||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 36 - ஆய்ச்சியர் விரும்பும் அழகிய சிவந்த வாய்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதிநான்காம் பாசுரம்
எந்தொண்டை வாய்ச் சிங்கம்*
வா என்றெடுத்துக் கொண்டு*
அந்தொண்டை வாய்*
அமுதாதரித்து*
ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால்*
தருக்கிப் பருகும்*
இச் செந் தொண்டை வாய் வந்து காணீரே!*
சேயிழையீர்! வந்து காணீரே|
- எம் - எமது
- தொண்டை - கோவைப்பழம் போன்ற
- வாய் - அதரத்தை உடைய
- சிங்கம் - சிங்கக்குட்டியே
- வா என்று - எம் பக்கம் வா என்று
- எடுத்துக் கொண்டு - இடுப்பில் எடுத்துக் கொண்டு
- அம் தொண்டை - அழகிய சிவந்த
- வாய் - கண்ணனுடைய அதரத்தில்
- அமுது - ஊறுகிற அம்ருதத்தை
- ஆதரித்து - மிகுந்த அன்பினால் விரும்பி
- ஆய்ச்சியர் - இடைப்பெண்கள்
- தம் - தங்களுடைய
- தொண்டை வாயால் - கோவை வாயால்
- தருக்கி பருகும் - கண்ணன் வாயோடு நெருக்கி விரும்பி சுவைக்கும்
- இச் செம் தொண்டை வாய் வந்து காணீரே - இந்தச் சிவந்த கோவை வாயழகை வந்து பாருங்கள்!
- சேயிழையீர்! - சிவந்த ஆபரணம் பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களே!
- வந்து காணீர்! - வந்து பாருங்கள்
இடைப்பெண்கள், கண்ணனின் வாயழகில் மயங்கி, கோவைப்பழம் போல் சிவந்த நிறமுடைய என் சிங்கமே'', என்னிடம் வாடா என்று கொஞ்சி அவனை அழைத்து, கையிலெடுத்து அள்ளி இடுப்பில் எடுத்து அணைத்துக் கொண்டு, மிகுந்த அன்போடு தங்கள் இதழ்களால் முத்தமிட்டு, கிடைக்காத அரிய செல்வம் கிடைத்துவிட்ட செருக்குடன் அவன் வாயோடு முத்தம் வைத்து, அவன் செவ்விதழில் ததும்புகின்ற திருவாய் அமுதினை, விரும்பி சுவைப்பர். அத்தகைய தித்திக்கும் மதுரமான கண்ணனின் தேனமுது தத்தளிக்கும், கோவைப்பழம் போல் சிவந்த வாயினை வந்து பாருங்கள் செவ்விய அணிகலன் பூண்ட, புன்னகை மிளிரும் சிங்காரப் பெண்களை அழைக்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment