||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 34 - சங்கு சக்கரம் நிலவும் கைத்தலங்கள்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பன்னிரெண்டாம் பாசுரம்
மைத்தடங் கண்ணி*
யசோதை வளர்க்கின்ற*
செய்த்தலை நீல நிறத்துச்*
சிறுப்பிள்ளை*
நெய்த்தலை நேமியும்*
சங்கும் நிலாவிய*
கைத்தலங்கள் வந்து காணீரே!*
கனம் குழையீர்! வந்து காணீரே|
- மை - மையணிந்த
- தட - பெரிய
- கண்ணி - கண்களையுடைய
- அசோதை – யசோதைப் பிராட்டியாலே
- வளர்க்கின்ற – வளர்க்கப் படுகின்றவனாய்
- செய் தலை - உயர்ந்த க்ஷேத்ரத்திலே அலர்ந்த
- நீலம் நிறம் - கருநெய்தல் பூவினது போன்ற நிறத்தையுடையவான
- சிறுபிள்ளை - இந்த பாலக்ருஷ்ணனுடைய
- நெய் - கூர்மை பொருந்திய
- தலை - நுதியையுடைய
- நேமியும் - திருவாழியும்
- சங்கும் - திருச்சங்கும்
- நிலாவிய – அமைந்திரா நின்றுள்ள
- கைத்தலங்கள் வந்து காணீரே - உள்ளங்கைகளை வந்து பாருங்கள்
- கணம் - பொன்னால்செய்த
- குழையீர் வந்து காணீரே - காதணிகளையுடைய பெண்களே! வந்து பாருங்கள்
மை அணிந்த கருமையான பெரிய அழகான கண்களை கொண்டவளான யசோதை அன்னை, கண்ணனை வைத்த கண் வாங்காமல் பார்த்துப் பார்த்து வளர்ப்பாளாம் . அதனாலாயே கண்ணனின் திருமேனி அவள் கண்விழி நிறம் அல்லது நீர் நிறைந்த வயல் வெளிகளில் வளரக் கூடிய நீலம் என்னும் மலர்ந்த கருங்குவளை பூவின் நிறம் போல் ஆகிவிட்டதோ என முன்னோர்களின் ரசனையான கருத்தும் கூட. கண்ணன் சில சமயங்களில் யசோதைக்கு சங்கு சக்கரங்களை கைகளில் ஏந்தியவாறு காட்சி தருவானாம். மேலும் அவன் கைகளில் மஹாபுருஷ லக்ஷணங்களான சங்கு சக்கர ரேகைகள் அமைந்திருந்ததாம். கூர்மையான நுனிகளுடைய திருச்சக்கரமும் திருச்சங்கும் ஏந்திய கண்ணனின் செழுமையான உள்ளங்கைகளை வந்து காணுமாறு பொன்னாலான கனமான குண்டலங்களை அணிந்திருந்த பெண்களை அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment