About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 17 March 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 67

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 12

ஸ்கந்தம் 03

வராக அவதாரம் - 2

ப்ரும்மாவின் மூக்கிலிருந்து கட்டை விரல் அளவிற்கு வெளியே வந்த அந்த வராகம், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மலையளவிற்குப் பெரிதாகி நின்றது. யார் இது என்று எல்லோரும் குழம்பிய வேளையில், ஒரு கர்ஜனை செய்தது. அதைக் கேட்டதும் அனைவர் மனத்திலும் இருந்த பயமும் குழப்பங்களும் நீங்கின.


ப்ரும்மாவும், மற்ற அந்தண ஸ்ரேஷ்டர்களும் மகிழ்ந்து அவரை பகவான் என்று உணர்ந்து, மிகவும் தூய்மையான வேத மந்திரங்களால் துதிக்கலாயினர். வேத ஸ்வரூபமான பகவான் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார். திரும்பவும் கர்ஜித்துக் கொண்டு, விளையாடுவது போல் ப்ரளய நீரில் நுழைந்தார்.தன் வாலை உயரத் தூக்கி ஆகாயத்தில் சுழற்றிக் கொண்டு, பிடறி மயிர்களை உதறிக் கொண்டு குளம்புகளால் மேகக் கூட்டங்களை ச் சிதறடித்தார். மிகவும் கடினமான திருமேனியும், குத்திட்டு நிற்கும் ரோமங்களும், வெண்மையான தெற்றிப் பற்களும், சிவந்த கண்களும் கொண்டு மிகவும் அழகாக விளங்கினார். வேள்வித் திருவுருவாக இருப்பினும், முகர்ந்து பார்த்து பூமியைத் தேடினார். பயங்கரமான தெற்றிப் பற்கள் இருந்தாலும், கண்களில் கருணை வழிய தன்னைத் துதித்த ரிஷிகளைக் கடாக்ஷித்துக் கொண்டு ஜலத்தினுள் நுழைந்தார்.

வஜ்ர மலை போன்று நீரில் யக்ஞ வராஹ மூர்த்தி குதிக்கவும், ஸமுத்திர ராஜனின் வயிறு கிழிக்கப்பட்டது போல் நீரில் பெரிய பிளவு ஏற்பட்டது. இடி போன்று பெரிய சத்தம் கேட்டது. உயரக் கிளம்பிய அலைகளைக் கண்டால், ஸமுத்தி ரராஜன், கைகளைத் தூக்கி, ப்ரபோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறுவது போல் இருந்தது. குளம்புகளால் கத்தி போல் நீரைக் கிழித்துக் கொண்டு, அடி வரை சென்றார். அங்கு ஜீவன்களின் இருப்பிடமான பூமியைக் கண்டார். உடனே, தன் தெற்றிப் பல்லால், அழகாக பூமிப் பந்தைத் தூக்கிக் கொண்டு ரஸா தலத்திலிருந்து மேலெழுந்தார்.

மிக மிக அழகான காட்சி அது. அப்போது, மிகுந்த பராக்ரமம் மிக்க ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் கையில் கதையுடன் அவரை வழி மறித்தான். உடனே, பொங்கிய சீற்றத்துடன், சிங்கம் யானையைக் கொல்வதுபோல் அவ்வசுரனை விளையாட்டாகக் கொன்றார் பகவான். அவனது செங்குருதி பகவானின் உடலிலும், கன்னங்களிலும் படிந்திருந்தது, வெண்மை நிற யானை சேற்றில் விளையாடியது போல் இருந்தது. யானை தந்தத்தினால் தாமரையைத் தாங்கி வருவது போல், தெற்றிப் பற்களால் பூமியைத் தாங்கி வந்தார். முனிவர்களும் ப்ரும்மாவும் இருகரங்களையும் சிரமேற் குவித்து வேத மந்திரங்களால் பகவானைத் துதித்தனர். யக்ஞவராஹத்தின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் விளங்கும் வேள்வியின் அங்கங்களை விரிவாகக் கூறி மிகவும் விரிவாகத் துதி செய்தனர். பலவிதமாக பகவானை அவர்கள் துதி செய்ய, பகவான் அவற்றைக்‌ கேட்டுக் கொண்டே, பூமியை அதனிடத்தில் வைத்து விட்டு மறைந்தார்.

அனைத்து ஜீவன்களின் துன்பங்களையும் களையும் பகவான் ஸ்ரீ ஹரியின் மனம் கவரும் இத்திருவிளையாடலைச் சொல்பவர், கேட்பவர் ஆகியோரிடம் பகவான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். ஒருவர் பகவானை மகிழ்ச்சி கொள்ளச் செய்து விட்டால், அவருக்கு என்ன தான் கிடைக்காது? அவருடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேறெதிலும் விருப்பம் இல்லாதவருக்கு, பகவான் தன்னையே தந்து விடுகிறார். இறைவனது திருவிளையாடல்களைக் கூறும் கதைகள்‌ நம்மைப் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுவிக்கின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment