About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 31 August 2023

லீலை கண்ணன் கதைகள் - 32

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

காளிங்கன் மீது நடனம்|

ஒரு நாள் காலை கிருஷ்ணன் தன் நண்பர்களுடன், பசுக்களை மேய்ப்பதற்காக யமுனையை நோக்கி சென்றான். வழியில் சிறுவர்கள் நீண்ட நேரம் சிரித்து விளையாடினார்கள். நடுப்பகல் வந்ததும் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. ஆதலால் பசுக்களுடன் சில சிறுவர்கள் நதியை அடைந்தார்கள். அந்த நதியின் மடுவில் காளிங்கன் என்ற ஒரு கொடிய விஷப் பாம்பு வசித்து வந்தது. அந்த மடுவில் இருந்த தண்ணீர் முழுவதையும் அது விஷமாக்கி இருந்தது. மிகவும் தாகமாக இருந்ததனால் அந்தச் சிறுவர்கள் அந்த மடுவின் தண்ணீரைக் குடித்தார்கள். உடனேயே அவர்கள் எல்லோரும் நதிக்கரையில் இறந்து விழுந்தார்கள். தன் நணபர்கள் சிலர் அங்கு இல்லை என்பதைச் சிறிது நேரம் கழித்துத் தான் கிருஷ்ணன் உணர்ந்தான். 


அவனும் மற்றவர்களும் அவர்களைத் தேடிக் கொண்டு சென்றார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் மடு அருகில் வந்தார்கள். சிறுவர்கள் இறந்துக் கிடப்பதைப் பார்த்துக் கிருஷ்ணனுடன் வந்த சிறுவர்கள் அழ ஆரம்பித்தார்கள். கிருஷ்ணன் அவர்களைச் சமாதானப்படுத்தி தன்னுடைய தெய்விகப் பார்வையினால் இறந்த போன சிறுவர்களை உயிர்பெற்று எழச் செய்தான். அவர்கள் எழுந்து, ஒருரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு தான் நடந்த விஷ்யங்கள் அவர்களின் நினைவுக்கு வந்தன. கிருஷ்ணன் தான் தங்களைக் காப்பாற்றினான் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.


கிருஷ்ணன் அந்த மடுவை உற்று நோக்கினான் யமுனையின் நீல நிறத் தண்ணீர், அங்கு மடுவில் பாம்பின் விஷம் காரணமாகக் கறுப்பாக மாறியிருந்தது. மடுவுக்கு மேலே பறந்து செல்லும் பறவைகள் செத்து வீழ்ந்திருந்தன. மடுவைச் சுற்றி இருந்த செடி கொடிகள் எல்லாம் அந்தப் பாம்பின் விஷம் காரணமாக அழிந்து விட்டிருந்தன. கிருஷ்ணன் தன் இடையில் உடுத்தி இருந்த வேட்டியை இறுகக் கட்டிக் கொண்டு, ஒரு கதம்ப மரத்தின் மீதேறி அந்தப் பாம்புக்குச் சவால் விடுவது போல, தன் தோள்களைத் தட்டிக் கொண்டு, அந்த விஷ மடுவில் குதித்தான். கிருஷ்ணன் தன் பலமான கைகளால் தண்ணீரை அடித்து நீந்திய சப்தம் எங்கும் கேட்டது. அது மடுவில் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் காளிங்கனை எழுப்பியது. தன் இருப்பிடத்திற்கு யாரோ படையெடுக்கிறார்கள் என்று அது தெரிந்து கொண்டு நிமிர்ந்து பார்த்தது. அங்கே தாமரைப் பாதங்களும், சிரித்த முகமும் மஞ்சள் ஆடையும் கொண்ட ஒரு சிறுவன் பயமின்றித் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த காட்சி அதற்கு தென்பட்டது.


நதிக் கரையிலிருந்து கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், பாம்பின் பெரிய படத்தைக் கண்டு நடுங்கினார்கள். அதைப் பற்றி யசோதையிடம் தெரிவிப்பதற்காகச் சிலர் வீட்டுக்கு ஒடினார்கள். செய்தி கேட்ட கோபர்கள் எல்லோரும் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் எல்லோரும் அங்கே ஒடி வந்தார்கள். மடுவில் பாம்பு கிருஷ்ணனைச் சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதையும், அவன் அசைவற்று இருப்பதையும் பார்த்தார்கள். பூனை எலியோடு விளையாடுவது போல கிருஷ்ணன் அந்தப் பாம்பு தன்னைச் சுற்றி வளைப்பதற்குப் பேசாமல் விட்டிருந்தான். 


காளிங்கன் இப்பொழுது கிருஷ்ணனை அமுக்கிக் கொல்லப் பார்த்தது. உடனே அவன் உடலைப் பெரிதாக்கிக் கொள்ளவே, அதனால் கிருஷ்ணனை அமுக்க முடியவில்லை. காளிங்கனுக்குக் கோபம் அதிகரித்தது. காளிங்கன் படம் எடுத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டு, தன் மூக்குத் துவாரங்களினால் விஷத்தைக் கக்கிற்று. தன் விஷப் பற்களினால் அவனைக் கடிக்கப் பார்த்தது.


ஆனால் கிருஷ்ணன் காளிங்கனிடமிருந்து தப்பித்துக் கொண்டு, தண்ணீரில் நகர ஆரம்பித்தான். கிருஷ்ணன் அந்த மடுவில் எல்லா இடங்களிலும் காணப்பட்டான். படம் எடுத்துக் கொண்டு, காளிங்கன் கிருஷ்ணனைத் துரத்தியது. பாம்பின் மீது கருடன் பாய்வது போல, கிருஷ்ணர் அதன்மீது பாய்ந்தார். காளிங்கன் தன் விஷப் பற்களால் கிருஷ்ணரைக் கடிக்க முயன்றான். ஆனால் கிருஷ்ணர், அதன் தலைகளை அழுத்திப் பிடித்து அவற்றின் மேல் ஏறினார். பாம்பின் தலையில் இருந்த ரத்தினங்களின் ஒளியினால் பிரபுவின் பாதங்கள் சிவந்து காணப்பட்டன. பின்பு, கலைஞர்களுக்கு எல்லாம் ஆதி கலைஞரான ஸ்ரீ கிருஷ்ணர், விஷப் பாம்பான காளிங்கனின் மீது நடனமாடினார். இதைக் கண்ட வாணவர்கள், பூச்சொரிந்து, மத்தளங்கள் முழக்கி, குழல்களை இசைத்து, துதிகளையும் பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறாக வானுலக வாசிகளான கந்தவர்கள், சித்தர்கள் மற்றும் தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.


கிருஷ்ணர் தன் தலைகளில் நடனமாடிய போது, காளிங்கன் அவரைத் தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான். காளிங்கனுக்கு நூறு தலைகள் இருந்தன. ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, தன் காலால் அதன் தலைகளில் அடித்த போது, காளிங்கனால் அந்த அடிகளைத் தாங்கி கொள்ள முடியவில்லை. அது உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு, தன்னில் இருந்த விஷத்தைக் கக்கிய போது அதன் பாவங்கள் குறையத் தொடங்கின. பின்பு அது, விஷத்துக்குப் பதிலாக இரத்தத்தை கக்கத் தொடங்கியது.


அப்போது, காளிங்கனின் மனைவிகளான நாக பத்தினிகள், கிருஷ்ணர் தம் கணவனை உதைத்து அடக்குவதைக் கண்டனர். அவர்கள் கிருஷ்ணரைச் சரண் அடைந்து, தம் கணவனான காளிங்கனை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். கிருஷ்ணர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காளிங்கனை நோக்கி, உடனே அந்த இடத்தை விட்டு தாமதிக்காமல்; மனைவி பிள்ளைகளுடன் சமுத்திரத்திற்குப் போய் விடுமாறும், யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக் கூடாதெனவும் கட்டளை இட்டார். காளிங்கனும் அவனது மனைவி பிள்ளைகளும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றனர். அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நானும் என் நண்பர்களும் நீராடிய காளிங்க ஏரியில் ஒருவர் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தாலும் அவரின் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 25 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 25 - வெள்ளித் தண்டை பிரகாசிக்கின்ற 
கணைக் கால்கள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்

பணைத் தோள் இளவாய்ச்சி* 
பால் பாய்ந்த கொங்கை*
அணைத்தார உண்டு* 
கிடந்த இப் பிள்ளை*
இணைக் காலில் வெள்ளித்* 
தளை நின்றிலங்கும்*
கணைக் காலிருந்தவா காணீரே* 
காரிகையீர்! வந்து காணீரே|

  • பணை - மூங்கில் போன்ற
  • தோள் - தோள்களை உடைய 
  • இள - இளமைப் பருவத்தை உடைய 
  • ஆய்ச்சி - யசோதையினுடைய
  • பால் பாய்ந்த - பால் சொரிகிற
  • கொங்கை - மார்பை
  • அணைத்து - திருக்கையால் அணைத்துக் கொண்டு 
  • ஆர - வயிறு நிரம்ப
  • உண்டு - பாலை அமுது செய்து
  • கிடந்த - களித்துக் கிடக்கின்ற
  • இப் பிள்ளை - இந்தக் கண்ணபிரானுடைய
  • இணை - ஜோடியாக சேர்ந்து உள்ள சேர்த்தியழகு அமைந்த
  • காலில் - திருபாதத்தில்
  • வெள்ளி தளை நின்று - வெள்ளித் தண்டை நின்று
  • இலங்கும் - பிரகாசிக்கிற
  • கணைக்கால் இருந்தவா காணீரே - கணைக்கால் அழகை வந்து பாருங்கள்
  • காரிகையீர் - அழகுடைய பெண்களே! 
  • வந்து காணீரே - வந்து பாருங்கள்

மூங்கிலைப் போன்று வழவழப்பும் உறுதியும் கொண்ட செழிப்பான தோள்களையுடைய, இளம் வயதுடைய யசோதை ஆய்ச்சியினை தன் திருகரத்தினால் ஆதரவாய் அணைத்துக் கொண்டு, அவளிடம் பசியாற நிறைவாய் சுரந்திருந்த தாயமுதத்தினை வயிறார உண்டு, படுத்துறங்கும் இந்த பச்சிளம்பிள்ளையின், இரண்டு கால்களிலும், வெள்ளியால் செய்த கால்சிலம்பு, அவன் வண்ணத்திற்கு ஏற்றாற்போற் எடுப்பாய் மின்னுகின்ற அந்த கணுக்காலின் அழகினை, அந்த பேரானந்த நிலையை ரசிக்கிறாள் யசோதை. அப்படியே அங்கிருக்கும் அழகிய பெண்களையும் 
வந்து பார்க்குமாறு அழைக்கிறாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.26 

தத்ரா பஸ்²யத் ஸ்தி²தாந் பார்த²:
பித்ரூ நத² பிதா மஹாந்|
ஆசார்யாந் மாதுலாந் ப்⁴ராத் ரூந்
புத்ராந் பௌத்ராந் ஸகீ²ந் ஸ்ததா²||  

  • தத்ர - அங்கே 
  • அபஸ்²யத் - காண முடிந்தது 
  • ஸ்தி²தாந் - நின்று கொண்டு 
  • பார்த²ஹ - அர்ஜுநன் 
  • பித்ரூந் - தந்தையர் 
  • அத² - மேலும் 
  • பிதா மஹாந் - பாட்டனார்கள் 
  • ஆசார்யாந் - ஆச்சாரியர்கள் 
  • மாதுலாந் - மாமாக்கள் 
  • ப்⁴ராத்ரூந் - சகோதரர்கள் 
  • புத்ராந் - மகன்கள் 
  • பௌத்ராந் - பேரன்கள் 
  • ஸகீ²ந் - நண்பர்கள் 
  • ஸ்ததா² - அதே போல 

சேனைகளின் இருதரப்பிலும் தந்தையர் பாட்டனார்கள் ஆச்சாரியர்கள் மாமாக்கள் சகோதரர்கள் மகன்கள் பேரன்கள் மாமனார்கள் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கூடி ருந்ததை அங்கே நின்று கொண்டு அர்ஜுனனால் காண முடிந்து.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.10

காமஸ்ய நேந்த்³ரிய ப்ரீதிர்
லாபோ⁴ ஜீவேத யாவதா।
ஜீவஸ்ய தத்த்வ ஜிஜ் ஞாஸா
நார்தோ² யஸ்² சேஹ கர்மபி:⁴॥

  • காமஸ்ய - இச்சைக்கு
  • இந்த்³ரிய ப்ரீதிர் - இந்திரியங்களின் திருப்தியானது
  • லாபோ⁴ ந - பலமாக ஆவதில்லை
  • யாவதா ஜீவேத - எவ்வளவு நாள் ஜீவித்திருக்கிறானோ அவ்வளவு நாள் தான் அந்த திருப்தி
  • ஜீவஸ்ய ச - ஜீவனுக்கு
  • தத்த்வ ஜிஜ் ஞாஸா - பிரம்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற விருப்பம் இருத்தல் வேண்டும்
  • இஹ கர்மபி⁴ஹி - ப்ரஸித்தமான கர்ம அனுஷ்டானாதிகளால் ஏற்படும்
  • யஸ்²அர்தோ² ந - யாதொரு ஸ்வர்காதிகள் உண்டோ அவையும் பயனன்று

போகம் அனுபவிப்பது புலன் இன்பத்திற்காக அல்ல வாழ்க்கையைச் சரிவர நடத்துவதற்கே ஆகும். வாழ்க்கையின் லட்சியம் பகவானை அறிந்து பக்தி செய்வதே. அதாவது, பகவானை அறிந்து கொள்ள விருப்பமுள்ளவனுக்கு, பயனில் பற்று வைத்து செய்யப்படும் கர்மங்கள் செய்யமாட்டா. உண்மையான பக்தியினால் மட்டுமே அடைய முடியும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 41

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 11

அஜஸ் ஸர்வேஸ்²வர: ஸித்³த⁴: 
ஸித்³தி⁴: ஸர்வாதி³ ரச்யுத:|
வ்ருஷா கபிர் அமேயாத்மா 
ஸர்வ யோக³ விநிஸ் ஸ்ருத:||

  • 96. அஜஸ் - தடைகளை விலக்குபவர். பிறக்காதவர். பக்தர்களின் இதயங்களில் நடமாடுபவர். எல்லா ஒலிகளுக்கும் ஆணிவேராக இருப்பவர். பக்தர்களின் இதயங்களிலிருந்து அறியாமையை நீக்குபவர்.
  • 97. ஸர்வேஸ்²வரஸ் - தன்னைப் பற்றியவரைத் தானே சென்றடைபவர்.
  • 98. ஸித்³த⁴ஸ் - தேடி அலைய வேண்டாதபடித்தானே உபாயமாய் நிற்பவர். முழுமையான சாதனை படைத்தவர்.
  • 99. ஸித்³தி⁴ஸ் - அடைய வேண்டிய பேறாக இருப்பவர்.
  • 100. ஸர்வாதி³ர் - எல்லாப் பலன்களுக்கும் ஆதிகாரண பூதன்.

முதல் நூறு திரு நாமங்கள் நிறைவு.

  • 101. அச்யுதஹ - தன்னைப் பற்றியவரை நழுவ விடாதவர். ஒருபோதும் நழுவாதவர்.
  • 102. வ்ருஷா கபிர் - தர்மமே வடிவான மகா வராக அவதாரமானவர். தர்மத்தைப் பாதுகாப்பவர்.
  • 103. அமேயாத்மா - அறிய முடியாதவர். அளவிட முடியாதவர்.
  • 104. ஸர்வ யோக³ விநிஸ் ஸ்ருதஹ - எல்லா உபாயங்களாலும் அடையத்தக்கவர். எல்லாப் பற்றுகளிலிருந்தும் விடுபட்டவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி எட்டாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

038 அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே|

கலிகாலம் பிறந்து 343வது வருடமான துர்மதி வருஷம், திருச்சி அருகே உள்ள நிசுளாபுரி எனும் உறையூரில் திருப்பாணாழ்வார் தோன்றினார். வயலில் பயிர்களுக்கு நடுவே தோன்றிய திருப்பாணரை, பாணன் என்கிற குலத்தைச் (பண்ணிசைத்து பாடுபவர்கள்) சேர்ந்த தம்பதியினர் வளர்த்தால், இவர் ‘திருப்பாணர்’ ஆனார். 

சிறு வயது முதலே, பெரிய பெருமாளிடம் ஞானத்தோடு கூடிய பக்தி இவருக்கு உண்டாயிற்று. தான் பாணர் குலத்தவர் என்பதால், கோயிலுக்குள் செல்லாமல், காவேரி தென் கரையில் நின்று கொண்டு வீணையை மீட்டி பாடி பெருமாளை அனுதினமும் மகிழ்வித்தார்.


திருப்பாணரை கோவிலுக்குள் அழைத்து வர விரும்பிய ஸ்ரீ ரங்கநாதன், அதற்கும் வழி செய்தான். ஒரு நாள், என்றும் போல், திருப்பாணர் காவேரியாற்றின் கரையில் நின்று, தன்னிலை மறந்து, பெருமாளை எண்ணி பாடல் பாடிக் கொண்டிருந்தார். அப்போது பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தம் எடுப்பதற்காக குடத்தை எடுத்துக் கொண்டு லோக சாரங்க மாமுனிவர் அங்கு வந்தார். இவரைக் கண்டவுடன் ‘தூரப்போ’ என்றார். ஆனால், பக்தியில் தன்னிலை மறந்து பாடிக் கொண்டிருந்த திருப்பாணருக்கு அம்முனிவர் சொன்ன சொல் காதில் விழவில்லை. முனிவரும் கோபமுற்று ஒரு கல்லை எடுத்து திருப்பாணர் மேல் வீசினார். அந்தக் கல் இவர் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. பின்னர் சற்று நேரம் கழித்து மெதுவாக திருப்பாணாழ்வார் கண் விழித்துப் பார்த்தார். நடந்ததை தெரிந்து கொண்டார். ஏதும் கூறாமல், வழி விட்டுச் செல்ல, திருமஞ்சனத்திற்கான தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு பெரிய பெருமாளின் சந்நதிக்குள் சென்றார் லோகசாரங்க மாமுனிவர். அங்கு பெருமாளின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டு லோக சாரங்க மாமுனிவர் அதிர்ந்தார்.

திகைத்து நின்ற மாமுனிவரைப் பார்த்து, ‘‘என் அருமை பக்தனை இப்படி கல்லால் அடிக்கலாமா? என்னைக் குறித்து கானம் செய்து பக்தியில் திளைத்த யாவருமே என் அடியார்கள் அல்லவா. அப்படிப்பட்ட திருப்பாணரை ஏன் கல்லால் அடித்தீர்!?’’ என்று கோபத்தோடு கேட்டார் பெருமாள்.

லோக சாரங்க முனிவர் மிகவும் வருந்தினார். பெருமாள் உடனே லோக சாரங்க மாமுனிவரிடம் பாணரைத் தம் சந்நதிக்கு அழைத்து வருமாறும், அவரை எப்படி அழைத்து வரவேண்டு மென்றும் கூறி உத்தரவிட்டார். மறுநாள் காலை, எம்பெருமானின் நியமனத்தை சிரமேற் கொண்டு முனிவர் முதலில் திருக்காவேரியில் நீராடினார். கைகளை கூப்பிக் கொண்டே, வீணையுடன் பாடிக் கொண்டிருந்த திருப்பாணரை நோக்கிச் சென்றார். நேற்று நடந்ததற்கு மன்னிப்பு வேண்டி நின்ற லோகசாரங்க மாமுனிவர், திருப்பாணரிடம், ‘‘நம்பெருமாள் தங்களை ஸ்ரீரங்கத்து கோவிலுக்குள் கொண்டு வரவேணும் என்று அடியேனை நியமித்து இருக்கிறார்’’ என்று விண்ணப்பம் செய்தார்.

பதறிப் போன திருப்பாணாழ்வார், தன்னுடைய குலத்தைக் கருதி, திருவரங்க பெருநகரை அடியேன் எப்படி மிதிப்பது என்று தயங்கி பின் வாங்கினார்.  லோகசாரங்க மாமுனிவர் உடனே ‘‘அப்படியானால் அடியேனுடைய தோளின் மேல் எழுந்தருளும். நம்பெருமாளை தரிசிக்கலாம்! இது நம்பெருமாளின் கட்டளை!’’ என்றார்.

திருப்பாணாழ்வாரும் எம்பெருமாளின் நியமனமாக இருப்பதால் தட்ட முடியாமல் வர இசைந்தார். தனது திருத்தோள்களில் திருப்பாணரை சுமந்து கொண்டு திருவரங்க கோயிலில் இருக்கும் அழகிய மணவாள திருமண்டபத்திற்குள்ளே புகுந்தார் முனிவர். 

திருப்பாணாழ்வாருக்கு நம்பெருமாள் தன்னுடைய திவ்ய மங்கள சொரூபத்தைக் காட்டி அருளினார். திருப்பாணாழ்வாரும் திருவடி முதல் திருமுடி வரை பெருமாளைக் கண்ணாரக் கண்டு அனுபவித்தார்.

உடனேயே, ‘அமலனாதிபிரான்’ என்கிற திவ்ய பிரபந்தமாக தமது அனுபவத்தை உலகு உய்ய வெளியிட்டருளினார். இவர் அருளியது பத்து பாசுரங்களே.

கொண்டல் வண்ணனைக்* 
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்*  
என் உள்ளம் கவர்ந்தானை,* 
அண்டர் கோன் அணி அரங்கன்*  
என் அமுதினைக் கண்ட கண்கள்*  
மற்று ஒன்றினைக்* காணாவே. 

என்று பத்துப் பாசுரங்களையும் பாடி முடித்தார். திருப்பாணாழ்வார் கடைசிப் பாகத்தில் ‘அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே’ என்ற இறுதி அடியைப் பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து, பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, "பெரிய பெருமாள் மேனியோட திருப்பாணர் கலந்துட்டாரே. அப்படி அவருடைய மேனியோட சேரும் பாக்கியம் பெற்றேனா? பண்ணிசைத்து பெருமாளின் புகழ் பாடி, அவனருளைப் பெற்று, பெருமாளுடன் கலந்தேனா இல்லையே!!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

லீலை கண்ணன் கதைகள் - 31

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தேனுகாசுரன் வதம்|

கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் இப்போது ஆறு வயது ஆயிற்று. ஆகவே பசுக்களை மேய்க்கும் பொறுப்பும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாள் கிருஷ்ணனின் நண்பர்களில் ஒருவனான ஸ்ரீதாமா அவனைப் பார்த்து, "கிருஷ்ணா! பக்கத்தில் ஒரு பெரிய பனந்தோப்பு இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே மரங்களில் அழகான பழங்கள் உள்ளனவாம். அவை மிகவும் ருசியாக இருக்குமாம். ஆனால் அவை நமக்குக் கிடைக்காது. ஏனென்றால் தேனுகாசுரன் என்ற ஒரு கொடிய அசுரன் அந்தத் தோப்பைப் பாதுகாத்துக் கொண்டு அங்கேயே குடியிருந்து வருகிறான். அவன் மனிதர்களையும் சாப்பிடுவான். ஆதலால் யார் அங்கே சென்றாலும் அவர்களை விழுங்கிவிடுகிறான். பசுக்கள், பறவைகள் கூட அங்கே செல்வதில்லை. ஆனால் அந்தப் பனம்பழங்கள் மிகவும் ருசியாக இருக்கும். அவற்றின் வாசனை இங்கே கூட அடிக்கிறது. நம் நண்பர்கள் எல்லோரும் அந்தப் பழங்களைச் சாப்பிட மிகவும் ஆசையாக இருக்கிறார்கள். உன்னால்தான் எங்கள் ஆசையை நிறைவேற்றி வைக்க முடியும். நீ எங்களுக்கு அந்த பழங்களைக் கொண்டுவருவாயா?" என்று கேட்டான்.


தன் நண்பர்களுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருந்த கிருஷ்ணன் இதைக் கேட்டு சிரித்தான். தன் நண்பர்களுடன் அந்தத் தோப்பை நோக்கி நடந்தான். தோப்புக்குள் நுழைந்ததும் பலசாலியான பலராமன், ஒரு யானையைப் போல மரங்களை உலுக்கினான். பழங்கள் கொத்துக் கொத்தாகக் கீழே விழுந்தன. சப்தத்தைக் கேட்டதும் தேனுகாசுரன் ஒரு கழுதையின் உருவம் எடுத்துக் கொண்டு அங்கு வேகமாக ஓடி வந்தான். மிகுந்த கோபத்தோடு பலராமனை நோக்கி விரைந்து , அவன் மார்பில் தன் காலால் உதைத்தான். பிறகு கழுதைப் போலக் கத்திக் கொண்டே எல்லாச் சிறுவர்களையும் பயமுறுத்தத் தொடங்கினான். திரும்பவும் அவன் பலராமனைத் தாக்கப் போனான். ஆனால் பலராமன் இப்போது சண்டைக்குத் தயாராக இருந்தான்.

பலராமன் அந்தக் கழுதையின் இரு பின்னங்கால்களையும் பற்றி அதைத் தலைக்கு மேலே, கரகரவென்று சுற்றி அதை மரங்களில் மோதினான். அந்தப் பலத்த அடியால் அசுரன் மாண்டான். தலையும் உடலும் சிதைந்து அசுரன் கீழே விழுந்தான். அப்பொழுது சில பனை மரங்கள் உடைந்து கீழே சாய்ந்தன. இதைக் கேள்விப்பட்ட தேனுகாசுரனுடைய உறவினர்கள் கழுதை உருவில் வந்து பலராமனையும் கிருஷ்ணனையும் தாக்க ஆரம்பித்தார்கள். ஆனால் பலராமனும் கிருஷ்ணனும் மிகவும் சுலபமாக அவர்கள் எல்லோரையும் கொன்று விட்டார்கள். இவ்வாறு பனத் தோப்பில் இருந்த எல்லா அரக்கர்களும் அழிக்கப்பட, சிறுவர்கள் தங்கள் ஆசைதீரப் பனம் பழங்களைச் சாப்பிட்டனர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 006 - திருப்பேர் நகர் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

006. திருப்பேர் நகர் 
கோவிலடி – திருச்சி
ஆறாவது திவ்ய க்ஷேத்ரம்

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 33 - 2

திருமங்கையாழ்வார்

021. திவ்ய ப்ரபந்தம் - 2706 - தலைவி சென்று தேடிய திவ்ய தேசங்கள்
சிறிய திருமடல் - நான்காம் திருமொழி - நான்காம் பாசுரம் (34)
நான் அவனைக் கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே* (2)
மதிள் கச்சி ஊரகமே பேரகமே*
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே* 
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்* 
ஆராமம் சூழ்ந்த அரங்கம்* கணமங்கை| (2)

022. திவ்ய ப்ரபந்தம் - 2774 - எம்பெருமான் தங்கியிருக்கும் திவ்ய தேசங்களை அவள் புகழ்ந்து வணங்குகிறாள்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - இரண்டாம் பாசுரம் - (62)
வல்லவாழ்ப் பின்னை மணாளனைப் பேரில் பிறப்பிலியை*
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை*
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை*
மன்னும் கடல்மல்லை மாயவனை|

நம்மாழ்வார்

023. திவ்ய ப்ரபந்தம் - 3860 - திருமாலின் திருவருளைப் பாராட்டுதல்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - முதலாம் பாசுரம்
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால் வந்து* என் நெஞ்சு நிறையப் புகுந்தான்*
குரு மா மணி உந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால் சென்று சேர்விடம்* தென் திருப்பேரே| (2)

024. திவ்ய ப்ரபந்தம் - 3861 - உலகுண்டானை முழுவதும் பிடித்து விட்டேன்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - இரண்டாம் பாசுரம்
பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
பேரேன் என்று* என் நெஞ்சு நிறையப் புகுந்தான்*
கார் ஏழ் கடல் ஏழ்* மலை ஏழ் உலகு உண்டும்*
ஆரா வயிற்றானை* அடங்கப் பிடித்தேனே|

025. திவ்ய ப்ரபந்தம் - 3862 - திருப்பேரான் டிச் சேர்வது எனக்கு எளியது
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - மூன்றாம் பாசுரம்
பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணி சாரேன்*
மடித்தேன் மனை வாழ்க்கையுள்* நிற்பது ஓர் மாயையை*
கொடிக் கோபுர மாடங்கள் சூழ்* திருப்பேரான்*
அடிச் சேர்வது எனக்கு* எளிது ஆயினவாறே|

026. திவ்ய ப்ரபந்தம் - 3863 - திருப்பேரான் எனக்க வைகுந்தம் தருவான்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - நான்காம் பாசுரம் 
எளிதாயினவாறு என்று* என் கண்கள் களிப்பக்*
களிது ஆகிய சிந்தையனாய்க்* களிக்கின்றேன்*
கிளி தாவிய சோலைகள் சூழ்* திருப்பேரான்*
தெளிது ஆகிய* சேண் விசும்பு தருவானே|

027. திவ்ய ப்ரபந்தம் - 3864 - தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் திருமால்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஐந்தாம் பாசுரம்
வானே தருவான்* எனக்கா என்னோடு ஒட்டி*
ஊன் ஏய் குரம்பை* இதனுள் புகுந்து* 
இன்று தானே தடுமாற்ற* வினைகள் தவிர்த்தான்*
தேன் ஏய் பொழில்* தென் திருப்பேர் நகரானே|

028. திவ்ய ப்ரபந்தம் - 3865 - திருமால் என மனத்தில் புகுந்தான் அமுதாக இனித்தது
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஆறாம் பாசுரம்
திருப்பேர் நகரான்* திருமாலிருஞ்சோலை*
பொருப்பே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
இருப்பேன் என்று* என் நெஞ்சு நிறையப் புகுந்தான்*
விருப்பே பெற்று* அமுதம் உண்டு களித்தேனே|

029. திவ்ய ப்ரபந்தம் - 3866 - திருமால் என் கண்ணை விடுத்து அகல மாட்டாள்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஏழாம் பாசுரம்
உண்டு களித்தேற்கு* உம்பர் என் குறை* 
மேலைத் தொண்டு உகளித்து* அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
வண்டு களிக்கும் பொழில் சூழ்* திருப்பேரான்*
கண்டு களிப்ப* கண்ணுள் நின்று அகலானே?

030. திவ்ய ப்ரபந்தம் - 3867 - ஏழிசையின் சுவையே திருமால்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - எட்டாம் பாசுரம்
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின் கண் பெரியன்*
எண்ணில் நுண் பொருள்* ஏழ் இசையின் சுவை தானே*
வண்ண நல் மணி மாடங்கள் சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என் மனத்துப்* புகுந்தான் செறிந்து இன்றே|

031. திவ்ய ப்ரபந்தம் - 3868 - திருமாலின் திருவருள் உணர்த்தப் பெற்றேன்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - ஒண்பதாம் பாசுரம்
இன்று என்னைப் பொருளாக்கித்* தன்னை என்னுள் வைத்தான்*
அன்று என்னைப் புறம்போகப்* புணர்த்தது என் செய்வான்?*
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ்* திருப்பேரான்*
ஒன்று எனக்கு அருள் செய்ய* உணர்த்தல் உற்றேனே|

032. திவ்ய ப்ரபந்தம் - 3869 - திருமாலின் அடியார்க்கடியார்க்குத் துன்பமே இல்லை
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - பத்தாம் பாசுரம்
உற்றேன் உகந்து பணிசெய்து* உன பாதம் பெற்றேன்* 
ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்* வாழ் திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே| (2)

033. திவ்ய ப்ரபந்தம் - 3870 - இவற்றைப் படித்தோரின் அடியார்கள் விண்ணுலகை ள்வார்
திருவாய்மொழி - பத்தாம் பத்து - எட்டாம் திருவாய்மொழி - பதினொன்றாம் பாசுரம்
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல்*
நல்லார் பலர் வாழ்* குருகூர்ச் சடகோபன்*
சொல் ஆர் தமிழ்* ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்* 
தொண்டர் ஆள்வது* சூழ் பொன் விசும்பே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 24 - பெரியாழ்வார் திருமொழி - 1.2.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திவ்ய ப்ரபந்தம் - 24 - ஒளி விரல்கள்
பெரியாழ்வார் திருமொழி 
முதலாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்

முத்தும் மணியும்* 
வயிரமும் நன் பொன்னும்*
தத்திப் பதித்துத்* 
தலைப் பெய்தாற் போல்* 
எங்கும் பத்து விரலும்* 
மணி வண்ணன் பாதங்கள்* 
ஒத்திட்டிருந்தவா காணீரே* 
ஒண் நுதலீர்! வந்து காணீரே| 

  • முத்தும் - முத்துக்களையும்
  • மணியும் - ரத்நங்களையும்
  • வயிரமும் - வஜ்ரங்களையும்
  • நல்பொன்னும் - மாற்றுயர்ந்த பொன்னையும்
  • தத்திப்பதித்து - மாறி மாறிப் பதித்து
  • தலைப் பெய்தாற் போல் – சேர்த்தாற் போலே
  • எங்கும் - திருமேனி எங்கும்
  • மணிவண்ணன் - மணி போன்ற நிறத்தை உடையவனான கண்ணனுடைய
  • பாதங்கள் - திருவடிகளில் உள்ள
  • பத்து விரலும் - விரல் பத்தும்
  • ஒத்திட்டு இருந்தவா காணீரே - ஒன்றோடு  ஒன்று ஒத்து அமைந்திருக்கும் படியை வந்து பாருங்கள் 
  • ஒண்ணுதலீர்!  - ஒளி பொருந்திய நெற்றியை உடைய பெண்களே!
  • வந்து காணீரே -  வந்து பாருங்கள்

யசோதை, நீலமணிவண்ண உடலுடைய கண்ணபிரானின் பாதங்களில் உள்ள பத்து விரல்களுக்கும் முத்து, மரகதம், வைரம், வைடூர்யம், கோமேதகம், நீலம், பவழம், புஷ்பராகம், மாணிக்கம் போன்ற நவரத்தினங்கள் மற்றும் தூய பசுந் தங்கத்தையும் ஒன்றாய் கலந்து கூட்டி வைத்ததைப் போன்று இருக்கின்ற அழகினை ரசித்து மகிழ்கிறாள். திருப்பாதங்களில் ஜ்வலிக்கும் இந்த வர்ணங்களுடன் கண்ணனின் திருமேனியின் மணிவர்ணமும் சேர்ந்திருந்தது மிகவும் ஒத்து இருந்ததாம். இப்பேரின்பக் காட்சியை காணுமாறு அங்கிருக்கும் ஆபரணங்களால் பிரகாசிக்கும் நெற்றியை உடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.25

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.25

பீ⁴ஷ்ம த்³ரோண ப்ரமுக²த: 
ஸர்வேஷாம் ச மஹீக்ஷி தாம்|
உவாச பார்த² பஸ்²யை தாந் 
ஸமவேதாந் குரூந் இதி||


  • பீ⁴ஷ்ம - பாட்டனார் பீஷ்மர் 
  • த்³ரோண - ஆச்சாரியர் துரோணர் 
  • ப்ரமுக²தஹ - முன்னிலையில் 
  • ஸர்வேஷாம் - எல்லா 
  • ச - மற்றும் 
  • மஹீக்ஷி தாம் - அரசர்கள் 
  • உவாச - கூறினார் 
  • பார்த² - பிருதாவின் மகனே 
  • பஸ்²ய - பார் 
  • ஏதாந் - எல்லோரையும் 
  • ஸமவேதாந் - கூடியுள்ள 
  • குரூந் - குரு வம்சத்தினர் 
  • இதி – இவ்வாறு

கண்ணன் கூறுகிறார்: "பார்த்தா! உன் பாட்டனார் பீஷ்மரையும் உன் ஆச்சாரியர் துரோணரயும் உலக தலைவர்கள் முன்னிலையில் கூடியுள்ள குரு வம்சத்தினர் எல்லோரையும் பார்" என்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.2.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா: 
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம் 
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்|| 
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||

ஸ்லோகம் - 1.2.9

த⁴ர்மஸ்ய ஹ்யா பவர்க்³ யஸ்ய
நார் தோ²ர்தா² யோப கல்பதே।
நார் த²ஸ்ய த⁴ர்மை காந் தஸ்ய
காமோ லாபா⁴ய ஹி ஸ்ம்ருத:॥

  • ஆபவர்க்³ யஸ்ய - மோக்ஷத்தை கொடுக்கக்கூடிய
  • த⁴ர்மஸ்ய - தர்மத்திற்கு
  • அர்த²ஸ் ஹி - பொருளோ எனில்
  • அர்தா²ய - பலத்தை கொடுப்பதாக
  • ந உபகல்பதே - ஆவதில்லை
  • த⁴ர்மை காந் தஸ்ய - தர்மத்தையே முக்கிய பலமாக கொண்ட
  • அர் த²ஸ்ய ஹி - பொருளுக்கோ எனில்
  • காமோ - இச்சையானது
  • லாபா⁴ய - பலப் பிராப்தியின் பொருட்டு
  • ந ஸ்ம்ருதஹ - நினைக்கப்படுவதில்லை

மோட்சமாகிற இறுதி விடுதலையை பெறுவதற்குரிய லட்சியம் - குறிக்கோள் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல, தர்மத்தை கடமையைச் சரிவர நடத்துவதற்கு தான் பொருள் தேவையே அன்றி, இச்சையான காமம் முதலிய பயனைப் பெறுவதற்கல்ல.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 40

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 10

ஸுரேஸ²: ஸ²ரணம் ஸ²ர்ம 
விஸ்²வரேதா: ப்ரஜாப⁴வ:|
அஹ: ஸம்வத் ஸரோ வ்யாள: 
ப்ரத்யய: ஸர்வ த³ர்ஸந:||

  • 86. ஸுரேஸ²ஸ்² - பிரமாதி தேவர்களுக்குத் தலைவர். தன்னைப் பின்பற்றுபவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்களில் முதன்மையானவர்.
  • 87. ஸ²ரணம் - உபாயமாய் இருப்பவர். அடைக்கலம் கொடுப்பவர்.
  • 88. ஸ²ர்ம - உயர்ந்த பலனாய் இருப்பவர்.
  • 89. விஸ்²வரேதாஃ - அகில உலகங்களுக்கும் காரணமானவர். பிரபஞ்சத்தின் விதை.
  • 90. ப்ரஜா ப⁴வஹ - பிரஜைகளுக்கு இடமாயிருப்பவர்.
  • 91. அஹஸ் - பகல் போலத் தெளிவாக விளங்குபவர். யாரையும் கைவிடாதவர். அறியாமையிலிருந்து மக்களை எழுப்பும் நாள் போன்றவர். 
  • 92. ஸம்வத் ஸரோ - சேதநரிடம் நன்றாக இருப்பவர். அவர் காலம். 
  • 93. வ்யாளஹ் - தன்வசப்படுத்துபவர். எளிதில் கிரகிக்க முடியாதவர்.
  • 94. ப்ரத்யயஸ் - நம்பிக்கை உண்டாக்குபவர்.
  • 95. ஸர்வ த³ர்ஸநஹ - தனது மகிமைகளை எல்லாம் பக்தர்களுக்கு முழுமையாகக் காட்டுபவர். எங்கும் நிறைந்தவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - முப்பத்தி ஏழாவது வார்த்தை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

037 அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியாரைப் போலே|

சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு வீரராகவர், கமலாயர் தம்பதிகளுக்கு நான்காவதாக பிறந்த திருக்கச்சி நம்பிகள் அவர்களின் இயற்பெயர் கஜேந்திர தாசர். வணிகம் செய்யும் குலத்தில் பிறந்தவர், அவரது சகோதரர்கள் மூவரும் பொருளீட்டுவதில் விருப்பத்துடன் இருப்பினும், கஜேந்திரதாசர் காஞ்சியில் உறையும் வரதராஜப் பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கரியம் செய்வதிலேயே தன் வாழ்வினை கழித்ததார். தன் தந்தை கொடுத்த செல்வத்தினை பெருமாளுக்கு சேவை செய்வதில் உபயோகித்ததால் தந்தை கோவம் கொள்ள, வீட்டை துறந்த திருக்கச்சி நம்பிகள், காஞ்சி சென்று பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யம் செய்து வந்தார். பெருமாளுக்கு சரீரம் மூலம் செய்யும் கைங்கர்யமே பெரிய கைங்கர்யமாகும் என வாழ்ந்து வருபவர். 


தினமும் காஞ்சிக்கு சென்று கைங்கர்யம் செய்துவந்த நம்பிகள், முதுமையினால் காஞ்சி செல்ல முடியாது வருந்திய போது, பெருமாள் இவருடைய இல்லத்திலேயே வைணவ திவ்யதேசங்களில் முதன்மையாக போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கச்சி (காஞ்சி) ஆகிய தலங்களில் உறைகின்ற காட்சியும் கொடுத்து முக்தியும் அருளினார். அத்தலமே இன்று பூந்தமல்லி பேருந்துநிலையம் அருகில் திருக்கச்சி நம்பிகள் சமேத வரதராசப் பெருமாள் கோயில் என வழிப்பாட்டில் இருந்து வருகிறது. காஞ்சி வரதராசப் பெருமாள் மீது "தேவராஜ அஷ்டகம்" எனும் வடமொழியில் அமைந்த நூலை இயற்றியவர் திருக்கச்சிநம்பிகள் ஆவார்.


தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் நேரடியாக தேவப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடும் அளவிற்கு பெருமாள் மற்றும் தாயாரின் அருளையும் நம்பிக்கையையும் பெற்றவர். இராமானுஜருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை அருளிச்செய்தார்.

ஒரு நாள் ஸ்ரீராமானுஜர், அவரிடம் சில சந்தேகங்களைக் கேட்டார். திருக்கச்சியார் மயிலிறகால் செய்யப்பட்ட அந்த பெரிய ஆலவட்டத்தைத் தூண் மீது சாய்த்துவிட்டு வந்தார். அவர் ஸ்ரீராமானுஜரைப் பார்த்து, "நான் முதலில் ஸ்ரீரங்கப் பெருமாளுக்கு ஆலவட்டம் வீசச் சென்றேன். அவரோ, தான் காவிரிக்கரையில் இருப்பதாகவும், திருமலை வெங்கடநாதனுக்கு ஆலவட்டம் வீசச்சொன்னார். ஆனால், அந்த திருவேங்கடநாதனோ, தான் மலைகள் சுழ்ந்த இடத்தில் இருப்பதாகவும், யாகக்குண்டங்கள் நிறைந்த காஞ்சியில் இருக்கும் எம்பெருமானுக்கு ஆலவட்டம் வீசச் சொன்னார். காஞ்சியில் எனது கைங்கர்யம் தொடருகிறது. அதனாலேயே, எம்பெருமானிடம் பேசும் பாக்கியம் கிடைத்தது" என்றார்.

ஸ்ரீராமானுஜர், "என்னிடம் ஆறு கேள்விகள் உள்ளன. அதற்கான பதிலை, பெருமாளிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார்.

அவரது ஆறு கேள்விகள்

  • 1) பரம்பொருள் என்பவர் யார்?
  • 2) நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உண்மை தத்துவம் எது?
  • 3) பரமனை அடைவதற்கான உபாயம் எது?
  • 4) மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா?
  • 5) மோட்சம் பெறுவது எப்போது?
  • 6) குருவாக யாரை ஏற்பது?

ஸ்ரீராமானுஜர் எழுப்பிய சந்தேகங்களை திருக்கச்சியார் பெருமாளிடம் கேட்க, அவர் உரைத்த பதில்கள்.

விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை தந்துவங்களாயின:

  • 1. அஹமேவ பரம் தத்துவம் - பரம்பொருள் நாமே! அனைவரும் அடைய வேண்டிய பரம்பொருள் நாமே! நாமே உயர்ந்த தத்துவம் (நாராயணனே பரம் பொருள்).
  • 2. தர்சநம் பேத ஏவச - ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம். பேதமை தர்சனம் எதுவும் மாயை அல்ல. எல்லாமே உண்மை. விசிஷ்டாத்வைதமாகிய ஆத்மா இறைவன். இதுபற்றிய வேறுபாடே தத்துவம்.
  • 3. உபாயேஷு ப்ரபத்திஸ்யாத் - சரணாகதியே மோட்சத்திற்கான சிறந்த வழி. உபாயம் ப்ரபத்தியே. அகங்காரத்தை விடுத்து இறைவனை சரணடைவதே உபாயம். அதாவது பிரபத்தி எனும் சரணாகதியே உபாயம்.
  • 4. அந்திம ஸ்ம்ருதி வர்ஜநம் - அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. இறக்கும் தறுவாயில் மட்டும் இறைவனை எண்ணினால் போதாது. உடல் நன்றாக திறனோடு இருக்கையிலேயே இறைவனை நினைத்தால் போதும். முழுமையாக சரணமடைந்தவன் தன் இறுதி காலத்தில், தன் நேரம் நெருங்கும் வேளையில், நாராயணனை நினைத்தல் வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை. அவ்வாத்மாவுக்கு மோக்ஷம் நிச்சயம். 
  • 5. தேஹாவஸாகே முக்கிஸ் யாத் - சரீர முடிவில் மோட்சமுண்டு. சரணடைந்த பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும். பாவங்கள் கழியும் வரை காத்திருக்கும் அவசியம் ஆத்மாவிற்கு இல்லை. சரீரம் விடுகையில் மோட்சம். சரணம் அடைந்தவருக்கு உடலை விடுகையில் மோட்சம்.
  • 6. பூர்ணாசார்ய ஸ்மாச்ரய -   பெரிய நம்பிகளையே குருவாகக் கொள்வதென்ற இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல். (இப்படி ஒரு பதிலைத்தான் ராமானுஜம் எதிர்பார்த்தார்)

இந்த “ஆறு வார்த்தைகளை” தாமே குரு போல இருந்து விளக்கினார் திருக்கச்சி நம்பிகள். இவ்வாறு இராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, " இப்படி எம்பெருமானிடம் நேரில் பேசும் பாக்கியத்தை நான் பெற்றேனோ திருக்கச்சியார் போலே|!” ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்