||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
032. திருமணிமாடகோவில் (திருநாங்கூர்)
முப்பத்தி இரண்டாவது திவ்ய க்ஷேத்ரம்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 12
001. திவ்ய ப்ரபந்தம் - 1218 - மனமே! மணிமாடக் கோயிலை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - முதலாம் பாசுரம்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்*
நர நாரணனே கரு மா முகில் போல் எந்தாய்*
எமக்கே அருளாய் என நின்று* இமையோர் பரவும் இடம்*
எத் திசையும் கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே*
களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து*
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|
002. திவ்ய ப்ரபந்தம் - 1219 - கஜேந்திரனின் துயர் தீர்த்தவன் இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்
முதலைத் தனி மா முரண் தீர அன்று* முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய*
விதலைத் தலைச் சென்று அதற்கே உதவி* வினை தீர்த்த அம்மான் இடம்*
விண் அணவும் பதலைக்க போதத்து ஒளி மாட நெற்றிப்*
பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்*
மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|
003. திவ்ய ப்ரபந்தம் - 1220 - திருமகளைத் தழுவியவன் இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய*
அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து*
கொங்கு ஆர் இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு*
அணைந்திட்ட அம்மான் இடம்*
ஆள் அரியால் அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்*
அணி முத்தும் வெண் சாமரையோடு*
பொன்னி மலைப் பண்டம் அண்ட திரை உந்து நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|
004. திவ்ய ப்ரபந்தம் - 1221 - கருட வாகனனின் மணிமாடக் கோயிலை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - நான்காம் பாசுரம்
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி* அன்று திசை நான்கும் நான்கும் இரிய*
செருவில் கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடியக்*
கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான்*
முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்*
ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்*
மறையோர் வணங்கப் புகழ் எய்து நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|
005. திவ்ய ப்ரபந்தம் - 1222 - கண்ணபிரானுக்கு இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு*
இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து*
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்துத்*
தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம் தான்*
குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே* குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு*
மழை ஆடு சோலை மயில் ஆலு நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|
006. திவ்ய ப்ரபந்தம் - 1223 - பூதகியைக் கொன்றவன் இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஆறாம் பாசுரம்
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்* பகு வாய்க் கழுதுக்கு இரங்காது*
அவள் தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்*
உடனே சுவைத்தான் இடம்*
ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகிக்*
கழுநீரில் மூழ்கிச் செழு நீர்த் தடத்து*
மண் ஏந்து இள மேதிகள் வைகு நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|
007. திவ்ய ப்ரபந்தம் - 1224 - காளியன் மீது நடனமாடியவன் இடம் திருநாங்கூர்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்*
தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்*
இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன் மேல்* அடி வைத்த அம்மான் இடம்*
மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்*
செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*
முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|
008. திவ்ய ப்ரபந்தம் - 1225 - கிளிகளும் வேதம் பாடும் திருநாங்கூரை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்*
துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்*
விளைவித்த அம்மான் இடம்*
வேல் நெடுங் கண் முளை வாள் எயிற்று மடவார் பயிற்று*
மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்*
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|
009. திவ்ய ப்ரபந்தம் - 1226 - தேவர்கள் பணியும் மணிமாடக் கோயிலை வணங்கு
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த*
விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்*
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று* இமையோர் பரவும் இடம்*
பைந் தடத்துப் பெடையோடு செங் கால அன்னம் துகைப்பத்*
தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்*
மடை ஓட நின்று மது விம்மு நாங்கூர்*
மணிமாடக் கோயில் வணங்கு என் மனனே|
010. திவ்ய ப்ரபந்தம் - 1227 - இத்தமிழ் மாலை பாடுவார் சக்கரவர்த்தி ஆவார்
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து - எட்டாம் திருமொழி - பத்தாம் பாசுரம்
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்*
மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு*
என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர் கோன்*
கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்*
கண்டார் வணங்கக் களி யானை மீதே* கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்*
விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்*
விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே|
011. திவ்ய ப்ரபந்தம் - 1850 - திருவாலியும் திருநாங்கூரும்
பெரிய திருமொழி - பத்தாம் பத்து - முதலாம் திருமொழி - மூன்றாம் பாசுரம்
வேலை ஆல் இலைப்* பள்ளி விரும்பிய*
பாலை ஆர் அமுதத்தினைப்* பைந் துழாய்*
மாலை ஆலியில்* கண்டு மகிழ்ந்து போய்*
ஞாலம் உன்னியைக் காண்டும்* நாங்கூரிலே|
012. திவ்ய ப்ரபந்தம் - 2782 - செயல்களை யாவரிடமும் கூறி மடலூர்வேன்
பெரிய திருமடல் - ஏழாம் திருமொழி - பத்தாம் பாசுரம் (70)
எனக்குத் திருமால் அருளாவிடில் அவனுடைய இரக்கமிலாச்
மன்னும் மறை நான்கும் ஆனானை*
புல்லாணித் தென்னன் தமிழை வடமொழியை*
நாங்கூரில் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை*
நல் நீர்த் தலைச்சங்க நாள் மதியை*
நான் வணங்கும் கண்ணனைக் கண்ணபுரத்தானை*
தென் நறையூர் மன்னு மணிமாடக் கோயில் மணாளனை|
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்