||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
048 அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே|
இங்கு “பெரிய உடையார்” என்று அழைக்கப்படுபவர், ஜடாயுவாகும். ஸ்ரீ இராமன், ஜடாயு மீது கொண்டுள்ள நன்மதிப்பும், தந்தைக்கு நிகராக ஜடாயுவை கண்டதுமே இதற்கு காரணம். ஜடாயு, இராமாயணத்தில் இடம் பெறும் ஒரு கருடன். சூரிய தேவனின் தேரோட்டியான அருணனின் மகன். ஜடாயுவும் அவரது அண்ணனுமான சம்பாதியும் தசரத சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர்கள்.
வனவாசத்தின் முதல் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் முனிவர்களுடன் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ஸ்ரீராமன் அதன் பின்னர், சீதாதேவி மற்றும் இலட்சுமணனுடன் அகத்தியரின் குடிலுக்கு சென்றார். அகத்தியரிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு பஞ்சவடி நோக்கி தன் பயணத்தைத் தொடரும் பொழுது வழியில் ஜடாயுவை சந்தித்தனர்.
தன்னை யார் என்று வினவிய ஸ்ரீ இராமனிடம், ஜடாயு – “நான் அருணனின் புதல்வன். கழுகுகளுக்கெல்லாம் அரசன். சம்பாதியின் தம்பி. தசரத சக்ரவர்த்தியின் நண்பர்கள். இக்காட்டில் வசிப்பவன் நான். நீங்கள் பஞ்சவடியில் வாழும் வரை உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் வசதிகளையும் செய்து தருகிறேன். என்னுடன் வாருங்கள்.”, என்று கூறி, அவர்கள் குடில் அமைக்க அமைதியான, அழகான இடத்தையும் காட்டினார்.
“அவர் திண்சிறை விரியும் நீழலில் செல்ல விண்சென்றான்” என்ற வரிகளின் வாயிலாக, கம்பர், ஜடாயுவின் பரந்த மனதையும், ஸ்ரீ இராமர், சீதாதேவி மற்றும் இலட்சுமணன் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறார். அவ்வரிகளின் அர்த்தம் , பஞ்சவடி நோக்கி காட்டில் நடந்து செல்லும் ஸ்ரீ ராமரையும், சீதாதேவியையும் இலட்சுமணனையும் வெயிலில் இருந்து பாதுகாக்க, தனது பெரிய அகண்ட சிறகுகளை குடைப் போல் விரித்தார் ஜடாயு.
சீதாப்பிராட்டியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராவணனின் தவறை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜடாயு. இராவணன் கேக்காமல் போக, இராவணனுடன் ஜடாயு மோதுகிறார். இராவணனின் தேரை உடைத்து சுக்குநூறாக்கி, அவனையும் தன் மொத்த பலம் கொண்டு தாக்குகிறார். இறுதியில் இராவணன் வாளுக்கு தன் ஒரு பக்க இறக்கையை இழந்து, ஜடாயு தரையில் விழுகிறார்.
ஸ்ரீ இராமன் மற்றும் இலட்சுமணனின் வருகைக்காக காத்திருந்தவர், அவர்கள் வந்ததும், நடந்தவற்றைக் கூறி, இராவணன் சீதையை கொண்டு போன தென்திசையை அடையாளம் காட்டிவிட்டு, ஸ்ரீ இராமருக்கு மங்களாசாசனம் செய்துவிட்டு உயிர் விடுகிறார்.
தனது தந்தையின் ஸ்தானத்தைக் கொடுத்து, ஜடாயுவை மதித்துப் போற்றிய ராமர், தன் அம்பினால் ஏழு புண்ணிய நதிகளையும் வரவழைத்து, ஒரு புஷ்கரணியை ஏற்படுத்தினார். தன் தந்தையாகவே ஜடாயுவை ஏற்று, தர்ப்பணம் முதலான ஈமக்கிரியைகளை புஷ்கரணியின் கரையிலேயே செய்தார். ஜடாயுவுக்கு மோக்க்ஷமும் கிடைத்தது. இதைவிட ஜடாயூவிற்கு வேறென்ன பாக்கியம் வேண்டும்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " ஜடாயுவைப் போல் (பெரிய உடையார்) இராவணனுடன் போரிட்டு, பிராட்டிக்கும் பெருமாளுக்கும் உதவி புரிந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment