About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 9 March 2024

108 திவ்ய தேசங்கள் - 029 - திரு அரிமேய விண்ணகரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

029. திரு அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்)
இருபத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்

ஸ்ரீ குடமாடுகூத்தன் பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீ அம்ருதகடவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ குடமாடுகூத்தன் பெருமாள் 
திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர்: குடமாடு கூத்தன்
  • பெருமாள் உற்சவர்: சதுர்புஜ கோபாலன்
  • தாயார் மூலவர்: அம்ருதகடவல்லி
  • திருமுகமண்டலம் திசை: கிழக்கு
  • திருக்கோலம்: வீற்றிருந்த 
  • புஷ்கரிணி/தீர்த்தம்: கோடி, அமிர்த
  • விமானம்: உச்ச ச்ருங்க
  • ஸ்தல விருக்ஷம்: பலாச
  • ப்ரத்யக்ஷம்: உதங்க மஹரிஷி
  • ஆகமம்: பாஞ்சராத்ரம்
  • ஸம்ப்ரதாயம்: தென் கலை
  • மங்களாஸாஸநம்: 1 ஆழ்வார்
  • பாசுரங்கள்: 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

எம்பெருமான் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தரையில் வெண்ணெய் பானையை வைத்து அதன் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரை பானையுடன் தரிசனம் செய்தால் குடும்பம் வெண்ணெய் போல மகிழ்ச்சி பொங்கும் படியாக சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. குடத்துடன் ஆடிக் கொண்டு வந்தவர் என்பதால் இவரை "குடமாடு கூத்தன்' என்கின்றனர். கோவர்த்தன மலையை குடையாக பிடித்துக் கொண்டு மக்களைக் காப்பாற்றிய கண்ணன் என்பதாலும் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கருதலாம். உற்சவர் சதுர் புஜ கோபாலன் என்ற பெயரில் அருளுகிறார். திருமங்கையாழ்வார் இவரை அசுரர்களை அழித்து அமுதம் எடுத்தது, மகாபலியை அடக்கியது, ராவணனை ஸம்ஹாரம் செய்தது என அவரது புகழ் பாடி பகைவர்களை அழித்து நல்வழி காட்டுபவர் என்று சொல்லி மங்களாஸாஸநம் செய்துள்ளார்.

திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. தை மாதத்தில் நடக்கும் கருடசேவை பிரசித்தி பெற்ற உற்சவமாகும். அரி (விஷ்ணு) மேவியிருக்கும் (தங்கி) இடம் என்பதால் இவ்வூருக்கு "அரியமேய விண்ணகரம்' என்றொரு பெயரும் உள்ளது. இங்கு கொடி மரம் கிடையாது. பீடம் படி மீது ஏறிச்சென்று வணங்கும்படி பெரியதாக இருக்கிறது. பக்தி எனும் படிகளை ஏறிச் சென்றால் இறைவனை அடையலாம் எனும் உட்பொருளை இந்த பீடம் குறிக்கிறதாம். 

உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இள வயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார். குரு பத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார். அதனை எடுத்துக் கொண்டு குரு குலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக் கொண்டே பசுக்களை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத் தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக் கொண்டார். கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்து விட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக் கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச் செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார். அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக் காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார். கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக் காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லி விட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார். நடந்ததை தன் ஞான திருஷ்டியால் உணர்ந்த வைதர், "உனது குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக' சொன்னார். மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார். தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி எம்பெருமானை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment