About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 9 March 2024

ஸ்ரீமத் பாகவத புராணம் - 64

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

விதுர மைத்ரேய ஸம்வாதம் - 9

ஸ்கந்தம் 03

மைத்ரேயர் கால அளவுகளைக் கூறலானார்.

விதுரரே! பரமாணு என்பது மிக நுண்ணிய வடிவம். அதை மேலும் பிரிக்க முடியாது. இது எப்போதும் உள்ளது. அழிவற்றது. இவைகள் ஒன்று சேர்ந்துதான் ஜீவர்களின் அவயவங்கள் தோன்றுகின்றன. சூக்ஷ்மமான பரமாணுக்களின் ஒன்று சேர்ந்து பூமி  முதலியவை ஆகின்றன. அவற்றின் மொத்த  கூட்டமைப்பு 'பரம மஹாந்', (மிகப் பெரியது) எனப்படும். இவற்றிற்கு ப்ரளயம் முதலிய அவஸ்தை வேறுபாடுகளோ, புதியது, பழையது, என்ற கால அளவோ, குடம், துணி போன்ற அமைப்பு வேறுபாடுகளோ இல்லை. புழுதியிலிருந்து  மலை வரை பரமாணுக்களின் கூட்டமைப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இது போலவே காலத்தின் சிறிய பெரிய அளவுகள் உண்டு.


ப்ரபஞ்சத்தின் பரமாணுவைக் கடக்க ஆகும் நேரம் 'பரமாணு காலம்'. இது மிகவும் நுண்ணிய நேரம்.

படைப்பு முதல் ப்ரளயம் வரை உள்ள நீண்ட காலம் ப்ரும்மாவின் ஆயுள் காலம். அதைப் 'பரம மஹாந்' என்பர்.

இரண்டு பரமாணுக்ஜள் சேர்ந்தது ஒரு அணு
மூன்று அணுக்கள் சேர்ந்தது ஒரு 'த்ரஸ ரேணு'
ஜன்னல் வழியே வீட்டில் படரும் சூரிய ஒளியில் பறப்பது போல் காணப்படும் துகள் 'ரேணு'

இம்மாதிரியான மூன்று த்ரஸரேணுக்களைக் கடக்க சூரியன் எடுத்துக் கொள்ளும் நேரம் 'த்ருடி'
100 த்ருடிகள் =  வேதை
3 வேதை = ஒரு லவம்
3 லவங்கள் = ஒரு கண்ணிமைக்கும் நேரம்
3 கண்ணிமைக்கும் நேரங்கள் = ஒரு நொடி
5 நொடிகள் = ஒரு காஷ்டை
15 காஷ்டைகள் = ஒரு லகு
15 லகு = ஒரு நாழிகை
2 நாழிகைகள் = ஒரு முஹூர்த்தம்

பகல் சில சமயம் அதிகமாகவும், சிலசமயம் குறைவாகவும் இருக்கும்.
பகல் இரவு சக்திகளின் முஹூர்த்தங்கள் நீங்கலாக, 
6 அல்லது 7 நாழிகள் = ஒரு ப்ரஹரம்
இதை யாமம் என்றும் கூறுவர்.

ஆறு பலம் எடையுள்ள, இரண்டு சேர் நீர் கொள்ளளவுள்ள ஒரு தாமிரப் பாத்திரத்தின் அடியில்,  இருபது குன்றிமணிகள் எடையுள்ள நான்கு அங்குல தங்கக் கம்பியால் துளையிட்டு அதை நீரில் மிதக்க விடவேண்டும். அந்தப்பாத்திரம் நீர் நிரம்பி முழுவதும் மூழ்க ஆகும் நேரம் ஒரு நாழிகையாகும்.

இரவும் பகலும் ஒவ்வொன்றும் நான்கு யாமங்கள் கொண்டவை.

15 நாள்கள் = ஒரு பக்ஷம்
அது சுக்ல பக்ஷம்(வளர்பிறை)
க்ருஷ்ண பக்ஷம் (தேய்பிறை) என்று இருவகைப்படும்.

2 பக்ஷங்களும் சேர்ந்தது ஒரு மாதம். இது பித்ருக்களுக்கு ஒரு நாள்.
2 மாதங்கள் = ஒரு ருது
6 மாதங்கள் = ஒரு அயனம்
அது உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று இருவகைப்படும்.

சூரியன் ஆகாயத்தில் வடக்கு திசையில் இருந்தால் உத்தராயணம் என்றும் தென் திசையில் இருந்தால் தக்ஷிணாயணம் எனவும் கொள்ள வேண்டும்.

2 அயனங்கள் = ஒரு வருடம்
இது தேவர்களுக்கு ஒரு நாள்
இம்மாதிரி நூறு வருடங்கள் = ஒரு மனிதனின் பூரண ஆயுள்

சூரியன், குருபகவான், ஸாவனம், சந்திரன், நக்ஷத்ரங்கள் ஆகியவற்றின் கதிகளை அனுசரித்து வருடங்கள் ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அனுவத்ஸரம், வத்ஸரம் என்று பெயர் பெறுகின்றன.

12 (சூர்ய) சௌர மாதங்கள்= 1 ஸம் வத்ஸரம் 
குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் 16 மாதங்கள் = பரி வத்ஸரம்

30 நாள்கள் = ஒரு ஸாவன மாதம்
12 ஸாவன மாதங்கள் = ஒரு இடாவத்ஸரம் 
அமாவாசையில் முடிவது சாந்திரமான மாதம்
12 சாந்திரமான மாதங்கள் = ஒரு அனுவத்ஸரம்

சந்திரன் 12 ராசிகளையும் சுற்றி வரும் காலம் நக்ஷத்ர மாதம்
12 நக்ஷத்ர மாதங்கள் = ஒரு வத்ஸரம்

சுக்லபக்ஷ ப்ரதமை அன்று சங்கராந்தி வந்தால், அன்றே சந்திர, ஸௌர மாதங்கள் துவங்கும். அதற்கு ஸம்வத்ஸரம் என்று பெயர். அப்போது ஸூர்யமானத்தில் 6 நாள்கள் அதிகம். 

சந்திரமானத்தில் 6 நாள்கள் குறையும். இந்த 12 நாள்கள் இடைவெளியால் வருடம் முன்பின்னாக முடியும். 5 வருடங்களுக்கு ஒரு முறை 60 நாள்கள், அதாவது இரண்டு மாதங்கள் வித்யாசம் வரும். இவை மல மாதங்கள் என்றழைக்கப்படும்.

இந்த ஐந்து விதமான வருடங்களையும் செயல்படுத்துவது சூரியன். 

மனிதர்களின் ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாள் என்று முன்பே பார்த்தோம்.

க்ருதயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் நான்கும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் = 12,000 தேவ வருடங்கள் அல்லது 43,20,000 மனித வருடங்கள்.

நான்கு யுகங்களுக்கும் முறையே 4000, 3000, 2000, 1000 தேவ வருஷங்கள்.
ஒவ்வொரு யுகத்திற்கும் எத்தனை ஆயிரமோ அத்தனை 200 வருடங்கள் யுக சந்திக்காக சேர்த்துக்கொள்ளப்படும். 

க்ருதயுகம்  = 4000+(4*200)= 4800 தேவ வருஷங்கள்
த்ரேதாயுகம் 3600 தேவ வருஷங்கள்.

துவாபரயுகம் 2400 தேவ வருஷங்கள். கலியுகம் 1200 தேவ வருஷங்கள்

360 மனித வருடம் = ஒரு தேவ வருடம்

எனில், கலியுகம் = 4,32,000 மனித வருடங்கள் 

அதன் இரு மடங்கு 8,64,000 மனித வருடங்கள் = துவாபர யுகம்

மும்மடங்கு  12,96,000 ம. வ. = த்ரேதா யுகம்

நான்கு மடங்கு 17,28,000 ம. வ = க்ருத யுகம்

மூவுலகங்களுக்கு வெளியே இருக்கும் மஹர் லோகம் முதல் ஸத்ய லோகம் வரை 
1000 சதுர் யுகங்கள் = ஒரு பகல்
1000 சதுர் யுகங்கள் ஒரு இரவு

அது போல் நூறு வருடங்கள் = ப்ரும்மாவின் ஆயுள். அவரது 50 வருடங்கள் ஒரு பரார்த்தம்

14 மன்வன்தரங்கள் = 1000 சதுர்யுகம்

ஒரு மனு ஆட்சி செய்யும் காலம் = 71.4 சதுர்யுகங்கள் =  மன்வந்தரம்

பரமாணு முதல் இரண்டு பரார்த்தம் வரை நீளும் காலசக்தியும் தேகத்தின் மீது பற்றுள்ளவர்களையே கட்டுப்படுத்துகிறது. பகவானைக் கட்டுப்படுத்த இயலாது

இதன் பின் ப்ரும்மாண்ட கோசத்தை விளக்குகிறார் விதுரர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment