||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
049 இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே|
விபீஷணன் - ராவணனின் இளைய சகோதரன். அரக்கர்களுக்கே உரிய தீய குணங்கள் கொண்ட சகோதர சகோதரிகளிடைய வளர்ந்தாலும் விபீஷணனின் குறிக்கோள் நேர்மை, தர்மம், நீதி. விபீஷணன் ஒற்றைக் காலில் நின்றபடி ஐயாயிரம் வருடங்கள் கடுந்தவம் புரிந்து கடவுளர்களை திருவுளங்கொள்ள வைத்ததால் பிரம்மன் அவனுக்கு மரணமில்லா பெருவாழ்வை வரமாக வழங்கினார்.
ராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது கண்டித்தான். பிராட்டியை ராமனிடம் ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு ராவணனை வலியுறுத்தினான். விபீஷணன் ராவணனின் ஒவ்வொரு கொடிய செய்கையையும் எதிர்த்தான். அவனுடைய அறிவுரைகளை ராவணன் ஏற்கவில்லை.
சீதாதேவி இலங்கையில் சிறைப்பிடிக்கப் பட்டிருப்பதை ஹனுமார் கண்டு வந்த பின், ஸ்ரீ இராமனும் அவருடைய வானரப் படையும் இலங்கை நோக்கி பாலம் அமைக்க, இராவணன் இச்செய்தி கேட்டு அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினான். அப்பொழுது, அவனது மந்திரிமார்களும் படைத் தளபதிகளும் இராவணனின் வீரத்தையும், இந்தரஜித்தின் போர்த் திறனையும், தங்களின் வீரத்தைப் பற்றியும் பெருமையாக கூறி, வானரங்களுக்கு எதிராக போரிடுவதே தங்களுக்கு இழுக்கு என்று மார் தட்டிக் கொண்டிருக்க, விபீஷணனோ, “ஸ்ரீ இராமனின் பலத்தையும், எதிரிகளின் போர்த்திறனையும் அறியாமல் பேசுவது தவறு. அவர்களின் பக்கம் தர்மம் உள்ளது. தவறு நம் பக்கம் உள்ளது. எனவே, சீதாதேவியை அவர்களிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோரினால் ஸ்ரீ இராமன் நிச்சயம் மனமிறங்கி மன்னித்து விடுவார். வீணாக யாரும் உயிர் இழக்க வேண்டாம். எனவே சீதாதேவியிடம் மன்னிப்பு கோரி உயிர் வாழ்வது பற்றி யோசியுங்கள். இல்லையேல் போரில் மடிவீர்.”-என்றான்.
விபீஷணனின் வார்த்தைகள் இராவணனுக்கும் இந்தரஜித்துக்கும் கோபத்தை மூட்ட, விபீஷணனைக் கடிந்து பேசினர். ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை. உறவுகளை விட்டொழித்து, ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு என்று தீர்மானித்த விபீஷணன் நான்கு ஆதரவாளர்களுடன் ராமனைச் சரணடைய இலங்கை விட்டு இக்கரைக்கு வந்தான். ராமரிடம் தனது வரவை அறிவிக்கும்படி வானர வீரர்களிடம் வேண்டினான்.
விபீஷணனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வது குறித்த ஆலோசனையை நடத்தினார் ராமர். சுக்ரீவனும் மற்ற வானர மந்திரிகளும் எதிர்த்த போதும், அனுமன் ஆராய்ந்து உரைத்த கருத்தின்படி விபீஷணனை தன்னிடம் வரப் பணித்தார் ராமர். ராமரின் திருவடிகளில் விபீஷணன் விழுந்து வணங்கி, சரணாகதி (அடைக்கலம்) வேண்டினான். ராமர் விபீஷணனை ஏற்றருளினார். ராமர் விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்த செயலை அபயப்பிரதானம் என்பர்.
பெருமாளின் திருவடியை இக்கரை என்கிறார் பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில். நமக்குப் பிடித்த ஒன்று நமக்குப் போதும். அது நம்முடையது. இது நம் மனதிற்குப் பிடிக்கிறது என்றால் அது இக்கரையாகும். பெரியாழ்வார் வைகுண்டத்தை இக்கரை என்கிறார்.
அக்கரையில் விபீடணன், இக்கரையில் இருக்கும் ராமனே. அவர் இருக்கும் இடமே தன்னை கரை சேர்க்கும் என அக்கரையிலிருந்து, இக்கரைக்கு வருகிறான். அதாவது ராமனிடம் அடைக்கலம் ஆகிறான்.
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "அப்படி வீபீடணனைப் போல ராமனைத் தேடிச் சென்றேனா? ராமனிடம் அடைக்கலம் புகுந்த விபீஷணனைப் போல் தான் பகவானிடம் சரணாகதி அடைந்தேனா? இல்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment