||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
திவ்ய ப்ரபந்தம் - 35 - உலகங்களை விழுங்கிய கழுத்து
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - பதிமூன்றாம் பாசுரம்
வண்டமர் பூங்குழல்*
ஆய்ச்சி மகனாகக்*
கொண்டு வளர்க்கின்ற*
கோவலக் குட்டற்கு*
அண்டமும் நாடும்*
அடங்க விழுங்கிய*
கண்டம் இருந்தவா காணீரே*
காரிகையீர்! வந்து காணீரே|
- வண்டு அமர் - வண்டுகள் படிந்திருக்கிற
- பூ குழல் - பூ அணிந்த குழலையுடையளான
- ஆய்ச்சி - யசோதைப் பிராட்டியானவள்
- மகனாக கொண்டு - தன் புத்ரனாக ஸ்வீகரித்து
- வளர்க்கின்ற - வளர்க்கப் பெற்றவனாய்
- கோ வலர் - ஸ்ரீநந்தகோபருடைய
- குட்டதற்கு - பிள்ளையான கண்ணபிரானுடைய
- அண்டமும் - அண்டங்களையும்
- நாடும் - அவற்றினுள்ளே கிடக்கிற சேதநாசேதநங்களையும்
- அடங்க - முழுதும்
- விழுங்கிய - ப்ரளயகாலத்தில் கபளீகரித்த
- கண்டம் இருந்த வா காணீரே - கழுத்திருந்த படியை வந்து பாருங்கள்
- காரிகையீர் வந்து காணீரே - அலங்காரம் செய்து கொண்டுள்ள அழகிய பெண்களே! வந்து பாருங்கள்
தேன் நிறைந்த மலர்களைத் மலர்ந்தவுடன் பறித்து, நெருக்கமாய்த் தொடுத்தணிந்த கூந்தலில் உள்ளத் தேனைச் சுவைப்பதற்காக தேனீக்கள் வந்து அமரக்கூடிய அழகிய, மணம் நிறைந்த கூந்தலை உடையவளான யசோதை அன்னை, கண்ணனின் பார்வைக்கும், மனதுக்கும் இனிமையானவளாக இருக்கிறாள். தன் மகன் என்ற எண்ணத்துடன் வளர்க்கப்படுகின்ற யசோதை ஸ்ரீநந்தகோபருடைய சிறு பிள்ளையான கண்ணபிரானுக்கு, பிரளய காலத்தில் அகில அண்டங்களையும் அதனுள் அடங்கிய எல்லாவற்றையும் விழுங்கி வாய்க்குள் அடங்கி விடுமாறு இருக்கின்ற சிறு தொண்டை எத்தனை அழகாய் இருக்கின்றது என்பதை வந்து பாருங்கள். வனப்பாய் அலங்காரம் செய்து கொண்டுள்ள அழகிய பெண்களை இந்த சிறு பிள்ளையின் சிறுதொண்டையின் அழகினை வந்து காணுமாறு யசோதை அழைக்கிறாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment