||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
விதுர மைத்ரேய ஸம்வாதம் - 13
ஸ்கந்தம் 03
வராஹ அவதாரக் கதையைக் கேட்ட விதுரர், மேலும் ஸ்ரீ ஹரியின் லீலைகளைக் கேட்க விரும்பி, மைத்ரேயரிடம் கேட்டார்.
"முனி ஸ்ரேஷ்டரே, யக்ஞ வராஹ மூர்த்தியினால், ஹிரண்யாக்ஷன் கொல்லப்பட்டான் என்று சொன்னீர்கள். பகவானுக்கும் அவனுக்கும் ஏன் போர் மூண்டது? என்ன காரணம்? விளக்கிக் கூறுங்கள்" என்றார்.
மைத்ரேயர் சொல்லத் துவங்கினார்.
"விதுரரே, உங்கள் கேள்வி மிகவும் ஆழமானது. மனிதர்களின் யம பயத்தை நீக்க வல்ல ஸ்ரீ ஹரியின் அற்புதமான லீலையைக் கேட்கிறீர்கள். ஸ்வாயம்புவ மனுவின் புதல்வரான உத்தான பாதனின் மகன் துருவன் என்பவர் பகவானின் கதைகளைக் கேட்டு, அதன் மகிமையால் யமனின் தலையில் கால் வைத்து ஏறி த்ருவ பதம் பெற்றார்.
இந்தக் கதையை நான் தேவர்களுக்கு ப்ரும்மா கூறினார்.
ஒரு சமயம் கச்யபர், ஸ்ரீமன் நாராயணனை அக்னி ஹோத்ரத்தினால் ஆராதனை செய்து விட்டு தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, தக்ஷ ப்ரஜாபதியின் மகளான திதி என்பவள், தன் கணவரான கச்யபரிடம் காமாத்தினால் சென்று மாலை வேளையில் அவரோடு இன்புற்றிருக்க விரும்பினாள். கச்யபர் அவளைப் பார்த்து, மிகவும் பொறுமையுடன் கூறினார். நீ விரும்பியவாறு செய்கிறேன். ஒருவன் மனைவி மூலம் தான் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பேறுகளைப் பெறுகிறான். அப்படியிருக்க, மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? இல்லறத்தான் மற்ற மூன்று ஆசிரமத்தில் ஒழுகுபவர்களையும் ஆதரித்து, இல்வாழ்வில் விருந்தோம்பல் என்னும் உயர்ந்த கடைமையாற்றி அதன் மூலமே பிறவிக் கடலைக் கடந்து விடுகிறான்.
மனைவி மீது இல்லறக் கடைமைகளைச் சுலபமாக ஏற்றி விட்டு கணவன் நிம்மதியாகத் திரிகிறான். இல்லறத்தான் மனைவியின் துணையோடு, பொறிகளையும் அடக்கி ஆள்கிறான். உன்னைப் போன்ற மனையாள் செய்யும் உதவிக்கு, என்னைப் போன்ற நற்குண சீலர்கள் கூட, எத்தனை பிறவி எடுத்தாலும் கைம்மாறு செய்ய இயலாது. ஆனால், இப்போது மாலை வேளை. மாலை வேளையில் பரமேஸ்வரன், தம் பூத கணங்களோடு நந்தி மேலேறி வலம் வருகிறார். இந்நேரத்தில் கூடுவது தவறு. எனவே, நல்ல முஹூர்த்தம் வரும் வரை சற்று பொறுத்திரு. பரமேஸ்வரன் நமக்கு உறவினர் தானே என்று நினைத்து விடாதே. அவர் மாயைத் திரையைக் கிழித்து அற்ப சுகங்களை வெறுத்தவர். அனைவரும் அவர் புகழைப் பாடுகின்றனர். மிகவும் பெருமை வாய்ந்தவர். என்றாலும், யாராலும் விரும்பத் தகாத வேஷத்தை வேண்டுமென்றே ஏற்றிருக்கிறார். நாய்க்கு இரையாகும் இவ்வுடலை அறிவிலிகள் 'தான்', 'ஆத்மா' என்று எண்ணி, நல்லாடைகள், நறுமணப் பூச்சுக்கள், அணிகலன்கள், பகவான் மற்ற அனைத்து போகப் பொருள்களும் கொண்டு அழகு செய்து கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
அவையெல்லாம் இந்தப் பாம்புகள் போன்றவை என்று வெளிக்காட்டவே பரமேஸ்வரன் பாம்புகளை அணிந்து கொள்கிறார். அவர் ப்ரபஞ்சத்தின் காரணர் ஆவார். (ஹரியும், சிவனும் ஒன்று என்பதாக) அவரது திருவிளையாடல்கள் நம் அறிவுக்கு எட்டாதவை." என்று அழகாக எடுத்துரைத்தார்.
கணவர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேளாமல், பொறிகளின் வசம் ஆட்பட்ட திதி, கச்யபரைப் பிடித்திழுத்தாள். தவறான செயலுக்குத் தம்மையும் பிடிவாதமாய் இழுப்பது கண்டு, கச்யபர் இது விதி வழியென்று நினைத்து, அவள் விருப்பத்திற்கு உட்பட்டார்.
பின்னர் நீராடி, மூச்சையும் பேச்சையும் விடுத்து, தனிமையில் ப்ரும்மத்தை த்யானம் செய்து காயத்ரி ஜபம் செய்யத் துவங்கினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment