||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
விதுர மைத்ரேய ஸம்வாதம் - 8
ஸ்கந்தம் 03
விதுரர் காலஸ்வரூபத்தை விளக்கிக் கூறும்படி மைத்ரேயரை வேண்டினார். விதுரரின் கேள்விகளால் பகவானின் அனந்தமான மகிமைகளைச் சொல்லும் பாக்யம் கிடைத்ததை எண்ணி ஆனந்தப் பட்டுக் கொண்டு மைத்ரேயர் பதிலிறுத்தார்.
காலம் என்பது பகவானைப் போலவே ஆதி அந்தமற்றது. உலகின் பொருள்கள் மாறுபாடு அடைவதைக் கொண்டே காலம் அறியப்படுகிறது. காலத்தைக் கருவியாகக் கொண்டு பகவான் தன்னையே எல்லாமாகப் படைக்கிறார். காலத்திற்கும் பகவானைப் போல் எந்த மாறுதலுமில்லை. ஆனால், காலத்திற்காட்பட்ட ஜீவன்களுக்கு இளமை, முதுமை போன்ற மாறுதல்கள் உண்டு. என்றும் பதினாறாக இருக்கும் மார்க்கண்டேயர், ஸுகாசார்யார் போன்றவர்கள் காலத்துக்கு அப்பாற்பட்டு விளங்குவதைப் பார்க்கிறோம். அவர்கள் வரையில் காலமாறுதலே இல்லை.
மேற்கொண்டு, படைப்பைப் பற்றி விளக்க ஆரம்பித்தார் மைத்ரேயர். முதலில் அகில உலகமும் மாயையினால் பகவானிடம் ஒடுங்கி இருந்தது. காலத்திற்கு மாறுதல் இல்லை என்று பார்த்தோம். மறைவதற்கான காலத்தையும், தோற்றத்திற்கான காலத்தையும் பகவான் நிர்ணயிக்கிறான். கால சக்தியைக் கொண்டே திரும்பவும் உலகைப் படைக்கிறான். இவ்வுலகம் இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே தான் இதற்கு முன்பும் இருந்தது. இனி வரப் போகும் ப்ரளயம் முடிந்து மறுபடியும் தோன்றும் போதும் இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியே தான் தோன்றும்.
சுலபமாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் உறங்கும் போது, செயல் பொறிகள் (கை கால்கள்) அனைத்தும் ஓய்கின்றன. அறிவுப் புலன்களும் (உணரும் திறன்கள்) ஓய்கின்றன. மனமும் லயமடைகிறது. அப்போது புற உலகம் தெரிவதில்லை. மனத்திலேயே பல்வேறு விதமான விஷயங்களைக் கனவில் காண்கிறோம். அதற்கு கர்மேந்திரியங்களோ ஞானேந்திரியங்களோ தேவைப்படவில்லை. உறக்கத்தில் இருந்து எழும் போது பத்து புலன்களும் உணர்வு பெறுகின்றன. தூங்குவதற்கு முன் ப்ரபஞ்சம் எப்படி இருந்ததோ அப்படியே காண்கிறோம்.
ஒன்பது விதங்களாகப் படைப்பு நிகழ்கிறது. அதைத் தவிர ப்ராக்ருதம், வைக்ருதம் என்பவை பத்தாவதாகும்.
1. மஹத் தத்வம்: இது ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் மாறுபாடு.
2. அஹங்காரம்: இதிலிருந்து பஞ்ச பூதங்கள், கர்மேந்த்ரியங்கள், ஞானேந்திரியங்கள் ஆகியவை தோன்றுகின்றன.
3. பஞ்ச பூதங்களையும் தோற்றுவிக்கும் பூத ஸூக்ஷ்மங்கள், தன்மாத்திரைகள்
4. பத்து பொறிகளின் படைப்பு
5. ஸாத்வீக அஹங்காரத்தினின்று தோன்றும் பொறி மற்றும் புலன்களின் அதிஷ்டான தேவதைகள்.
6. அவித்யை: இது அனைத்தையும் மறக்கச் செய்வது. இது வரை ப்ராக்ருத ஸ்ருஷ்டிகள்.
7. ப்ரும்ம தேவர் ரஜோ குணத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யும் படைப்புகள். இது முதல் வைக்ருத ஸ்ருஷ்டி ஆகும்.
ப்ரும்மதேவரின் மூவகைப் படைப்புகளில் முதலாவது தாவரங்கள்.
தாவரங்கள் ஆறு வகைப்படும்.
1. வனஸ்பதிகள்: பூக்காமல் காய்க்கின்ற அத்தி, ஆல் போன்ற மரங்கள்
2. ஔஷதிகள்: பூத்துப் பயன் தரும் நெல் முதலியவை
3. கொடிகள்: மரத்தைப் பற்றிக் கொண்டு வளர்பவை
4. த்வக்ஸாரம்: மேல் பட்டைகளில் பலமுடைய மூங்கில் முதலானவை
5. வீருதங்கள்: தரையில் படரும் கொடிகள் பூசணி முதலியவை
6. த்ருமங்கள்: பூத்துக் காய்க்கும் மரங்கள்
8. விலங்குகள்: நிமிர்ந்திராது குறுக்காக வளர்பவை. இவை 28 வகைப்படும். உணவு, தூக்கம், பயம், இனப்பெருக்கம் ஆகிய அறிவுகள் மட்டும் கொண்டவை. முகர்ந்து பார்த்தே வேண்டியதைத் தேடிக் கொள்ளும். நட்போ பகையோ வெகு காலம் நினைவிராது. ஒரு குளம்பு உள்ளவை, இரண்டு குளம்புகள் உள்ளவை, ஐந்து நகங்கள் உள்ள விலங்குகளும், பறவைகளும்
9. மனிதன்: ஒரே விதமான ஸ்ருஷ்டி, மேலிருந்து கீழ்நோக்கி ஆகாரம் செல்லுமாறு படைக்கப்பட்டவர்கள், ரஜோ குணத்தில் பற்றுதல் அதிகம் உள்ளவர்கள், பல்வேறு செயல்களில் ஈடுபடுபவர்கள். இன்ப துன்ப சிந்தனை உள்ளவர்கள். தேவர்களின் படைப்பு முன்பே கூறப்பட்டது. பூத ஸூக்ஷ்மங்கள். அவை எட்டு விதம். தேவர்கள், பித்ருக்கள், அசுரர்கள், கந்தர்வ அப்ஸரஸ்கள், யக்ஷ, அரக்கர்கள், சித்த, சாரண, வித்யாதரர்கள், பூத, ப்ரேத, பிசாசர்கள், கின்னர, கிம்புருஷர்கள் ஆகியவை.
விதுரரே, பகவானின் பத்து விதமான படைப்புகள் பற்றிக் கூறிய மைத்ரேயர், மேற்கொண்டு மன்வந்தரங்களையும், வம்சங்களையும் பற்றிக் கூறத் துவங்கினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment