About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 13 September 2025

ஸ்ரீமத் பாகவத புராணம் - 89

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 34

ஸ்கந்தம் 03

த்யான யோகம் - 1

பக்தி யோகத்தை ஐயம் திரிபற விளக்கிய கபில பகவான், தேவஹூதியைப் பார்த்து மேலும் சொன்னார்.

அம்மா! நீங்கள் ஓர் அரசகுமாரி. தங்களுக்கு இப்போது த்யான மார்கம் பற்றிச் சொல்கிறேன்.

த்யானம் என்பது ஏதாவது ஒரு உருவத்தைத் தொடர்ந்து மனத்தில் நினைப்பது.

இதற்கு யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாகாரம், தாரணை, த்யானம், ஸமாதி என்று எட்டு படிகள் உண்டு.

தன் சக்திக்கேற்ப வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தல், தன் வர்ணாஸ்ரமத்திற்கு ஒவ்வாத கர்மங்களைத் தவிர்த்தல், இறையருளால் கிடைத்ததைக் கொண்டு மகிழ்தல், சான்றோர்களின் திருவடியை அண்டி நிற்றல், அறம், பொருள், இன்பம் இவற்றைப் பெரிதாக எண்ணி அவற்றிற்காகப் பெருமுயற்சி கொள்ளாதிருத்தல், (அதாவது உலகியல் சுகங்களிலேயே எப்போதும் உழலாமை), முக்திநெறிக்கு அழைத்துச் செல்லும்‌ செயல்களில் ஈடுபாடு, மிகத் தூய்மையான உணவு ஏற்றல், (இரண்டு பாகம் அன்னம், ஒரு பாகம்‌நீர், ஒரு பா‌கம் காற்று உலாவ இடம்), மக்கள் நடமாட்டம்‌ அதிகமற்ற பாதுகாப்பான இடத்தில் தனித்திருத்தல், அஹிம்சை, சத்தியத்தையே பேசுதல், தேவைக்குமேல் பொருள் சேர்க்காதிருத்தல், புலனடக்கத்துடன் ப்ரும்மசர்ய விரதம் ஏற்றல், அறநெறிகளைக் கடைப்பிடிக்கும்போது நேரும் துன்பங்களைப் பொறுத்தல், அறநெறி நூல்களைக் கற்றல், இறையைப் பூஜித்தல் ஆகியவை யமம் மற்றும் நியமத்தில் அடங்கும்.


தூய்மையான ஓரிடத்தில் ஆசனத்தை அமைத்து, அதில் நெடுநேரம் அமர்ந்திருப்பினும் களைப்பு ஏற்படாமல், உடலில் அசைவுகளற்று நேராக இருக்கும்படி அமரவேண்டும். பின்னர் ப்ராணாயாமம் செய்யப் பழகவேண்டும்.

பூரகம், கும்பகம், ரேசகம் என்ற முறையிலோ, அனுலோமம், ப்ரதிலோமம் என்ற முறையிலோ சுவாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இதனால் சித்தம் ஒருநிலைப்படும். காற்று, தீ இவைகளால் காய்ச்சப்பட்ட தங்கம் சுத்தமாவது போல், சுவாசத்தைத் தன்வயப்படுத்தினால் ரஜோகுணமும் அதன் தீமைகளும் அடங்கி மனம் சுத்தமாகும்.

யோகியானவன் ப்ராணாயாமத்தால், வாதம், பித்தம், கபம் போன்றவைகளின் வேறுபாட்டால் உடலில் ஏற்படும் தீமைகளையும், தாரணையால் பாவங்களையும், ப்ரத்யாகாரத்தினால் உலகியல் விருப்பங்களையும் போக்கிக் கொள்ள வேண்டும்.

த்யானத்தினால் ராக த்வேஷங்களை ஒழித்து இறைவனிடத்தில் நெருங்க வேண்டும்.

பழங்காலத்தில் பெரிய பணக்காரர்கள், பாதுகாப்பிற்காக, வீட்டுச் சுவர்களில் ஆங்காங்கு தங்கம், நகைகளைப் புதைத்து வைப்பார்கள்.

பிற்காலத்தில் வீட்டை மராமத்து செய்வதற்காக சுவற்றில் எங்கு இடித்தாலும், திடீர் திடீரென்று தங்கக்காசுகளும், நகைகளும் கொட்டும்.

அதுபோல், ஸ்ரீ மத் பாகவதத்தில் 18000 ஸ்லோகங்களில் எந்த ஸ்லோகத்தில் கை வைத்தாலும், அதிலிருந்து ஒரு அற்புதமான பக்தி பாவம், நாம மஹிமை, ஸாது மஹிமை, இறைவனைப் பற்றிய ஒரு செய்தி, ப்ரார்த்தனை, ரூப வர்ணனை என்று கொட்டுகிறது.

மீண்டும் மீண்டும் பகவானின் ரூபவர்ணனை ஏராளமான இடங்களில் வருவதால், ஸ்ரீமத்பாகவத பாராயணமும், கதா ச்ரவணமுமே த்யானத்தின் பலனைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீமத்பாகவத்தின் சிறப்பே அதுதான். த்யான யோகத்தின் 6 படிகளைப் பற்றிச் சுருங்கச் சொன்ன கபிலர், த்யானம் செய்யவேண்டிய ரூபத்தை 21 ஸ்லோகங்களில் மிக விரிவாக வர்ணிக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment