதலில் திருக்காவேரியில் நீராடினார். கைகளை கூப்பிக் கொண்டே, வீணையுடன் பாடிக் கொண்டிருந்த திருப்பாணரை நோக்கிச் சென்றார். நேற்று நடந்ததற்கு மன்னிப்பு வேண்டி நின்ற லோகசாரங்க மாமுனிவர், திருப்பாணரிடம், ‘‘நம்பெருமாள் தங்களை ஸ்ரீரங்கத்து கோவிலுக்குள் கொண்டு வரவேணும் என்று அடியேனை நியமித்து இருக்கிறார்’’ என்று விண்ணப்பம் செய்தார்.

பதறிப் போன திருப்பாணாழ்வார், தன்னுடைய குலத்தைக் கருதி, திருவரங்க பெருநகரை அடியேன் எப்படி மிதிப்பது என்று தயங்கி பின் வாங்கினார்.  லோகசாரங்க மாமுனிவர் உடனே ‘‘அப்படியானால் அடியேனுடைய தோளின் மேல் எழுந்தருளும். நம்பெருமாளை தரிசிக்கலாம்! இது நம்பெருமாளின் கட்டளை!’’ என்றார்.

திருப்பாணாழ்வாரும் எம்பெருமாளின் நியமனமாக இருப்பதால் தட்ட முடியாமல் வர இசைந்தார். தனது திருத்தோள்களில் திருப்பாணரை சுமந்து கொண்டு திருவரங்க கோயிலில் இருக்கும் அழகிய மணவாள திருமண்டபத்திற்குள்ளே புகுந்தார் முனிவர். 

திருப்பாணாழ்வாருக்கு நம்பெருமாள் தன்னுடைய திவ்ய மங்கள சொரூபத்தைக் காட்டி அருளினார். திருப்பாணாழ்வாரும் திருவடி முதல் திருமுடி வரை பெருமாளைக் கண்ணாரக் கண்டு அனுபவித்தார்.

உடனேயே, ‘அமலனாதிபிரான்’ என்கிற திவ்ய பிரபந்தமாக தமது அனுபவத்தை உலகு உய்ய வெளியிட்டருளினார். இவர் அருளியது பத்து பாசுரங்களே.

கொண்டல் வண்ணனைக்* 
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்*  
என் உள்ளம் கவர்ந்தானை,* 
அண்டர் கோன் அணி அரங்கன்*  
என் அமுதினைக் கண்ட கண்கள்*  
மற்று ஒன்றினைக்* காணாவே. 

என்று பத்துப் பாசுரங்களையும் பாடி முடித்தார். திருப்பாணாழ்வார் கடைசிப் பாகத்தில் ‘அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே’ என்ற இறுதி அடியைப் பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து, பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "பெரிய பெருமாள் மேனியோட திருப்பாணர் கலந்துட்டாரே. அப்படி அவருடைய மேனியோட சேரும் பாக்கியம் பெற்றேனா? பண்ணிசைத்து பெருமாளின் புகழ் பாடி, அவனருளைப் பெற்று, பெருமாளுடன் கலந்தேனா இல்லையே!!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment