About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 March 2024

திவ்ய ப்ரபந்தம் - 101 - பெரியாழ்வார் திருமொழி - 1.8.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 101 - துர்யோதனனை உஷ்ணமாகப் பார்த்தவன்
பெரியாழ்வார் திருமொழி
முதலாம் பத்து - எட்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்

கழல் மன்னர் சூழக்* கதிர் போல் விளங்கி*
எழலுற்று மீண்டே* இருந்து உன்னை நோக்கும்*
சுழலை பெரிது உடைத்* துச்சோதனனை*
அழல விழித்தானே! அச்சோ அச்சோ* 
ஆழி அங்கையனே! அச்சோ அச்சோ!

  • கழல் - வீரக் கழலை அணிந்த
  • மன்னர் - அரசர்கள்
  • சூழ - தன்னைச் சுற்றியிருக்க அவர்கள் நடுவில்
  • கதிர்போல் - ஸூரியன் போல
  • விளங்கி - ப்ரகாசமாயிருந்து 
  • எழல் உற்று - முதலில் எழுந்திருந்து
  • மீண்டு - மறுபடியும்
  • இருந்து - தானெழுந்தது தெரியாதபடி உட்கார்ந்து கொண்டு
  • உன்னை - உன்னை
  • நோக்கும் - பொய்ய ஆஸனம் இடுதல் முதலியவற்றால் கொல்வதாகப் பார்த்த
  • பெரிது - மிகவும் 
  • சுழலை உடை - வஞ்சனையான ஆலோசனையை உடைய
  • துச்சோதனனை - துர்யோதனனை திரு உள்ளத்திலுள்ள சீற்றமெல்லாம் பார்வையிலே தோன்றும்படி
  • அழல விழித்தானே - உஷ்ணமாகப் பார்த்தவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள வேண்டும்!
  • ஆழி - திரு சக்கரத்தை 
  • அம் கையனே - அழகிய கையிலேந்தியவனே! 
  • அச்சோ அச்சோ - என்னை அணைத்துக் கொள்ள மாட்டானோ!

வெற்றிப் பதக்கங்களைச் சூடிய மன்னர்கள், சூரியக் கதிர்கள் போல் துர்யோதனனை சூழ்ந்திருக்க, கண்ணனே! நீ பாண்டவ தூதனாய் அவன் சபைக்குச் சென்றபோது, உன்னுடைய அபரிமிதமான தேஜஸ்ஸால், தன்னை அறியாமல், மரியாதை நிமித்தம் சற்றே எழுந்து நின்று மீண்டும் அகந்தையால் அமர்ந்த துர்யோதனன் உன்னை சூழ்ச்சியுடன் நோக்க, நீயும் அவனை கண்களில் அனல் பொறி பறக்க கோபமாய் பார்த்தாய்! என்னை அணைத்துக் கொள்ள நீ ஓடி வர வேண்டும், உன் அழகிய கையில் சக்ராயுதம் ஏந்தியவனே! அணைத்துக் கொள்ள வர வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment